என் மலர்
வழிபாடு
திருச்செந்தூர் கோவில் யானை வெள்ளை நிறத்தில் வீதி உலா
- சிவபெருமான் ஐராவதம் (வெள்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம்.
- விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கைலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் (வெள்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம்.
இதனை நினைவுகூரும் வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று மாலையில் தெய்வானை யானையின் உடல் முழுவதும் அரிசி மாவு மற்றும் திருநீறு பூசப்பட்டது.
பின்னர் கோவிலில் இருந்து வெள்ளை நிறத்தில் தெய்வானை யானையும், தங்க சப்பரத்தில் எழுந்தருளிய சுந்தரமூர்த்தி நாயனாரும் சன்னதி தெரு வழியாக எட்டு வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து, பின்னர் மீண்டும் கோவிலுக்கு சென்றனர்.
தொடர்ந்து கோவிலில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான் பெருமானும் தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளி, வெள்ளை நிற யானையின் பின்னால் உள்பிரகாரத்தில் உலா வந்து, மீண்டும் 108 மகாதேவர் சன்னதி முன்பு வந்தடைந்தனர். தொடர்ந்து அங்கு வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஆடி சுவாதி நட்சத்திர தினத்தில் திருநீறு பூசிய தெய்வானை யானையும், சுந்தரமூர்த்தி நாயனாரும் கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்தனர். தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளை நிறத்தில் தெய்வானை யானையும், சுந்தரமூர்த்தி நாயனாரும் வீதி உலா சென்றதை திரளான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.