என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று தங்கத்தேரோட்டம் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று தங்கத்தேரோட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/05/05/1876332-thiruchanur.webp)
பத்மாவதி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தபோது எடுத்தபடம்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று தங்கத்தேரோட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- திருக்கல்யாணம், சஹஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டது.
- வசந்தோற்சவம் கோலாகலமாகத் தொடங்கியது.
வசந்த காலத்தில் சூரியன் பிரகாசமாக இருக்கும். சூரியக் கதிர்களின் வெப்பத்தால் உயிர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றன. உலக அன்னையான மற்றும் பூமிதேவியின் அம்சமான திருச்சானூர் பத்மாவதி தாயாரை வழிபடுவதால் உடல் மற்றும் மன உபாதைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சூரிய வெப்பத்தில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக பத்மாவதி தாயாருக்கு ஆண்டு தோறும் வசந்தோற்சவம் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான வசந்தோற்சவம் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கோலாகலமாகத் தொடங்கியது. முதல் நாளான நேற்று அதிகாலை சுப்ரபாதத்தில் தாயாரை துயிலெழுப்பி சஹஸ்ர நாமார்ச்சனை, மதியம் 2.30 மணிக்கு கோவிலில் இருந்து சுக்கிர வார தோட்டத்துக்கு உற்சவர் பத்மாவதி தாயாரை மேள தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
அங்கு மதியம் 2.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்து, பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து மாலை அன்னமாச்சாரியார் திட்டத்தின் கீழ் ஆன்மிக இசை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 7.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வசந்தோற்சவத்தையொட்டி நேற்று கோவிலில் நடக்க இருந்த திருக்கல்யாணம், சஹஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டது. வசந்தோற்சவத்தின் 2-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) கோவிலின் நான்கு மாடவீதிகளில் தங்கத்தேரோட்டம் நடக்கிறது.