என் மலர்
உடற்பயிற்சி
இடுப்புப் பகுதியைப் பலப்படுத்தும் வசிஸ்தாசனம்
- கைகளையும் மணிக்கட்டுகளையும் பலப்படுத்துகிறது.
- உடலின் தாங்குதிறனை அதிகரிக்கிறது.
வடமொழியில் 'வசிஸ்த' என்றால் 'மிகச் சிறந்த' என்று பொருள். இவ்வாசனத்தில் ஒரு கையில் உடலின் பெரும்பாலான எடையைத் தாங்கி இருப்பதால் இது சக்தி வாய்ந்த ஆசனமாகும். ஆங்கிலத்தில் இவ்வாசனம் Side Plank Pose என்று அழைக்கப்படுகிறது.
வசிஸ்தாசனம் மணிப்பூரகம் மற்றும் அனாகத சக்கரங்களைத் தூண்டுகிறது. அன்பு, அமைதி ஆகிய பண்புகளை வளர்க்கவும், தன்மதிப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்க்கவும் இவ்வாசனம் உதவுகிறது.
பலன்கள்
கைகளையும் மணிக்கட்டுகளையும் பலப்படுத்துகிறது. வயிற்றுத் தசைகளை உறுதியாக்குகிறது. இடுப்புப் பகுதியைப் பலப்படுத்துகிறது. கால்களை பலப்படுத்துகிறது. உடலின் சமநிலையை மேம்படுத்துகிறது. உடலின் தாங்குதிறனை அதிகரிக்கிறது. கவனத்தைக் கூர்மையாக்குகிறது.
செய்முறை
அதோ முக ஸ்வானாசன நிலைக்கு வரவும். மூச்சை உள்ளிழுத்தவாறு கும்பக ஆசனத்திற்கு வரவும். மூன்று அல்லது நான்கு முறை சாதாரண மூச்சில் இருக்கவும். மெதுவாக மூச்சை உள்ளிழுத்தபடி இடது கையை தரையிலிருந்து எடுத்து உடலை பக்கவாட்டில் திருப்பவும்.
இடது காலை வலது காலின் மேல் வைக்கவும். இடது கையை மேல் நோக்கி உயர்த்தவும். இப்பொழுது உங்கள் தோள் மற்றும் கைகள் நேர்க்கோட்டில் இருக்கும். நேராகப் பார்க்கவும். அல்லது உயர்த்திய கை விரல்களையும் பார்க்கலாம் .
30 வினாடிகள் இந்த நிலையில் இருந்தபின் இடது கையைத் தரையில் வைத்து அதோ முக ஸ்வானாசன நிலைக்கு வரவும். இப்பொழுது மாற்றுப் பக்கம் பயிலவும்.
மணிக்கட்டு, முட்டி, தோள், கழுத்து, முதுகு, இடுப்பு ஆகிய பகுதிகளில் தீவிரப் பிரச்சினை உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.