என் மலர்
வழிபாடு
திருச்செங்கோட்டில், 3-வது நாளில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் நிலையை அடைந்தது
- வைகாசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் கடந்த 3 நாட்களாக நடந்தது.
- இன்று (வியாழக்கிழமை) வசந்த உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வர் கோவில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினந்தோறும் சாமிக்கு பல்வேறு பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் கடந்த 3 நாட்களாக நடந்தது. 3-வது நாளான நேற்று தேர் வடக்கு ரதவீதி, கிழக்கு ரத வீதியில் சென்று நிலையை அடைந்தது.
3-வது நாளில் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஈரோடு ரமேஷ், நாமக்கல் உதவி ஆணையர் ரமேஷ், திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு, துணை தலைவர் கார்த்திகேயன், நகராட்சி ஆணையர் கணேசன், கோவில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ரமணி காந்தன் உள்பட ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதனை தொடர்ந்து மாலை ஆதிகேசவ பெருமாள் தேரோட்டம் தொடங்கி தேர் நிலையை அடைந்தது. கடந்த 4-ந் தேதி தொடங்கிய விழாவில் நேற்று 12-ம் நாள் திருவிழாவாக தேரோட்டம் நடைபெற்று தேர்நிலையை அடைந்தது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரமணி செய்திருந்தார். விழாவில் 13-வது நாளாக இன்று (வியாழக்கிழமை) வசந்த உற்சவம் நிகழ்ச்சியும், நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவபெருமாள் பரிவார மூர்த்திகளுடன் கைலாசநாதர் கோவிலில் இருந்து 4 கால் மண்டபத்தில் ஊஞ்சலாடி சாமி அதிகாலை திருமலைக்கு எழுந்தருள உள்ளார்.