என் மலர்
வழிபாடு
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தமிழ் பதிகம் பாடி திருக்கதவு திறக்கும் நிகழ்ச்சி
- அப்பர், சம்பந்தர் வீதி உலா நடைபெற்றது.
- சன்னதி முழுவதும் சரவிளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.
வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மாசிமக பெருவிழாவில் தமிழ் பதிகம் பாடி திருக்கதவு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி மகரதோரண வாயிலில் அப்பர், சம்பந்தர் எழுந்தருளினர். பின்பு ஓதுவார் மூர்த்திகள் பரஞ்சோதி ஓதுவார் அப்பராகவும், ஓதுவார் வடுகநாததேசிகர் திருஞான சம்பந்தராகவும் உருவகப்படுத்தப்பட்டு தேவார தமிழ் பதிகம் பாடினர்.
ராஜேந்திரன் ஓதுவார் திருவிழாவின் வரலாறு பற்றி பேசினார். அப்போது கோவில் கதவு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கபாட பூஜை எனப்படும் திருக்கதவுக்கு சிவராஜா சிவச்சாரியார் மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து திருக்கதவு திறக்கப்பட்டது. வேதாரண்யேஸ்வரர் கோவில் சன்னதி முழுவதும் சரவிளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. பின்னர் அப்பர், சம்பந்தர் வீதி உலா நடைபெற்றது. இதில் யாழ்பாணம் வரனிஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி, கோவில் செயல் அலுவலர் அறிவழகன், குருகுலம் அறங்காவலர்கள் கயிலைமணி வேதரெத்தினம், கேடிலியப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மக உற்சவம் கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் நடந்த சுப்பிரமணியர் திருவிழாவில் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சாமி வீதி உலாவும் நடந்தது. இதையொட்டி சலங்கைபூஜையுடன் வேதாரண்யம் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில் ஸ்தலத்தார் கயிலைமணி வேதரத்னம், உபயதாரர் அம்பாள் குணசேகரன், மாநில வர்த்தக சங்க துணை தலைவர் தென்னரசு, வேதாரண்யம் சங்க துணை தலைவர் ஆறுமுகம், உப்பு உற்பத்தியாளர் இணைய செயலாளர் செந்தில் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.