என் மலர்
உடற்பயிற்சி
முதுகு வலியை குணமாக்கும் அர்த்த பிண்ச மயூராசனம்
- அதிக இரத்த அழுத்தம், தீவிரக் கண் கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
- தோள்களையும் முதுகுத்தண்டையும் நீட்சியடையச் செய்கிறது.
அதோ முக ஸ்வானாசனத்தின் ஒரு வகையாக அர்த்த பிண்ச மயூராசனத்தைக் கூறலாம். வடமொழியில் 'அர்த்த' என்றால் 'பாதி', 'பிண்ச' என்றால் 'இறகு', 'மயூர' என்றால் 'மயில்'. இதை மொழிபெயர்க்கும் போது பாதி இறகு மயிலாசனம் என்பதாக இருக்கும். இது ஆங்கிலத்தில் Dolphin Pose என்று அழைக்கப்படுகிறது.
அதோ முக ஸ்வானாசனத்தின் பெரும்பாலான பலன்கள் அர்த்த பிண்ச மயூராசனத்துக்கும் பொருந்தும்.
பலன்கள்
நுரையீரலைப் பலப்படுத்துகிறது. கால்களை நீட்சியடையவும் பலப்படுத்தவும் செய்கிறது. தோள்களையும் முதுகுத்தண்டையும் நீட்சியடையச் செய்கிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. கைகளைப் பலப்படுத்துகிறது. தலைவலியைப் போக்க உதவுகிறது.
முதுகு வலியைப் போக்குகிறது. சையாடிக் பிரச்சினையை சரி செய்கிறது. மூட்டுப் பிரச்சினைகளைப் போக்குகிறது. சிறு வயது முதலே பயின்று வந்தால் தட்டைப் பாதம் சரியாக உதவுகிறது. மாதவிடாய் நிற்கும் காலக்கட்டத்தில் (menopause) ஏற்படும் அசவுகரியங்களைப் போக்குகிறது.
செய்முறை
விரிப்பில் தவழும் நிலைக்கு வரவும். அதாவது, உங்கள் மணிக்கட்டுகள் தோள்களுக்கு நேர் கீழாகவும், உங்கள் கால் முட்டி இடுப்புக்கு நேர் கீழாகவும் இருக்கும் வகையில் உங்கள் உள்ளங்கைகளையும் கால்களையும் தரையில் வைக்கவும். முன்கைகளை மடக்கித் தரையில் வைக்கவும்.
மூச்சை வெளியேற்றியவாறு பாதங்களைத் தரையில் வைத்து இடுப்பை நன்றாக மேலே உயர்த்தவும். உங்கள் கால் முட்டி மடங்காமல் நன்றாக நீட்டப்பட்டு இருக்க வேண்டும்.
தலை உங்கள் மேற்கைகளுக்கு இடையில் இருக்க வேண்டும். 30 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும். இடுப்பை இறக்கி முட்டியைத் தரையில் வைத்து முன்கைகளை நேராக்கவும்.
கால்களை முழுதுமாக நீட்ட முடியவில்லை என்றால் முட்டியை மடக்கி ஆசனத்தைப் பயிலவும். பழகப் பழக, ஆசனத்தை முழுமையான வடிவில் பயில முடியும்.
முதுகுத்தண்டு, முதுகு, தோள், கைகள் ஆகியவற்றில் தீவிரப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும். அதிக இரத்த அழுத்தம் மற்றும் தீவிரக் கண் கோளாறு உள்ளவர்களும் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health