search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாம் இறைவனின் குழந்தைகள்- இயேசு
    X

    நாம் இறைவனின் குழந்தைகள்- இயேசு

    • இறைவனின் குழந்தைகள் என்பதே நமக்கான அடையாளம்.
    • தன்னை அறிவதே சிறந்தது என பல தத்துவங்கள் கூறுகின்றன.

    நான் யார்? எனது அடையாளம் என்ன? என்பதை அறிந்து கொள்வதே தனி மனித வாழ்வில் மிகப் பெரும் போராட்டமாய் இருக்கிறது. தன்னை அறிவதே சிறந்தது என பல தத்துவங்கள் கூறுகின்றன. பல நேரங்களில் நாம் நம்மை அறிந்து கொள்ளாமல் இந்த உலகில் பயணித்துக்கொண்டு இருக்கிறோம்.

    இந்த கேள்விக்கான பதிலை நாம் அறிந்து கொள்ள இயேசு, லூக்கா நற்செய்தி 15-வது அதிகாரத்தில் ஒரு நிகழ்வை கூறுகிறார்.

    தந்தை ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்த மகன் தந்தையின் பேச்சைக்கேட்டு அவரது சொத்துக்கள் எல்லாவற்றையும், வயல்வெளி நிலங்களையும் கவனித்துக்கொண்டு வந்தான். ஆனால் இளைய மகனோ தன் தந்தையிடம் சொத்தை வாங்கிக்கொண்டு தன் நண்பர் களோடு வெளிநாட்டுக்கு சென்றான். நண்பர் களோடு மகிழ்ந்து கொண்டாடினான். எல்லாப் பணமும் செலவான பின், நண்பர்கள் எல்லோரும் அவனை தனியாக விட்டுச்சென்றனர். கையில் பணம் எதுவும் இல்லாமல் உண்பதற்கு உணவு கூட வாங்க முடியாமல் பசியால் வாடினான்.

    ஒரு கட்டத்தில் மனம் வருந்தி, `என் தந்தையின் கூலியாள்களுக்கு தேவைக்கு அதிகமாக உணவு இருக்க இப்படி உணவின்றி இருக்கிறேனே' என்று தனக்குள்ளேயே அழுது கொண்டு தன் தந்தையை தேடிச்சென்றான். தன் மகன் வீட்டிற்கு வருவதை அறிந்த தந்தை அவரைக்கண்டு பரிவுகொண்டு ஓடிச்சென்று அவரைக் கட்டித்தழுவி முத்தமிட்டார் (லூக்கா 15:20).

    பின்பு தன் பணியாளரை நோக்கி, `முதல் தரமான ஆடையைக்கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள். இவனது கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள். கொழுத்த கால்நடையைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இறந்து போய் இருந்தான், (இப்போது) உயிர் பெற்று வந்துள்ளான். காணாமல் போயிருந்தான், மீண்டும் கிடைத்துள்ளான்" என்றார். (லூக்கா: 15:24)

    இதனைப் பார்த்த மூத்த மகன் தந்தையிடம், "இத்தனை ஆண்டுகளாக நான் அடிமை போன்று உமக்கு வேலை செய்தேன். உம் கட்டளைகளை மீறியதே இல்லை. ஆனால் நீர் எனக்கு சிறிய ஆட்டுக்குட்டியைக் கூட கொடுக்கவில்லை. ஆனால் உம் சொத்தை விற்று அனைத்தையும் வீணாக்கிய உம் மகனுக்கு இவ்வாறு செய்கிறீரே" என்று கேட்டார். அதற்கு தந்தை, "மகனே நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய். என்னுடையது எல்லாம் உன்னுடையது" என்றார்.

    இந்த கதையில் வரும் தந்தையாக இறைவன் இருக்கிறார். இரண்டு மகன்களில் நாம் யாராக இருக்கிறோம்? மூத்த மகனாக இருக்கிறோமா? அல்லது இளைய மகனாக இருக்கிறோமா?

    மூத்த மகன் தன் தந்தைக்கு அருகில் இருந்தும் தன்னை அடிமையாகக் கருதினான். இளைய மகன் தன் தந்தையை விட்டு தூரம் சென்றபோதும் தன்னை மகனாக உணர்ந்தான்.

    திருத்தூதர் பவுல் கலாத்திய மக்களுக்கு எழுதிய கடிதத்தில், `இனி நீங்கள் அடிமைகள் அல்ல, பிள்ளைகள் தான். பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும், இருக்கிறீர்கள்' என்று பதிவு செய்கிறார். (கலாத்தியர் 4:4-7)

    எனவே நாம் அடிமைகள் அல்ல இறைவனின் குழந்தைகள் என்பதே நமக்கான அடையாளம். வெற்றியிலும், தோல்வியிலும், இன்பத்திலும், துன்பத்திலும், உடல்நலத்திலும், நோயிலும் நாம் இறைவனின் குழந்தைகள் என்பதை உணர்வோம்.

    என்ன நேர்ந்தாலும், யார் நம்மை வெறுத்தாலும், நான் உன் மேல் அன்பு கூர்கிறேன். என் பார்வையில் நீ விலையேறப்பெற்றவன், மதிப்புமிக்கவன் (எசாயா:43:4) என்று கூறுகிற இறைவனை தந்தையாக ஏற்றுக்கொள்வோம்.

    ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும், `நான் இறைவனின் குழந்தை' என்று சொல்லுவோம். நம் வீட்டிலும், நாம் பணிபுரியும் இடத்திலும் நம் கண்ணில்படும் படி `நான் இறைவனின் குழந்தை' என்று எழுதி வைப்போம். அதனை அடிக்கடி பார்க்கிறபோது அது நம் மனதிற்குள் பதிந்து நமது அடையாளமாக மாறி, எல்லா நேரமும் நமக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

    இறைவன் நம்மை அவரது குழந்தையாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார் . நாம் அவரை நம் தந்தையாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோமா? நாம் இறைவனின் பிள்ளைகள் என்பதை நம் வாழ்வின் எல்லா தருணத்திலும் உணர்ந்து இருக்கிறோமா?

    சிந்திப்போம்! நாம் இறைவனின் குழந்தைகள் என்பதை உணருவோம்! பிறருக்கும் உணர்த்துவோம்!

    Next Story
    ×