என் மலர்
சமையல்

ஹோட்டல் ஸ்டைலில் மலாய் சிக்கன் கிரேவி செய்வது எப்படி?

- மலாய் சிக்கன் கிரேவியை குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள்.
- இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
மலாய் சிக்கன் கிரேவியை குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். இதில் காரம் குறைவாக இருப்பதனாலும் இதனுடன் தயிர் மற்றும் ஃப்ரஷ்கிரீம் சேர்ப்பதினாலும் இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சிக்கனை வைத்து குழம்பு, வறுவல், தொக்கு, கடாய் சிக்கன், பெப்பர் சிக்கன், மசாலா சிக்கன் என்று பல வகையான உணவு வகைகளை சமைக்கலாம். வித்தியாசமான சுவையில் இருக்கும் மலாய் சிக்கனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 500 கிராம் (எலும்பு நீக்கியது)
தயிர் – 5 ஸ்பூன்
கறி மசாலாப் பொடி – 2 ஸ்பூன்
பூண்டு பெரியது – 2
இஞ்சித் துண்டு – 1
வெங்காயம் – 4
மிளகுத் தூள் – 2 ஸ்பூன்
சீரக தூள் – 2 ஸ்பூன்
தனியா தூள்– 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
வெண்ணெய் – 2 ஸ்பூன்
பிரெஷ் கிரீம் – 3 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
அரைப்பதற்கு:
தேங்காய்- ஒரு கப்
சோம்பு- ஒரு ஸ்பூன்
முந்திரி- 10
கசகசா- ஒரு ஸ்பூன்
செய்முறை:
முதலில் பூண்டு, இஞ்சி மற்றும் வெங்காயத்தை தனித்தனியாக விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மிதமான தீயில் அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சிறிது வெண்ணெய் சேர்க்கவும், அது உருகியதும் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும் அதனுடன் வெங்காய விழுதை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் அளவுக்கு வதக்க வேண்டும்.
பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள கோழி இறைச்சியை அதில் சேர்க்க வேண்டும். இறைச்சி சற்று வதங்கியதும் அதனுடன் தேங்காய், முந்திரி, சோம்பு, கசகசா சேர்த்து அரைத்து வைத்த விழுதை சேர்க்க வேண்டும். அதன்பிறகு தயிர், மிளகு தூள், சீரகத்தூள், கறி மசாலாத் தூள், தனியாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு வாணலியை 10 நிமிடங்கள் மூடி தண்ணீர் சேர்க்காமல் வேக வைக்கவும்.
பின்னர் அதில் பிரெஷ் கிரீம், பச்சை மிளகாய் மற்றும் வெண்ணெய் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும். இப்பொழுது வித்தியாசமான சுவையில் மலாய் சிக்கன் ரெடி.