என் மலர்
சமையல்
சாதம் மீந்து போனால் இனி தூக்கி போடாதீங்க... சூப்பரான வத்தல் செய்யலாம் வாங்க...
- பழைய சாதத்தில் எத்தனையோ உணவு வகைகளை செய்யலாம்.
- இன்று மீந்த போன பழைய சாதத்தில் வத்தல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 5,
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம் - 1/4 டேபிள் ஸ்பூன்,
உப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
முதல் நாள் மீந்த சாதத்தை தண்ணீர் ஊற்றி எடுத்து வைத்து, அடுத்த நாள் அதை தண்ணீர் இல்லாமல் சுத்தமாக பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீர் இருந்தால் மாவு புளித்து விடும்.
வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.
காய்ந்த மிளகாய் வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக (சில்லி பிளேக்ஸ்) பொடித்துக் கொள்ளுங்கள்.
அதே ஜாரில் வெங்காயத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து தனியாக வைக்கவும்.
கடைசியாக பிழிந்து வைத்த சாதத்தை ஜாரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து அதை ஒரு அகலமான கிண்ணத்தில் ஊற்றவும்.
இப்போது அதனுடன் அரைத்து வெங்காய விழுது, சில்லி பிளேக்ஸ், சீரகம், பெருங்காயம், உப்பு அனைத்தையும் சேர்த்து மாவை தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
இப்பொழுது நல்ல வெயிலில் ஒரு பேப்பர் போட்டு அதன் மேல் பிளாஸ்டிக் கவரை விரித்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் மாவை நன்றாக ஒரு முறை அடித்து விட்டு ஒரு கரண்டி மாவு எடுத்து தோசை ஊட்டுவது போல் சிறிது சிறிதாக அந்த பிளாஸ்டிக் கவர் மீது ஊற்றி தேய்த்து விடுங்கள். இதே போல அனைத்து மாவையும் ஊற்றி ஒரு நாள் முழுவதும் வெயிலில் வைத்து விடுங்கள்.
இப்போது இருக்கும் வெயிலுக்கு காலை ஊற்றி வைத்தால் மாலையே நன்றாக காய்ந்து விடும். அதை கவரில் இருந்து அப்படியே எடுத்து மறுபுறம் திருப்பிப் போட்டு அடுத்தநாள் இதே போல் வெயிலில் காய வைத்து எடுத்து விட்டால் போதும் அருமையான பழைய சாத வத்தல் தயார்.
இதை வீட்டின் நிழலிலும் காய வைக்கலாம். மேற்கொண்டு ஒன்று இரண்டு நாட்கள் ஆகும் அவ்வளவு தான்.
நன்றாக காய்ந்த வத்தலை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து தேவைப்படும் போது எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம்.