என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![ஆடி அமாவாசை: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு ஆடி அமாவாசை: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு](https://media.maalaimalar.com/h-upload/2022/07/28/1737066-veeraraghava-perumal-temple.jpg)
ஆடி அமாவாசை: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- மூலவர் வீரராகவரை 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- கோவில் நுழைவாயிலில் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டு சென்றனர்.
திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலில் அமாவாசை தினங்களில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு செல்வது வழக்கம்.
இன்று ஆடி அமாவாசை என்பதால் நேற்று இரவே சென்னை, காஞ்சீபுரம், மற்றும் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திர மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவள்ளூரில் குவிந்தனர். அவர்கள் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் தங்கி இருந்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு வீரராகவர்கோவில் நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரளான பக்தர்கள் வந்தனர்.
அவர்கள் கோவில் குளக்கரை அருகேயும், காக்களூர் பாதாளவிநாயகர் கோவில் அருகேயும் புரோகிதர்கள் மூலம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
பின்னர் அவர்கள் வீரராகவர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதல் நிரம்பி வழிந்ததால் மூலவர் வீரராகவரை சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும் ரூ.250 கட்டணத்தில் சிறப்பு தரிசனமும் அனுமதிக்கப்பட்டது.
கோவிலுக்குள் அதிக அளவு கூட்டம் இருந்ததால் பெரும்பாலான பக்தர்கள் கோவில் நுழைவாயிலில் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டு சென்றனர்.
திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.