என் மலர்
வழிபாடு
சர்வ மங்களம் தரும் துளசி
- சங்கசூடனை யாராலும் வெல்ல முடியவில்லை.
- கற்புக்கரசி கணவன் சொல்லை மீறி எந்த செயலும் செய்யாதவள்.
முன்னொரு காலத்தில் சங்கசூடன் என்னும் ஓர் அசுரன் இருந்தான். அவன் அருந்தவம் பல புரிந்து வரங்கள் பல பெற்றிருந்தான். அந்த வர பலத்தால் அவன் பல கொடுமைகளை செய்து வந்தான். குழந்தைகளை மிதித்தும். குணசீலர்களை கொடுமை படுத்தியும், யாகங்களை சிதைத்தும், பெண்களின் கர்ப்பை சூறையாடியும் களியாட்டம் போட்டு வந்தான்.
அவனது கொடுமைகளை தாங்க முடியாமல் மண்ணவரும், விண்ணவரும்பெரும் துயரம் அடைந்தனர். சங்கசூடனை அழிக்க வழிதெரியாமல் திணறினார்கள். கடைசியாக அவர்கள் மும்மூர்த்திகளிடம் சென்று தங்கள் குறைகளை முறையிட்டார்கள். அதனால் கோபமடைந்த மும்மூர்த்திகளுக்கும் சங்கசூடனுக்கும் யுத்தம் நடந்தது. ஆனால் சங்கசூடனை யாராலும் வெல்ல முடியவில்லை.
அதற்கு காரணம் அவன் கடுந்தவம் புரிந்து அதன் பயனாய் பெற்று தன் கழுத்தில் அணிந்திருந்த ஸ்ரீகிருஷ்ண கவசம் ஆகும். அந்த கவசம் அவன் கழுத்தில் இருக்கும் வரை அவனை யாராலும் வெல்லவோ, அழிக்கவோ முடியாது என்று மும் மூர்த்திகளும் உணர்ந்தனர். சங்கசூடனின் மனைவி துளசி மகா பதி விரதை, கற்புக்கரசி கணவன் சொல்லை மீறி எந்த செயலும் செய்யாதவள்.
அழகு, அன்பு, கருணை, அனைத்தும் நிறைந்தவள். அவளின் கற்பின் திறன் கணவனுக்கு அரணாக விளங்கியது. துளசியின் கற்பின் மகிமையை உணர்ந்த பரந்தாமன் கற்பினுக்கு அரணாக விளங்கும் துளசியை புகழ்ந்து தோத்திரம் சொல்வதை தவிர வேறு வழியே இல்லை என்று முடிவு செய்தார்.
பிறகு 10 தோத்திரங்களால் பகவான் துளசியை புகழ்ந்துரைத்து துதித்தார். வைகுந்த வாசனே தன்னை துதித்ததை எண்ணி துளசி தன்னை மறந்தாள். நெஞ்சம் நெகிழ்ந்தாள் மிகவும் மகிழ்ந்தாள். அன்பை பொழிந்தாள். அவரை வாயார போற்றிப் பாடினாள். ஆடினாள்.
கற்புக்கனலாக நின்ற அவளை நாராயணர் ஆதரவாகப் பார்த்து வேண்டிய வரங்களைக் கேள் என்றார். அதற்கு அவள் மீண்டும் பிறவா வரமும், பிறந்தால் நாராயணரை மறவா மனமும் வேண்டும் என்றால் பிறகு ஸ்ரீமஹா விஷ்ணுவின் பாதார விந்தங்களில் பணிந்தாள். அவளது உயிர் மகா விஷ்ணு வின் பாதங்களில் ஒளி வடிவாக சென்றடைந்தது. அவளது உடல் கண்டகி என்னும் நதியாக மாறியது.
அவளது கேசம் துளசி செடியாக துளசி வசமானது. ஸ்ரீமகா விஷ்ணு அந்த துளசியை மாலையாக்கி அணிந்து துவளத்தகமாக்க காட்சி அளிப்பவர் ஆனார். மனைவியை பிரிந்த சங்க சூடன் சக்தி அற்றவனாக மாறினான். அவன் முற்பகலில் செய்த கொடுமைகளே பிற்பகலில் அவன் அழிவிற்கு வழி வகுத்தன. அவனை ஸ்ரீ மகாவிஷ்ணு எளிதில் வதம் செய்து எல்லோருக்கும் மங்கலங்கள் தந்தருளினார்.
ஸ்ரீதேவியின் ஓர் அங்கம் பூவுலகில் தங்கி தம் மக்களின் உடற்பிணி உள்ளப்பிணி ஆகிய பிணிகளைப் போக்கி, பேரின்ப வாழ்வளிக்க எடுத்த வடிவமே ஸ்ரீ துளசி.
சாதாரணமாக காண்பவர்களுக்கு செடியின் உருவமாகவும், பிணிகளைத் தீர்க்கும் மருந்து செடியாகவும் தெரிவாள். ஆனால் தெய்வீக நோக்குடன் காணும்போது உலகத்தை விளங்க வைக்கும் மகாலட்சுமியின் உருவமாக காட்சியளிக்கிறாள் ஸ்ரீ துளசி மாதா. ஸ்ரீ மகாலட்சுமியே இந்த துளசி செடியாய் மாறி ஸ்ரீ மகா விஷ்ணுவிற்கு மிகவும் விருப்பமுள்ள மலராக விளங்குகிறார்.
துளசி இல்லாத பூஜையை மகா விஷ்ணு ஏற்றுக்கொள்வதில்லை. திருத்துழாய் என்ற பெயரில் பெருமாள் கோவில்களில் சிறந்த பூஜை பொருளாக விளங்குவது இந்த துளசியே. துளசி உள்ள இடத்தில் ஸ்ரீமகா விஷ்ணு எப்போதும் வாசம் செய்கிறார். துளசியினால் விஷ்ணுவை பூஜித்தால் ஆயிரம் பால் குடங்கள் கொண்டு அபிஷேகம் செய்த மனமகிழ்ச்சியை ஸ்ரீமகா விஷ்ணு அடைகிறார்.
கடைசி காலத்தில் துளசி தீர்த்தம் உட்கொண்டால் பிறவி நீங்கி வைகுண்ட பதவி கிடைக்கும். துளசியினால் ஸ்ரீமகா விஷ்ணுவை மட்டுமின்றி ஸ்ரீ மகா தேவனையும் அர்ச் சிக்க லாம். ஏனெனில் அவர் ஸ்ரீ சங்கர நாராயணராக இருக்கிறார்.
இத்தகைய மகிமை வாய்ந்த ஸ்ரீ துளசியை நம் வீடுகளில் அழகிய மாடங்களில் வளர்த்து பக்தி சிரத்தையுடன் பூஜித்தால் வாழ்க்கையில் சர்வ மங்கலங்களையும் பெறலாம். கன்னிப்பெண்கள் பூஜித்தால் நல்ல கணவனை பெறுவார்கள். சுமங்கலிகள் பூஜித்தால் தீர்க்க சவுமாங்கல்யம்தையும் சகல சவுபாக்கியங்களையும் பெறுவார்கள் இவ்வளவு பெருமை வாய்ந்த துளசி சரித்திரத்தை மனமுவந்து படிப்பவருக்கும் படிப்பதை கேட்ப வருக்கும் ஸ்ரீ துளசி மாதாவின் பெரும் கருணையும் ஸ்ரீமகா விஷ்ணுவின் பரிபூரண அருளும் கிடைக்கும்.