என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![திருப்பூர் பாரப்பாளையம் பழனிஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம் திருப்பூர் பாரப்பாளையம் பழனிஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்](https://media.maalaimalar.com/h-upload/2023/07/07/1910905-tirupur-palani.webp)
திருப்பூர் பாரப்பாளையம் பழனிஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பூர் மண்ணரையை அடுத்த பாரப்பாளையத்தில் பழமை வாய்ந்த, மிகவும்பிரசித்தி பெற்ற பழனி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு, கும்பாபிஷேக விழா நடத்த கோவில் கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர்.
இதன்படி திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேக விழா கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து கோவிலில் தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று காலை 5.30 மணிக்கு கணபதி வழிபாடு மற்றும் 6-ம் கால பூஜையுடன் தொடங்கியது.
9 மணிக்கு யாத்ரா தானம், கலசங்கள் புறப்பாடு, அனைத்து கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றுதல் ஆகியவை நடைபெற்றது. காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் பழனி ஆண்டவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
அப்போது பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா... என்ற கோஷம் முழங்க சாமிதரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
காலை 11.30 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜையும், மாலை 6.30 மணிக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் அரசியல், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பக்தர்கள், ஊர் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி கமிட்டி நிர்வாகிகள், விழாக்குழுவினர் மற்றும் பாரப்பாளையம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.