என் மலர்
வழிபாடு
கல்பவிருட்ச வாகனத்தில் ஏழுமலையான் பவனி: திருப்பதியில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் தரிசனம்
- இன்று பைக்குகளில் திருமலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கருட சேவை நாளை இரவு நடைபெறுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.
பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான நேற்று காலை சிம்ம வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட விதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று இரவு முத்து பந்தல் வாகன ஊர்வலம் நடந்தது.
இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் மாட வீதிகளில் பவனி வந்தார்.
இன்று அதிகாலை 4 மணி முதல் திருப்பதியில் மழை பெய்து வருகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மழையில் நனைந்தபடி மாட வீதியில் காத்திருந்து சாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை கடும் அவதி அடைந்தனர்.
சாமி வீதி உலாவின் போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலை குழுவினர் தங்களது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை செய்து அசத்தி வந்தனர்.
இன்று மாலை ஏழுமலையான் சர்வபூபால வாகனத்திலும், நாளை சனிக்கிழமை காலை மோகினி வாகன சேவையும் நடைபெறுகிறது.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை நாளை இரவு நடைபெறுகிறது. ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கருட சேவையையொட்டி இன்று காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிய தொடங்கி உள்ளனர்.
திருமலையில் பிரம்மோற்சவ விழாவையொட்டி 20 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே தேவஸ்தானம் அனுமதி வழங்கி உள்ளது. கூடுதலாக வரும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பதியில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று மதியம் 2 மணி முதல் நாளை இரவு வரை பைக்குகள் திருமலைக்குச் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 61,879 பேர் தரிசனம் செய்தனர். 24,634 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.1.82 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.