என் மலர்
வழிபாடு
- திருச்செந்தூர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்டவர்களை படத்தில் காணலாம்.
- உவரி கடற்கரையில் தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்.
மகாளய அமாவாசை: திருச்செந்தூர் கடற்கரை-நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள்

- இன்று பெரும்பாலானோர் திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர்.
- முன்னோர்கள் விரும்பி சாப்பிட்ட பொருட்களை படையலாக படைத்து வழிபட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வருகிற மகாளய அமாவாசை தினத்தில் இந்துக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
அதன்படி மகாளய அமாவாசை தினமான இன்று பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மாவட்டத்தை பொறுத்தவரை பாபநாசம் படித்துறையில் இருந்து தொடங்கி தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு குடும்பத்துடன் சென்று தர்ப்பணம் செய்து எள்ளும், நீரும் இறைத்தனர்.
இதேபோல் கடற்கரை பகுதிகளிலும் இன்று பெரும்பாலானோர் திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர். புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க பொதுமக்கள் கடலில் எள்ளை கரைத்து புனித நீராடினர். சிவந்திபுரம் கஸ்பா கல்யாணிதுறை பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சிலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
நெல்லை மாநகர பகுதியில் டவுன் குறுக்குத்துறை முருகன் கோவில், இசக்கி அம்மன் கோவில் படித்துறைகள், வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறை ஆகிய பகுதிகள் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் திரண்டு வந்து தர்ப்பணம் கொடுத்தனர்.
இதனையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரை படித்துறை மற்றும் மாவட்டங்களில் கடற்கரை பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சிலர் தங்களது வீடுகளிலேயே முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தினர். முன்னோர்கள் விரும்பி சாப்பிட்ட பொருட்களை படையலாக படைத்து வழிபட்டனர்.
நெல்லை அருகே உள்ள அருகன்குளம் கோசாலை ஜடாயுத்துறை படித்துறையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் அதிகாலையில் பொதுமக்கள் குளித்துவிட்டு தாங்களாகவே ஆற்றில் எள் தூவி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர்.
பின்னர் அவர்கள் அங்குள்ள விநாயகர் கோவிலிலும், ஜடாயு தீர்த்தம் லட்சுமிநாராயணர் கோவிலிலும் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றிலும் பொதுமக்கள் குளித்துவிட்டு தர்ப்பணம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடி, தை அமாவாசைகளில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் இந்த நாளில் தர்ப்பணம் கொடுத்தனர். திருச்செந்தூர் கடற்கரையில் புனித நீராடுவதற்கு இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் கடற்கரையில் அமர்ந்து புரோகிதர்களின் வேத மந்திரங்கள் முழங்க தர்ப்பணம் செய்தனர்.
பின்னர் கடலில் எள்ளை கரைத்தனர். பெரும்பாலானோர் தர்ப்பணத்தை முடித்துவிட்டு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று வழிபட்டனர். இன்று விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் அருவிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் வந்திருந்தனர். மிதமாக கொட்டிய தண்ணீரில் புனித நீராடிய அவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு சென்றனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.