என் மலர்
வழிபாடு

திருப்பதி இணையதளத்தில் வெளியிட்ட ஒரு மணிநேரத்துக்குள் 5 லட்சம் ரூ.300 டிக்கெட்டுகள் முன்பதிவு
- டிசம்பர் மாதம் சாமி தரிசனம் செய்ய டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
- டிசம்பர் 31-ந்தேதிக்கான ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடவில்லை.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நேற்று ஆன்லைன் மூலம் ரூ.300 சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்டுகளை காலை 10 மணிக்கு வெளியிட்டனர்.
ஏற்கெனவே இதுகுறித்த அறிவிப்புகள் வெளி வந்ததால், 10 மணிக்கு தயாராக இருந்த பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசனத்தை விரைந்து முன்பதிவு செய்துள்ளனர்.
இதனால் 40 நிமிடங்களிலேயே டிசம்பர் மாதத்தில் உள்ள 31 நாட்களுக்கான அனைத்து சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும் தீர்ந்து போனது. இதனால் பல பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தொடக்கம் முதலே முன்பதிவு செய்ய தொடங்கினாலும், அனைவரும் ஒரே சமயத்தில் முன்பதிவு செய்வதால் 'சர்வர்' பிரச்சினையால் பலருக்கு டிக்கெட் கிடைக்க வில்லை என மனவருத்தத்துடன் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை மாதத்தையொட்டி நாளை திருமலையில் கோகார்பம் அணை அருகில் உள்ள பார்வேடு மண்டபத்தில் கார்த்திகை வனபோஜனம் நிகழ்ச்சி நடக்கிறது.
இதையொட்டி நாளை காலை 8.30 மணிக்கு உற்சவர் ஏழுமலையான் கோவிலில் இருந்து சிறிய கஜ வாகனத்திலும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி பல்லக்கிலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மேல தாளம், மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலில் இருந்து ஊர்வலமாக பார்வேடு மண்டபத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
அங்கு பகல் 11 மணியிலிருந்து மதியம் 12 மணிக்குள் ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.மதியம் 1 மணியிலிருந்து 2 மணி வரை கார்த்திகை வனபோஜனம் நிகழ்ச்சி நடக்கிறது.
திருப்பதியில் நேற்று 57, 104 பேர் தரிசனம் செய்தனர். 32 351 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.66 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.