search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    விரிசல் ஏற்பட்டு 4 ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாத திருவாரூர் தியாகராஜர் கோவில் நடைபாதை மண்டபம்
    X

    விரிசல் ஏற்பட்டதால் அந்த மண்டப வழிப்பாதை அடைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

    விரிசல் ஏற்பட்டு 4 ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாத திருவாரூர் தியாகராஜர் கோவில் நடைபாதை மண்டபம்

    • கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த நடைபாதை மண்டப பாதையை பயன்படுத்தி வந்தனர்.
    • மண்டபம் விரிசல் ஏற்பட்டதையடுத்து இந்த வழிபாதை அடைக்கப்பட்டது.

    உலக புகழ் பெற்ற தியாகராஜர் கோவில் சர்வதோஷ பரிகார தலமாகவும், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் விளங்கிறது. இந்த கோவிலின் ஆழித்தேர், ஆசியாவிலேயே மிகப்பெரியது. தோன்றிய வரலாற்றை கணக்கிட முடியாத அளவு தொன்மை வாய்ந்த கோவிலாக விளங்குகிறது.

    ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை பெரிய கோவில், திருவாரூர் தியாகராஜர் கோவிலை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது.

    இந்த சிறப்புக்குரிய கோவிலின் மேற்கு கோபுர வாசலில் குளமே ஆலயமாக கமலாலய குளம் அமைந்துள்ளது. இந்த மேற்கு கோபுர வாசலில் நுழைவு பகுதியில் கோவில் நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகம் முன்பு பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் நடைபாதையில் மண்டபம் அமைந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த நடைபாதை மண்டப பாதையை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இந்த மண்டபத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டது. கோவில் நடைபாதை மண்டபத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பழமை வாய்ந்த கட்டிடம் என்பதால் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டது.

    தொல்லியல் துறை அதிகாரிகளின் பரிந்துரையின் படி மண்டபத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஆனால் விரிசல் ஏற்பட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையில் அதை சீரமைக்க இதுவரையில் எந்தவித பணிகளும் நடைபெறாமல் உள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்து உள்ளனர்.

    மண்டபம் விரிசல் ஏற்பட்டதையடுத்து இந்த வழிபாதை அடைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் நேர் வழியாக கோவிலுக்கு செல்லாமல் அருகில் உள்ள வழிப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

    விரிசல் ஏற்பட்ட மண்டபத்தில், மழைக்காலங்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு ஒழுகி வருகிறது. அந்த காலத்தில் இயற்கை மூலப்பொருட்களை கொண்டு கருங்கல்லால் கட்டப்பட்ட மண்டபம் நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து வருகிறது.

    விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ளதால் மண்டபம் மேலும் பலவீனப்பட்டு ஏதேனும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு கட்டிடம் வலுவாக உள்ளதா என்பதை ஆய்வு செய்வதுடன் விரிசல் ஏற்பட்ட பகுதியை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×