என் மலர்
வழிபாடு
புனித அமல அன்னை ஆலயத்தில் வேளாங்கண்ணி மாதா வேண்டுதல் தேர்
- அன்னை மரியாவின் (மாதா) பிறந்தநாள் செப்டம்பர் 8-ந்தேதி கொண்டாடப்பட்டது.
- பக்தர்கள் தேரை சுமந்து ஆலயத்தை 3 முறை சுற்றி வந்தனர்.
இயேசு கிறிஸ்துவின் தாய் அன்னை மரியாவின் (மாதா) பிறந்தநாள் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி கொண்டாடப்பட்டது. இந்தநாள் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி நேற்று ஈரோடு ஸ்டேட் வங்கிரோட்டில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில் வேளாங்கண்ணி மாதா வேண்டுதல் தேர்த்திருவிழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு வட்ட முதன்மை குருவும், புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையுமான ஜான்சேவியர் தலைமையில் நேற்று காலை சிறப்பு திருப்பலி (பூஜை) நடந்தது. தொடர்ந்து வேளாங்கண்ணி மாதா வேண்டுதல் தேர் எடுக்கப்பட்டது. பக்தர்கள் தேரை சுமந்து ஆலயத்தை 3 முறை சுற்றி வந்தனர். தேர் உலாவை உதவி பங்குத்தந்தை நல்ல ஜேக்கப்தாஸ் வழிநடத்தினார்.
மாலையில் அறச்சலூர் அருகே உள்ள கொமராபாளையம் புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை கிளாடியஸ் சேவியர் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. வேண்டுதல் தேர் எடுக்கப்பட்டதுடன், நற்கருணை ஆசீர் வழிபாடு நடந்தது.
இந்த வழிபாடுகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.