என் மலர்
வழிபாடு
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
- 10-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
- தேரோட்டம் 12-ந்தேதி நடக்கிறது.
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 9 மணி அளவில் சிறப்பு பூஜைகளுக்கு பின் கோவிலின் கொடி மரத்தில் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அப்போது சவுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் சமேதமாக எழுந்தருளி அருள்பாலித்தனர். விழாவில் தாடிக்கொம்பு ஊர் நாட்டாமைகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சூரிய பிரபை மண்டகப்படி நடைபெற்றது.
10-ந்தேதி சவுந்தரராஜ பெருமாளுக்கும், சவுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாளுக்கும் மாலை 6.30 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து இரவு பூப்பல்லக்கில் எழுந்தருளி சாமி வீதி உலா வருகிறார். 11-ந்தேதி இரவு குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 12-ந்தேதி மாலை 4 மணி அளவில் நடக்கிறது.
தேரோட்டத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கலெக்டர் விசாகன் உள்பட பலர் வடம் பிடித்து தொடங்கி வைக்கின்றனர். 13-ந்தேதி காலை தீர்த்தவாரியும், 14-ந்தேதி மாலையில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் சுரேஷ், இணை ஆணையர் பாரதி, செயல் அலுவலர் முருகன், கோவில் பட்டாச்சாரியார்கள் வெங்கட்ராமன், ராமமூர்த்தி, ஜெகநாதன், ரமேஷ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.