என் மலர்
வழிபாடு
திருச்சியில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சியில் நடராஜர்-அம்பாள் கைகளில் எரியும் தீப்பிழம்புடன் தோன்றிய அதிசய ஜோதி
- திருவாசகம் என்பது தமிழில் பாடப்பெற்ற ஒரு பக்தி நூலாகும்.
- இறைவன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்பார்கள்.
திருவாசகம் என்பது தமிழில் பாடப்பெற்ற ஒரு பக்தி நூலாகும். இறைவன் மீதான துதிப்பாடல்களை மாணிக்கவாசகர் உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்காகவும் இறைவனிடம் அழுதும், தொழுதும் பாடியதாகும்.
இதனை குறிப்பிட்ட நாட்களில் சிவபக்தர்கள் கோவில்களிலும், வீடுகளில் பாடி இறைவனை வழிபடுவார்கள். அப்போது நடராஜர், அம்பாள் படத்தை முன்வைத்து, அதற்கு பூஜை பொருட்களை படையலிட்டு, குத்துவிளக்கு ஏற்றியும், சாம்பிராணி, பத்தி எரியவிட்டும் இறைவனை வேண்டி பாடல்களை பாடுவார்கள்.
இதில் ஆண், பெண் பேதமின்றி குறிப்பாக சிவதீட்சை பெற்றவர்கள், சிவனடியார்கள் அதிக அளவில் பங்கேற்பார்கள். திருச்சி உறையூர் பகுதியில் எம்பிரான் செந்தமிழ் புனிதர் பேரவை என்ற பெயரில் திருவாசகம் முற்றோதல் குழுவை அதே பகுதியைச் சேர்ந்த உமாபதி என்பவர் நடத்தி வருகிறார். இவரது தலைமையில் ஒவ்வொரு மாதமும் 4-வது ஞாயிற்றுக்கிழமை அன்று சிவ பக்தர்களை கொண்டு திருவாசகம் முற்றோதல் நடைபெறும்.
அந்த வகையில் திருச்சி மாநகர பகுதியான எடமலைப்பட்டிபுதூர் இந்திராநகரை சேர்ந்த செல்வராணி என்பவர், தனது குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகவும், சுப நிகழ்ச்சிகள் தொடர்ந்து தள்ளிப்போய் வருவதாகவும் கூறியுள்ளார். இதனை போக்க தனது வீட்டில் திருவாசகம் முற்றோதல் நடத்த வேண்டும் என்று கூறி அழைத்துள்ளார்.
அதன்பேரில் கடந்த வாரம் செல்வராணி வீட்டில் திருவாசகம் முற்றோதல் நடந்தது. இதில் கலந்துகொள்ள வருகை தந்த 50-க்கும் மேற்பட்ட சிவபக்தர்களுக்கு முதலில் பாதபூஜை நடத்தப்பட்டது. பின்னர் மாயக்கர் பூஜை எனப்படும் தீப, தூபம் காட்டி பூஜை நடந்தது. தொடர்ந்து திருவாசகம் பாடல்கள் பாடப்பட்டன.
இதில் அதே பகுதியை சேர்ந்த திரளான ஆண், பெண் பக்தர்கள் கலந்துகொண்டு மெய்மறந்து திருவாசக பாடல்களை பாடினார்கள். மாணிக்க வாசகரின் அச்சோப்பதிகம் பாடல் பாடப்பட்டது. அதில் கடைசி பாடலான செம்மை நலம் அறியாத பாடலை பக்தர்கள் பரவசத்துடன் மனமுருகி பாடிக்கொண்டிருந்தனர்.
இதற்கிடையே 46 முதல் 50-வது பாடலை பாடிக்கொண்டிருந்தபோது யாரும் எதிர்பாராத விதத்தில் பக்தர்களுக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த நடராஜர் படத்தில் அவரது இடது கையில் முதலில் லேசான ஒரு ஒளி வந்தது.
அடுத்த சில விநாடிகளில் அந்த ஒளியே எரியும் தீப்பிழம்பாக ஜோதியுடன் ஜொலித்தது. இதைப்பார்த்த பக்தர்கள் பரவசத்தில் நடராஜரே என்று ஓங்கி குரல் எழுப்பி ஆனந்த கண்ணீருடன் எழுந்து நடனமாட தொடங்கினர். வயது முதிர்ந்தோர் பக்தி பெருக்கில் கைதட்டி அப்பா, ஈஸ்வரா, நடராஜா என்று வழிபட்டனர். அந்த அதிசய ஜோதி சுமார் 4 நிமிடங்கள் வரைநீடித்தது.
அதேபோல் 51-வது பாடலான அம்மை எனக்கு அருளியவாறு என்ற கடைசி வரியை பாடும்போது, அதே நடராஜர் படத்தில் உள்ள அம்பாளின் வலது கையில் இருக்கும் தாமரையிலும் அந்த ஜோதி மீண்டும் தெரிந்தது. ஆனாலும் அந்த தீப்பிழம்பால் நடராஜர் படத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதுவே அதிசயமாக பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து உமாபதி கூறுகையில், இறைவன் திருவருளால் எடமலைப்பட்டி புதூரில் செல்வராணி இல்லத்தில் நடைபெற்ற திருவாசகம் முற்றோதுதல் நிகழ்வில் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
திருவாசகம் முற்றோதலின் திருப்படை ஆட்சி பாடிக்கொண்டு இருக்கும் பொழுது ஆனந்தமா நடராஜ பெருமானின் திருமேனியில் அனல் ஏந்திய இடது கையில் அனல் சுடர்விட்டு ஜோதியாய் எரியும் அதிசய காட்சியை கண்டோம். அதனை கண்ட அனைத்து அடியார்களும் ஆரவாரத்தோடு ஆடிப்பாடி கண்ணீர் மல்க தரிசனம் செய்தார்கள்.
அருளாளர்கள் உடைய வாக்கு நடராஜ பெருமான் அனலேந்தி ஆடுவதுஎன்பது மெய் அடியார்களுடைய வினையை பொசுக்குவதற்காக அனலேந்தி ஆடுகின்றார் என்று கூறுவார்கள். திரு நாவுக்கரசு பெருந்தகையாரும் தில்லை பதிகத்தில் இறைவன் திருமுன்பு சிற்றம்பலத்தே அதிசயம் போல நின்று அனல் ஏறி ஆடுமாரே என்று பாடியுள்ளார்.️
இந்தத் திருவாசகம் முற்றோதலில் பெருமானே எங்களுக்கு அனல் ஏந்தி காட்சி தந்தார். அதை நேரில் பார்க்கும் பொழுது பல பிறவிகளில் செய்த நல் தவப்பயனாக கருதி வணங்கினோம். அதன் பிறகு நிறைவு பதிகமான 51 ஆவது அச்சோபதிகம் பாடிய பொழுது அம்மை எனக்கு அருளியவாறு என்கின்ற கடைசி வரியில் அம்மையினுடைய வலக்கையில் இருக்கும் தாமரையில் அந்த அனல் உதித்தது. எல்லா அடியார்களும் அந்தஅனல் ஜோதியை கண்ட பிறகு அம்மையினுடைய அருள் பரிபூரணமாக கிடைத்தது என்று பரவசமடைந்தனர்.
சிவகாமசுந்தரி அன்னை உடனுறைகின்ற ஆனந்தமாநடராஜ பெருமான் பரிபூரண திருவருளை அந்த கண்கொள்ளா அற்புத காட்சியை பெருமான் இந்த திருவாசக முற்றோதலில் நடத்தி அருள் செய்தார் என்றார்.
இறைவன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்பார்கள். அதனை மெய்ப்பிக்கும் வகையில் நடராஜர் படத்தில் தோன்றிய அதிசய தீப்பிழம்பான ஜோதியாக காட்சி அளித்துள்ளார் என்று திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்களும் பரவசத்துடன் கூறினர்.