என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![இன்று இட்லி தினம்... இன்று இட்லி தினம்...](https://media.maalaimalar.com/h-upload/2023/03/30/1857555-idly.webp)
இன்று இட்லி தினம்...
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- உலகிலேயே சிறந்த காலை உணவாக இட்லி உள்ளது. இதன் மூலம் மாவு சத்து அதிக அளவில் கிடைக்கிறது.
- சர்க்கரை நோயாளிகள் சிவப்பு அரிசியில் செய்யப்படும் இட்லியை சாப்பிட்டு வருகின்றனர்.
தென்னிந்தியாவில் எந்த உணவகத்துக்குப் போனாலும், உணவுப் பட்டியலில் முதலில் இருப்பது இட்லி. 'ரெண்டு இட்லி' என்றபடி டிபனை ஆரம்பிக்கிற நம் ஊர்க்காரர்களின் பழக்கம், அவ்வளவு சுலபத்தில் மாற்ற முடியாதது.
ஒரு காலத்தில் பலருக்கும் பண்டிகைகள், விருந்து, திருவிழாக்கள் போன்ற முக்கிய நாட்களில் மட்டுமே கண்ணில் காணக்கிடைத்த இட்லி இன்றைக்கு சல்லிசாகக் கிடைக்கிறது. கையேந்தி பவன், உயர்தர சைவ உணவகம், நட்சத்திர ஹோட்டல்கள்... ஏன்... சில வீடுகளில்கூட இட்லி வியாபாரம் வெகு ஜோராக நடக்கிறது.
இந்த அபூர்வ உணவு. வெகு எளிதாகக் கிடைப்பதாலேயே சாப்பிடுவதில் இதன் அளவு குறைந்து போயிருக்கலாம். ஆனால், இதன் மீதான மோகம் என்றென்றைக்கும் குறையவே குறையாது என்பதுதான் யதார்த்தம்.
குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள்... என அனைவருக்கும் பக்க விளைவு ஏற்படுத்தாத உணவு என மருத்துவர்கள் பரிந்துரைப்பது இட்லியைத்தான்.
"உலக அளவில் இட்லி ஒரு சிறந்த, சுவை மிகுந்த காலை உணவு. ஏனெனில், ஆவியில் வேக வைத்தல் முறையில் சமைக்கப்படுவதால் இதில் கொழுப்புச்சத்து இருக்காது என்பதே இதற்குக் காரணம். 'ஆவியில் வேகவைத்து எடுக்கப்படும் சுவையான கேக்' என்று இதைச் சொல்லலாம். இட்லியில் மட்டுமே ஊறவைத்த அரிசியின் மூலம் கார்போஹைட்ரேட்டும், பருப்பின் மூலம் புரதச்சத்தும் ஒன்றிணைந்து கிடைக்கும். தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, புளித்துவையல் மற்றும் சாம்பாருடன் சாப்பிட ஏற்ற அருமையான உணவு இது.
ஒரு இட்லியில் 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது கொழுப்புச்சத்து இல்லை.
இட்லி சாப்பிடுவது ஆரோக்கியம்தான். ஆனால், அளவாகச் சாப்பிட வேண்டும். எண்ணெய், நெய், வெண்ணெய் தடவிய இட்லி, ஃப்ரைடு இட்லி இவையெல்லாம் அதிக கலோரி கொண்டவை.
இவற்றை அதிகமாகச் சாப்பிடும்போது கலோரி அதிகமாக உடலில் சேரும். இட்லிக்குத் தொட்டுக்கொள்ள பரிமாறப்படும் சட்னியிலும் கவனம் தேவை. குறிப்பாக, தேங்காய் சட்னி. ஒரு சிறிய துண்டு தேங்காயில் (சராசரியாக 45 கிராம் எடையுள்ள) 159 கலோரிகளும், 15 கிராம் கொழுப்பும் உள்ளன.
இதனோடு மெதுவடை சாப்பிடுவது பொருத்தமானது அல்ல. வடை, எண்ணெயில் பொரிக்கப்படுவது. அதிக கலோரிகளை உடலில் சேர்க்கக்கூடியது.
இட்லிக்கு பெஸ்ட் சைடுடிஷ் சாம்பார்தான். சாம்பாரில் உள்ள பருப்பு உடலுக்குத் தேவையான புரதச்சத்தை அளிக்கிறது. அதனுடன் தேங்காய், புதினா, தக்காளி அல்லது வெங்காயச் சட்னி சேர்த்து சாப்பிட்டால் புரதம், கார்போஹைட்ரேட்டுடன் சேர்த்து உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்தும் கிடைக்கும்''
இட்லி நன்மைகள் குறித்து சித்த மருத்துவ டாக்டர் ஒருவர் கூறுகையில்:-
உலகிலேயே சிறந்த காலை உணவாக இட்லி உள்ளது. இதன் மூலம் மாவு சத்து அதிக அளவில் கிடைக்கிறது. நீராவியில் வேக வைப்பதால் இட்லி விரைவில் செரிமானம் ஆகிறது. இட்லிக்கு அரைக்கப்படும் பல்வேறு வகையான அரிசிகள் மூலம் கால்சியம் கார்போஹைட்ரேட் கொண்ட சத்துக்கள் கிடைக்கின்றன. இட்லி சாப்பிடுவதன் மூலம் சீக்கிரம் செரிமானம் ஆகி விடுவதால் நல்ல பசி எடுக்கும். நோயாளிகளுக்கும் இட்லி சிறந்த உணவாக உள்ளது.
சர்க்கரை நோயாளிகள் சிவப்பு அரிசியில் செய்யப்படும் இட்லியை சாப்பிட்டு வருகின்றனர். இதில் உள்ள உளுந்து மாவு நல்ல ஆரோக்கியத்தை தரும் என்றார்.