என் மலர்
உடற்பயிற்சி
முதுகுத்தண்டை பலப்படுத்தும் சிம்ஹாசனம்
- கால் முட்டி வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.
- நுரையீரல் கோளாறுகளை சரி செய்து நுரையீரலை பலப்படுத்துகிறது.
'சிம்ஹ' என்ற வடமொழி சொல்லின் பொருள் 'சிங்கம்' என்பதாகும். சிங்கத்தின் நாக்கு ஒரு ஆயுதம். இரையின் மாமிசத்தை கிழித்தெடுக்கும் சக்தி சிங்கத்தின் நாக்குக்கு உண்டு. சிங்காசனத்தில் நாம் கர்ஜிப்பதன் மூலம் பிலடிஸ்மா எனப்படும் தோள்பட்டை எலும்பிலிருந்து தாடை வரை இருக்கும் தசைகளை உறுதியாக்குகிறது. மூலாதாரம், ஜாலந்தரம் மற்றும் உட்டியாண பந்தங்களின் இயக்கத்தை செம்மையாக்கி உடம்பில் பிராண சக்தி ஓட்டத்தை சீர்ப்படுத்துகிற்து.
பலன்கள்
நுரையீரல் கோளாறுகளை சரி செய்து நுரையீரலை பலப்படுத்துகிறது. நோய் எதிர்க்கும் திறனை வளர்க்கிறது. முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது. நரம்பு மண்டலத்தை உறுதியாக்குகிறது.
கண் பார்வையை கூர்மையாக்குகிறது. முகத்துக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. முதுகு வலியை போக்க உதவுகிறது.
செய்முறை
வஜ்ஜிராசனத்தில் அமரவும்.கால் முட்டியை விரித்து, உடலை சற்று முன்னால் சாய்த்து இரண்டு உள்ளங்கைகளையும் கால்களுக்கு இடையிலான இடைவெளியில் விரல்கள் உங்களை நோக்கி இருக்குமாறு வைக்கவும். முதுகை வளைத்து தலையை சற்று மேல் நோக்கி உயர்த்தவும்.
உங்கள் புருவ மத்தியை பார்க்கவும். மெதுவாக ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து, மூச்சை வெளியே விடும் போது வாயைத் திறந்து நாக்கை வெளியே நீட்டவும். மூச்சை வெளியேற்றும் போது, தொண்டையிலிருந்து 'ஆஆஹ்' என ஒலி எழுப்பவும். ச்சை வெளியேற்றிய பின் வாயை மூடி சாதாரண மூச்சில் இருக்கவும்.
இது போல் 5 முறை செய்யவும்.
குறிப்பு
சிங்காசனத்தை பத்மாசனம் முறையில் கால்களை மடக்கி, உள்ளங்கைகளை விரல்கள் முன்புறம் பார்க்குமாறு வைத்து, உடலை முன்புறமாக கால் முட்டி தரையில் இருக்கும் வண்ணம் சாய்த்தும் செய்யலாம்.
கால் முட்டி வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும். மணிக்கட்டு பிரச்சினை உள்ளவர்கள் கைகளை கீழே வைக்காமல் வஜ்ராசனத்தில் அமர்ந்து இந்த ஆசனத்தை பயிலலாம்.
புருவ மத்தியை பார்க்கும்போது தலை சுற்றுவது போல் இருந்தால் நேராக பார்க்கவும்.