என் மலர்
வழிபாடு
வள்ளிமலை கோவில் பிரம்மோற்சவ விழா:வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி யானை வாகனத்தில் வீதி உலா
- கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டம் வள்ளிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா பந்தகால் நடும் நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி நடைபெற்றது. கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. வாகன உற்சவங்களின் முன்னோட்டமாக விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிம்ம வாகனம், தங்கமயில் வாகனம், நாக வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் ஒவ்வொரு நாளும் எழுந்தருளி மேளதாளம், மங்கள வாத்தியம் முழங்க மாட வீதிகளில் திருவீதி உலா நடைபெற்றது.
6-ம் நாளான நேற்று யானை வாகன பெருவிழா நடைபெற்றது. காலை முதலே விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகசாமி தனி சன்னதியில் அமைந்துள்ள வள்ளியம்மை மற்றும் மலைக் குகை கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்பட்டது.
யானை வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி வண்ண மலர் அலங்காரத்தில் எழுந்தருளி மின் அலங்காரத்துடன் யானை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் இசைக்கச்சேரியும் நடந்தது. இதில் டி.வி. புகழ் மூக்குத்தி முருகன் மற்றும் நடிகைகள் ஆதித்யா, அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்தினர். அதன்பின்னர் சிறப்பு வாண வேடிக்கை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். யானை வாகனம் முதல், தேர் நிலைக்கு வந்து சேரும் வரை 5 நாட்களுக்கு தினமும் மூன்று வேளையும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை வன்னிய குல ஷத்திரிய மரபினர்கள் மற்றும் 6 நாள் யானை வாகன பெருவிழா குழுவினர் செய்திருந்தனர்.