என் மலர்
வழிபாடு
வேண்டும் வரம் தரும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா
- 16-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த 3 புதுமைகளால் ஆரோக்கிய அன்னையின் புகழ் உலகம் முழுவதும் பரவியது.
- வேளாங்கண்ணி பேராலயம் தூய ஆரோக்கிய அன்னையின் பெயரால் கட்டப்பட்டதாகும்.
நாகையை அடுத்த வேளாங்கண்ணியில், "கீழை நாடுகளின் லூர்துநகர்' என அழைக்கப்படும், புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.
இந்த பேராலயத்துக்கு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள்வந்து செல்கின்றனர். புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய திருவிழா ,ஆண்டுதோறும், ஆகஸ்டு 29-ந் தேதி தொடங்கி, செப்டம்பர் 8-ந் தேதிவரை விமரிசையாக கொண்டாடப்படும். வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வருபவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுபடுவதற்கு மட்டுமின்றி நிகழ்கால வாழ்க்கையின் உடனடித் தேவைகளை ஆரோக்கியமாதா பூர்த்தி செய்வார் என்று பரிபூரணமாக நம்புகிறார்கள். மேலும் தீராத நோயால் அவதிப்படுபவர்கள் வேளாங்கண்ணி மாதாவை மனமுருகி வேண்டினால் அவர்களின் நோய் நீங்கி நல்வாழ்வு பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு தினமும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
மத நல்லிணக்கம்
வங்ககடலோரம் அமைந்துள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் பண்பாடு, மொழி, சமயத்தால் வேறுபட்டிருக்கும் மக்கள் ஒருங்கிணைந்து சங்கமிக்கும் புண்ணிய பூமியாக திகழ்ந்து வருகிறது. மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் ஈடு இணையற்ற சான்றாக விளங்கும் வேளாங்கண்ணி பேராலயம் திருவிழா நாட்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் மிகுந்த பெருமையுமன் விளங்குகிறது.
முழங்காலிட்டு சென்று வழிபாடு
திருமணத்தடை, குடும்ப பிரச்சினை, நினைத்த காரியம் நிறைவேற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பாத யாத்திரையாக பக்தர்கள் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து செல்கிறார்கள். குறிப்பாக திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் காவி உடை அணிந்து சிறிய மாதாவின் சப்பரத்தை இழுத்துக்குகொண்டு தஞ்சை, திருவாரூர் வழியாக வேளாங்கண்ணிக்கு செல்கிறார்கள்.
மேலும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறினாலும், நிறைவேற வேண்டும் என்றாலும், வேளாங்கண்ணி சிலுவை பாதையில் முழங்காலிட்டு சென்று அன்னையை வழிபடுகிறார்கள்.
கன்னி மரியாள் பிறந்த நாள்
வேளாங்கண்ணி பேராலயம் தூய ஆரோக்கிய அன்னையின் பெயரால் கட்டப்பட்டதாகும். 16-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த 3 புதுமைகளால் ஆரோக்கிய அன்னையின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. சிறுவனுக்கு அன்னை காட்சி தந்தது, மோர் விற்ற சிறுவன், நடக்க முடியாத சிறுவனின் காலை குணப்படுத்தி சிறுவனை நடக்க செய்தது, போர்த்துகீசிய மாலுமியை புயலில் இருந்து காப்பாற்றி கரை சேர்த்தது போன்றவை முக்கியமானது ஆகும்.
இந்த ஆலயத்தில் உள்ள கன்னி மரியாளின் பிறந்த நாளும், போர்த்துகக்கீசிய மாலுமி கரை சேர்ந்த நாளும் செப்டம்பர் 8-ந் தேதி ஆகும். ஏசுவின் தாயான மரியா, உலகின் பல நாடுகளில் வாழும் மக்களிடையே தோன்றி ஏசுவின் மீது நம்பிக்கை கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். உலகின் பல இடங்களில் தோன்றிய அன்னை, இந்தியாவில் தமிழகத்தின் வேளாங்கண்ணியில் காட்சி அளித்ததால் வேளாங்கண்ணி மாதா என்று அழைக்கப்படுகிறார். வேண்டும் வரம் அருளும் வேளாங்கண்ணி மாதாவின் அருளால் பயன்பெற்ற பக்தர்கள் திருவிழா நாட்களில் அன்னையை தரிசிக்க குவிகிறார்கள்.