search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனியில் இன்று தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    பழனியில் இன்று தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • திருவிழாக்களிலேயே தைப்பூசம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
    • பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பினர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களிலேயே தைப்பூசம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இத்திருவிழாவின் சிறப்பு அம்சமே பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வந்து முருகபெருமானை தரிசனம் செய்து செல்வதுதான்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜையுடன் கொடியேற்றம் நடைபெற்றது.

    வேல், மயில், சேவல் உருவம் பொறித்த மஞ்சள் நிறக்கொடி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வரப்பட்டது. அதன்பின்பு மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் தைப்பூச திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பினர்.

    கொடியேற்றத்தை முன்னிட்டு வள்ளிதெய்வானை சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    10 நாட்கள் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் தினமும் சுவாமி ரத வீதிகளில் தங்க மயில், வெள்ளி மயில், ஆட்டு கிடா, காமதேனு, தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். 6-ம் நாளான வருகிற 10ந் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறும்.

    அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் மணக்கோலத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி வெள்ளி ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசத்தே ரோட்டம் வருகிற 11ந் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 5 மணிக்கு மேல் சண்முகர் நதிக்கு எழுந்தருளலும், காலை 11.15 மணிக்கு மேல் தேரேற்றமும், மாலை 4.45 மணிக்கு மேல் தேரோட்டமும் நடைபெறும்.

    ரத வீதிகளில் வெள்ளி தெய்வானை சதேம முத்துக்குமார சாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 14ந் தேதி இரவு 7 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடைபெறும். அன்று இரவு 11 மணிக்கு மேல் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.

    தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு தற்போதே பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வரும் பாதையில் குடிநீர், சுகாதாரம், மருத்துவ வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தினந்தோறும் 20 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் இன்று முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பழனி கோவிலில் நடைபெறும் தைப்பூசத்திரு விழாவை முன்னிட்டு பழனி-திண்டுக்கல் சாலையில் ஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பர் கோவில் எதிர்புறம் உள்ள காவடி மண்டபத்தில் தினமும் 7 ஆயிரம் பேருக்கும், தாராபுரம் சாலையில் உள்ள கொங்கூர் காவடி மண்டபத்தில் 3 ஆயிரம் பக்தர்களுக்கும் திருவிழா நடைபெறும் 10 நாட்களும் ரூ.70 லட்சம் செலவில் அன்னதானம் வழங்கப்படும்.

    மேலும் தைப்பூசம், பங்குனிஉத்திரம் திருவிழாக்களின் போது 10 நாட்களும் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பக்தர்களுக்கு ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் 4 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு தைப்பூசதிரு விழாவை முன்னிட்டு இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×