என் மலர்
சமையல்
- சிக்கனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து ஒரு ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
சன்டே ஸ்பெஷல் கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கி
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
சோம்பு - 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின் அதனை நன்கு கழுவி கடைசியாக ஒரு முறை மஞ்சள் தூள் சேர்த்து கழுவிக்கொள்ளவும். பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து ஒரு ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை இரண்டையும் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆறிய பின் வறுத்த சோம்பு, கறிவேப்பிலையுடன் பொடித்து, அதனுடன் மிளகுத்தூள் சேர்த்து பொடித்துக்கொள்ள வேண்டும்.
அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். பின் மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து குறைந்த தீயில் வதக்க வேண்டும்.
இதனுடன் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து சிறிதளவு தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.
சிக்கன் நன்கு வெந்ததும் பொடித்து வைத்துள்ள கறிவேப்பிலை பொடியை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கலந்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான கறிவேப்பிலை மிளகு சிக்கன் தயார்.
கிரேவி பதமாக இருந்தால் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கழித்து இறக்கினால் ட்ரை கறிவேப்பிலை மிளகு சிக்கன் தயார்.
- கோடைகால பழங்கள் தர்பூசணி மற்றும் முலாம்பழம் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
- முலாம்பழத்தின் தோல், விதைகளை நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கி போடவும்.
கோடைகால பழங்கள் தர்பூசணி மற்றும் முலாம்பழம் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். முலாம் பழம் சிறுநீரகக் கோளாறுகளை தடுக்கிறது. வாதத்தையும் பித்தத்தையும் குறைக்க உதவுகிறது. மலச்சிக்கலை போக்கும். உடல் சூட்டை குறைக்கும். குடல் புண் ஏற்படுவதை தவிர்க்கிறது. வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்தது. இத்தனை நன்மைகளை கொண்ட முலாம் பழத்தில் சுவையான முலாம் பழ மில்க் ஷேக் செய்யலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
முலாம்பழ துண்டுகள் - 1/2 கப்
காய்ச்சி ஆற வைத்த பால் - 1 டம்ளர்
சர்க்கரை - 1/4 கப்
முலாம்பழ துண்டுகள் - 1 சிறிதளவு
செய்முறை:
முலாம்பழத்தின் தோல், விதைகளை நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கி போடவும்.
மிக்சி ஜாரில் முலாம்பழத்தை சேர்த்து அரைக்கவும். இதனுடன் சர்க்கரை, பால் சேர்த்து அரைக்கவும். இதனை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடும் முன்பு முலாம்பழ துண்டுகளை சேர்த்துக்கொள்ளவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சுவையான முலாம் பழ மில்க் ஷேக் தயார்.
- இனிப்பு பிரியர்கள் அனைவருக்கும் லட்டு பிடிக்கும்.
- கிருஷ்ணருக்கு பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று.
இனிப்பு பிரியர்கள் அனைவருக்கும் லட்டு பிடிக்கும். பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே லட்டு செய்து சாப்பிடுவது கிடைக்கின்றன. சைவ பிரியர்களுக்கு பிடித்த இனிப்புகளில் ஒன்று அவல் லட்டு. அவல் புரத தேவையில் மூன்றில் ஒரு பகுதியை பூர்த்தி செய்கிறது.
கிருஷ்ணருக்கு பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய சுவையான உணவு பொருள் தான் அவல் லட்டு. அவல் அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும்.
தேவையானவை:
வெள்ளை அவல் – ½ கப்
பொட்டுக்கடலை – ¼ கப்
தேங்காய்த் துருவல் – ½ கப்
வேர்க்கடலை – ¼ கப்
வெள்ளை எள் – 2 டேபிள் ஸ்பூன்
துருவிய வெல்லம் – 1½ கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
பாதாம், முந்திரி – தலா 1 டீஸ்பூன்
செய்முறை:
வெறும் வாணலியில் அவல், பொட்டுக்கடலை, எள், தேங்காய்த் துருவல் முதலியவற்றை தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
எல்லா பொருட்களும் ஆறியதும் வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி அதையும் அதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அனைத்து பொருட்களையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு நைசாக பொடித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி, கம்பிப் பாகு பதம் வந்ததும் இறக்கி அதனை பொடித்து வைத்துள்ள மாவில் சேர்க்க வேண்டும்.
பின்னர் நெய்யில் வறுத்த பாதாம், முந்திரியை வறுத்த மாவில் கலந்து கை பொறுக்கும் சூட்டில் லட்டுகளாகபிடிக்கவும். மேலே பாதாம் அலங்கரித்து குழந்தைகளுக்கு மாலையில் சாப்பிட கொடுக்கலாம். மிகவும் சுவையான புரோட்டின் சத்து நிறைந்த லட்டு தயார்.
- சிறுதானியங்களில் சாமையும் முக்கியமானதாகும்.
- நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன.
உடலுக்கு நன்மை பயக்கும் சிறுதானியங்களில் சாமையும் முக்கியமானதாகும். இதில் நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் இதை யாரும் உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. இந்த சாமையை வைத்து இனிப்பான பொங்கல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க....
தேவையான பொருட்கள்:
சாமை - 1 கப்
தண்ணீர் - 2 கப்
நெய் – ½ கப்
வெல்லம் – ½ கப்
ஏலக்காய் தூள் – ¼ ஸ்பூன்
முந்திரி, உலர் திராட்சை - தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் சாமையை சுத்தமாக கழுவி குறைந்தது 30 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். ஏனெனில் ஊறிய சாமையை வேக வைக்க எளிமையாக இருக்கும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த சாமையை தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். சாமையும் அரிசி போலவே இருப்பதால் அதை எடுத்து அழுத்தி பார்த்தே வெந்துவிட்டதா என்பதை அறிய முடியும். சாமை வெந்த பிறகு தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு வாணலியில் நெய் விட்டு உருகும் வரை காத்திருந்து நெய்யில் வேகவைத்த சாமையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
நெய்யும் சாமையும் நன்றாக கலந்த பிறகு அதில் வெல்லத்தை சேர்க்க வேண்டும். வெல்லம் உருகி சாமையோடு சேரும் வரை நன்றாக கிளற வேண்டும்.
அதன் பிறகு அதில் ஏலக்காய் தூள், முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி இறக்க வேண்டும். சுவையான சாமை இனிப்பு பொங்கல் தயார்.
மாலை வேளைகளில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க உகந்த பலகாரமாக இந்த சாமை பொங்கல் இருக்கும்.
- காலை உணவாகக் கூட எடுத்துக்கொள்ளலாம்.
- வயிற்றில் உள்ள புண்களை ஆற்றுவதற்கு உதவுகிறது.
செட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமானது இந்த தேங்காய்ப்பால் குணுக்கு. இதனை பால் பனியாரம் என்று கூறுவார்கள். இந்த குணுக்கு வகைகளில் காரம், இனிப்பு என்று விதவிதமாக செய்வார்கள். இதனை காலை உணவாகக் கூட எடுத்துக்கொள்ளலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
இதில் உள்ள தேங்காய்ப்பால் உடல் உஷ்ணத்தை குறைத்து வயிற்றில் உள்ள புண்களை ஆற்றுவதற்கு உதவுகிறது. மேலும் உளுந்து உடலுக்கு தேவையான வலிமையை கொடுக்கிறது. எனவே அனைத்து வயதினரும் இதனை உண்ணலாம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய்- 1
உளுந்து- 100
நாட்டு சர்க்கரை- 100
அரிசி- 2 ஸ்பூன்
எண்ணெய்- பொறிப்பதற்கு
ஏலக்காய்- ஒரு சிட்டிகை
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு (தண்ணீர் அதிகம் சேர்க்காமல்) அரைக்க வேண்டும். அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகைஉப்பு சேர்த்து நன்றாக கலந்து 2 மணிநேரம் அப்படியே மூடி வைக்க வேண்டும்.
அதற்குள் தேங்காயை துருவி தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால், அதனுடன் பால் வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ளலாம். ஏலக்காய் தூள், ருசிகேற்ப நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பரிமாறும் பொழுது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து ஒரு கப்பில் போட்டு அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும். தித்திப்பான தேங்காய் பால் குணுக்கு தயார்.
- வைட்டமின் பி மற்றும் போலேட் சத்துக்கள் நிறையவே இருக்குது.
- ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதய பாதிப்புகள் ஏற்படாமல்l தடுக்க உதவுகிறது.
கம்புக்கு அடுத்தபடியாக நம் முன்னோர்கள் சோளத்தை தங்கள் அன்றாட உணவுகளில் அதிகமாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். சோளத்தில் அதிகமான புரதம், தாமிரம், இரும்புச் சத்துக்கள் இருக்கிறது. மெக்னீசியம், கால்சியம் சத்துக்களும் இதில் இருக்கறதால் உடலுக்கு வேண்டிய உயிரோட்டம் கிடைக்குது. உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமான சத்தான வைட்டமின் பி மற்றும் போலேட் ஆகிய சத்துக்கள் இதில் நிறையவே இருக்குது.
இதில் இருக்கிற ஒமேகா–3 கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பை குறைத்து, இதய நாளங்கள் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கறதோட, சீரான ரத்த ஓட்டத்தை உறுதிப்படுத்தி, இதய பாதிப்புகள் ஏற்படாம தடுக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
சிவப்பு சோளம்-2 கப்
அரிசி-அரை கப்
வெந்தயம்- ஒரு ஸ்பூன்
கடுகு- கால் டீஸ்பூன்
உளுந்து- கால்கப்
பச்சைமிளகாய்- 2
கறிவேப்பிலை- தாளிக்க
தேங்காய்- துருவல் ஒரு கப்
பெருங்காயம்- ஒரு சிட்டிகை
செய்முறை:
முதலில் அரிசியையும், சிவப்பு சோளத்தையும் கழுவி ஊற வைக்க வேண்டும். அதேபோல உளுந்தையும் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு இவைமூன்றயும் வெந்தயம் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவில் உப்பு சேர்த்து 5 மணிநேரம் புளிக்க வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி இந்த கலவையினை அரைத்து வைத்துள்ள மாவில் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இபோது குழிப்பனியாரக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி ஒவ்வொன்றாக ஊற்றி எடுத்தால் சிவப்ப சோள குழிப்பனியாரம் தயார். கார சட்னியுடன் தொட்டுக்கொள்ள பிரமாதமாக இருக்கும். இதே மாவினை இட்லி, தோசையாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். சுவையாக இருக்கும்.
- கொள்ளு ஊறவைத்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும்.
- ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.
கொள்ளு பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும். அதே போல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.
இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும்.
அனைவரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதற்கு கொள்ளினை முளைகட்டி குழம்பு வைத்து உண்ணலாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்களின் உடலில் உள்ள வேண்டாத கொழுப்பு கரைந்து உடல் எடை எளிதில் குறையும்.
தேவையான பொருட்கள் :
முளைக்கட்டிய கொள்ளு - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 2
தக்காளி - 3
வரமிளகாய் - 5
மல்லித்தூள்- ஒரு ஸ்பூன்
சீரகம் - சிறிதளவு
தேங்காய் துருவல் - சிறிதளவு
செய்முறை:
கொள்ளினை 10 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஊற வைத்த கொள்ளினை எடுத்து கழுவி வடிகட்டிவிட்டு அதனை ஒரு துணியில் வைத்து கட்டி இரவு முழுவதும் விட வேண்டும். காலையில் எடுத்து பார்த்தால் கொள்ளு சிறிது முளைகட்டி இருக்கும்.
முளைகட்டிய கொள்ளினை பாத்திரத்தில் கொட்டி வேக வைக்க வேண்டும்.
ஒரு வாணொலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், பூண்டு, சீரகம், வர மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் தேங்காய், மஞ்சள் தூள், மல்லித்தூள் மற்றும் வேக வைத்த கொள்ளு சிறிதளவு சேர்த்து மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த மசாலா கலவையினை வேகவைத்த கொள்ளுவில் சேர்க்க வேண்டும். மசாலா கொதித்து வரும்போது தாளிப்பு சேர்க்கலாம்.
அதற்காக மீண்டும் வாணொலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை தாளித்து கொள்ளு குழம்பில் சேர்த்து கிளறினால் சுவையான கொள்ளு குழம்பு தயார்.
- கத்தரிக்காயில் பல ரெசிப்பிகளை செய்திருப்போம்.
- கத்தரிக்காயை பயன்படுத்தி ஒரு வித்தியாசமான ரெசிப்பி.
ஒரிசாவில் மிகவும் பிரபலமான தஹி வாலே பைங்கன் ரெசிப்பி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். அதாவது தயிர், கத்தரிக்காயை பயன்படுத்தி ஒரு வித்தியாசமான ரெசிப்பி தான் இது. பொதுவாக கத்தரிக்காயில் பல ரெசிப்பிகளை செய்திருப்போம். ஆனால் இந்த மாதிரி செய்திருக்க மாட்டீர்கள். வாங்க எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க....
தேவையான பொருட்கள்:
பெரிய கத்தரிக்காய்- 2
வெங்காயம்- 1
தயிர்- ஒரு கப்
மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
சீரகத்தூள்- ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 4
கடுகு- கால் டீஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
முதலில் இந்த ரெசிப்பி செய்வதற்கு பெரிய கத்தரிக்காய்களை பார்த்து வாங்கிக்கொள்ள வேண்டும். கத்தரிக்காய்களை வட்டமாகவும், சிறுது தடிமனாகவும் இருக்குமாறு பார்த்து வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வெட்டி வைத்துள்ள கத்தரிக்காயில் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்தூள், சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்றாக கிளறி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு ஒரு வாணொலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்துள்ள கத்தரிக்காய்களை முன்னும், பின்னுமாக உடையாமல் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கப் தயிரை எடுத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்து கலந்துகொள்ள வேண்டும். இப்போது இந்த தயிரினை வறுத்து வைத்துள்ள கத்தரிக்காய்களின் மேல் ஊற்றி பிரட்டிக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு ஒரு வாணொலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து அதில் சிறிதளவு மிளகாய் தூள், சீரகத்தூள் சேர்த்து இந்த தாளிப்பு கலவையை நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள தயிர் கத்தரிக்காய் கலவையில் ஊற்றி பிரட்டி எடுத்தால் தஹி வாலே பைங்கன் தயார்.
இந்த ரெசிப்பி சாதம் மற்றும் சப்பாத்தி போன்றவற்றுக்கு சூப்பராக இருக்கும்.
- கிமாமி சேமியா ரெசிப்பி ஒரு முகலாய ரெசிப்பி.
- ஈத் பெருநாள் அன்று செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை ஆகும்.
இந்த கிமாமி சேமியா ரெசிப்பி ஒரு முகலாய ரெசிப்பி. முகலாயர்கள் காலத்தில் ஈத் பெருநாள் அன்று செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை ஆகும். இந்த ரெசிபியை அவர்கள் ஈத் பெருநாளான ரம்ஜான் அன்று செய்து சாப்பிட்டு வந்துள்ளனர்.
அத்தகைய இனிப்பு ரெசிப்பியை நாம் எவ்வாறு செய்யலாம் என்பதை பார்க்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனை வீடுகளில் முக்கியமான விழாக்காலங்களில் செய்து சாப்பிடலாம். அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சேமியா- 200 கிராம்
சர்க்கரை- 200 கிராம்
நெய்- 50 கிராம்
ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்
முந்திரி, ஏலக்காய், பிஸ்தா
தேங்காய்- ஒரு ஸ்பூன்
திராட்சை- ஒரு ஸ்பூன்
பால்கோவா- 100 கிராம்
செய்முறை:
முதலில் ஒரு வாணொலியில் நெய் விட்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா, ஆகியவற்றை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் தேங்காயையும் சிறிய துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே கடாயில் சிறிதளவு நெய்விட்டு சேமியாவையும் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு தண்ணீர் கொத்ததும் அதில் வறுத்த பொருட்கள் மற்றும் ஏலக்காய்தூள் சேர்க்க வேண்டும். அதன்பிறகு சேமியாவையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
கலவை சிறிது கெட்டியானதும் அதில் பால்கோவா சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கிமாமி சேமியா தயார்.
- பார்ட்டிகளில் செய்து அசத்துவதற்கு ஏற்ற டிஷ்
- குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 250 கிராம்
பெரிய வெங்காயம்- 3
பெரிய தக்காளி- 2
பச்சை மிளகாய்- 1
பூண்டு- 10பல்
மல்லி தூள்- 2ஸ்பூன்
சீரகத்தூள்- 1/2 ஸ்பூன்
கரமசாலா- 1 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள்- 1 1/4 ஸ்பூன்
காஷ்மீர் மிளகாய்த்தூள்- 1/2ஸ்பூன்
உப்பு- தேவையானஅளவு
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
முந்திரி பருப்பு- 20
பாதாம் பருப்பு- 10
ஃப்ரஷ் கீரிம்- 1/4 கப்
சோம்பு- ஒரு ஸ்பூன்
எண்ணெய்- தேவையானஅளவு
தயிர்- ஒரு கப்
செய்முறை:
முதலில் சிக்கனை நன்றாக சுத்தப்படுத்திவிட்டு அதனை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த சிக்கனுடன் உப்பு, மிளகுத்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், வெங்காயம், பிரெட் தூள் சேர்த்து பிசைந்து எடுத்து உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த உருண்டைகளை பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த உருண்டைகளை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், சோம்பு, பச்சை மிளகாய், முந்திரி, ஏலக்காய், பட்டை மற்றும் தயிர் சேர்த்து நன்றாக பேஸ்ட் மாதிரி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். பச்சை வாசனை போன பிறகு அதில் அரைத்து வைத்த விழுதை சேர்க்க வேண்டும். பின்னர் அதில் சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாதூள், உப்பு சேர்த்து கலந்து அதில் பொறித்து வைத்துள்ள சிக்கன் கோப்தாக்களை போட்டு கொதிக்க விட்டு எடுத்தால் சுவையான கிரீமியான சிக்கன் மலாய் கோப்தா தயார். அதற்கு மேல் கிரீம் சேர்த்தும் பரிமாறலாம்.
- வடைக்கு மாவு அரைக்கும் போது உப்பை கடைசியாக சேர்க்க வேண்டும்.
- தேங்காய் பர்பிக்கு தேங்காய் துருவலை வறுத்த பின்னர் பர்பி செய்தால் கெட்டியாக வரும்.
* பயத்தம் மாவு உருண்டை செய்யும்போது வெல்லத்தை மிக்சியில் தூள் செய்து அத்துடன் வறுத்து சலித்த பயத்தம் மாவை போட்டு அரைத்தால் மாவு கட்டி இல்லாமல் இருக்கும்.
* வடைக்கு உளுந்து அரைக்கும் போது கடைசியில்தான் உப்பு சேர்க்க வேண்டும். முன்பே சேர்த்தால் மாவு இளகிவிடும்.
* ஒருவருக்கு மட்டும் காபி போட வேண்டும் என்றால் சிறிது சர்க்கரை கலந்த காபித்தூளை டீ வடிக்கட்டியில் போட்டு வெந்நீர் ஊற்றினால் கெட்டியான டிகாஷன் கிடைக்கும்.
* சப்பாத்தியை சிறு துண்டுகளாக செய்து, அத்துடன் உருளைக்கிழங்கு குருமாவை சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
* உளுந்தம் பருப்பு அதிகமாகவும், கடலை பருப்பு கொஞ்சமாகவும் போட்டு மிளகாய், கெட்டி காயம், உப்பு சேர்த்து வறுத்து அரைத்தால் இட்லி பொடி நல்ல சுவையாக இருக்கும்.
* சாம்பார் சாதம் செய்யும்போது அரிசி, பருப்பு, காய்கறி கலவை, சாம்பார் பொடி ஆகியவற்றை மட்டும் தண்ணீரில் வேக வைக்க வேண்டும். உப்பு, புளிக்கரைசலை தாளிக்கும் போது கொதிக்க வைத்து சேர்க்க வேண்டும். அப்போதுதான் சாதம் குழைவாக இருக்கும்.
* அப்பம் செய்யும் போது அரிசி, தேங்காய் அரைத்த கலவையில் வெல்லத்தை தண்ணீரில் நன்றாக கரையவிட்டு ஆறிய பின்பு தான் ஊற்ற வேண்டும். சூடாக ஊற்றினால் அப்பம் சரியாக வராது.
* தேங்காய் பர்பி செய்யும்போது தேங்காய் துருவலை ஈரப்பசை போக சிறிது வறுத்த பின்னர் பர்பி செய்தால் கெட்டியாக வரும்.
* வாய் குறுகலான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் முளைக்கீரையை வைத்தால் அடுத்த நாள் கீரை பசுமை நிறம் மாறாமல், வதங்காமல் இருக்கும்.
- உரித்து வைத்துள்ள தட்டப்பயறை சேர்த்து மசாலாவோடு சேரும் வரை வதக்கவும்.
- புழுங்கல் அரிசியை இரண்டு முறை கழுவிக் கொள்ளவும். பின் 2 கப் தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
தட்டைப்பயறு - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கடுகு உளுந்து - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
அரைக்க
இஞ்சி - 1/2 அங்குலத்துண்டு
பூண்டு பற்கள் - 6
சின்ன வெங்காயம் - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 2 சிறிய துண்டு
கிராம்பு - 3
கொத்தமல்லி இலை - சிறிது
செய்முறை
1. மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், சோம்பு, கிராம்பு, பட்டை சேர்த்து அரைக்கவும். பின் கொத்தமல்லி இலை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
2. தக்காளியை தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
3. புழுங்கல் அரிசியை இரண்டு முறை கழுவிக் கொள்ளவும். பின் 2 கப் தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
4. குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் சீரகம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் அரைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
5. பின் தக்காளி விழுதை சேர்த்து கைவிடாமல் வதக்கவும். பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி அதோடு தனியா தூள் சேர்த்து வதக்கவும். பின் உரித்து வைத்துள்ள தட்டப்பயறை சேர்த்து மசாலாவோடு சேரும் வரை வதக்கவும்.
6. பின் ஊறவைத்து வடிகட்டிய அரிசியை மசாலாவோடு சேர்த்து நன்றாக கிளறவும். பின் 2 கப் தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவும். 2 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும்.
7. குக்கரில் இருக்கும் ஆவி தானாக அடங்கியதும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து மெதுவாக கலந்து பரிமாறும் பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
காய்ந்த தட்டப்பயறை வைத்து செய்தால் தண்ணீரில் இரண்டு முறை கழுவி 4 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.