என் மலர்
வழிபாடு
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
- விருத்தாசலத்தில் உள்ளது விருத்தகிரீஸ்வரர் கோவில்.
- சாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்று, சாமிவீதிஉலா நடைபெற்றது.
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற பாலாம்பிகை, விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் விருத்தாம்பிகை அம்மனுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.
இங்கு ஆடிப்பூர விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சாமி வீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது.
விழாவில் நேற்று, அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் விருத்தாம்பிகை, மற்றும் பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரருக்கு ஆடிப்பூர திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதற்காக பெண் வீட்டை சேர்ந்தவர்கள் என்ற முறையில் விருத்தாசலம் பொதுப்பணித்துறை சார்பில் சீர்வரிசை பொருட்களை விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. இதை மாப்பிள்ளை வீட்டை சேர்ந்தவர்கள் என்ற முறையில் வருவாய்த் துறையினர் பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக விநாயகர், முருகன், விருத்தாம்பிகை, விருத்தகிரிஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று, மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் நூற்றுகால் மண்டபத்தில் பாலாம்பிகை, விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மேளதாளங்களுடன் பாலாம்பிகை, விருத்தாம்பிகை உடனுரை விருத்தகிரீஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்று, சாமிவீதிஉலா நடைபெற்றது.
விழாவில் விருதாச்சலம் வருவாய் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சாமி வீதி உலா நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.