என் மலர்
அழகுக் குறிப்புகள்
பழமையான இந்திய நகைகளின் வித்தியாசமான வடிவமைப்புக்கள்
- காலம் கடந்தும் இதன் கலைநயம் மக்களால் பெரிதும் போற்றப்படுகிறது.
- பார்ப்பதற்கு அழகாகவும் கண்ணைக் கவரும் வகையிலும் இருக்கும் குந்தன் காரி.
கலைநயம் மிக்க நகைகளை அனைவரும் விரும்புவர். பழமையான நகைகளில் அக்காலத்து கலைநயம் மிகுந்து காணப்படும். அவற்றின் நிறங்களும் தனித்துவமான தன்மையும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். பல்வேறு காலகட்டங்களில் பல வகையான கலைநயம் மிக்க நகைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில இன்றளவும் மிகவும் பிரபலமாக உள்ளன. அவற்றை காண்போம்.
தாராகாஷி
இந்த வகையான கலைநயம் மிகுந்த நகை வகை 1500 களில் ஒரிசாவில் வளர்ச்சி அடைந்தது. இது கிரேக்க பிலிகரி வேலைபாட்டின் மாற்றி அமைக்கப்பட்ட வடிவமாகும். இயற்கையில் உள்ள வடிவங்களை இது பிரதிபலிக்கின்றது. தாராகாஷி நகைகள் தாவர மற்றும் உயிரினங்களின் வடிவங்களை கொண்டு வடிவமைக்கப்படும். மெல்லிய வெள்ளி கம்பிகளால் இந்த நகைகள் செய்யப்படும். பொதுவாக வட்ட வடிவத்தில் மையப்பகுதி இருக்கும். இவை நெக்லஸ், இடுப்பு மற்றும் கைகளில் அணியும் ஆபரணமாக பயன்படுத்தப்பட்டது. தற்போது மோதிரங்கள், காதணிகள், கால்கொலுசு, போன்ற ஆபரணங்கள் பெண்களிடம் மிகப் பிரபலமாக உள்ளது. காலம் கடந்தும் இதன் கலைநயம் மக்களால் பெரிதும் போற்றப்படுகிறது.
தேவா
தேவா பதினாறாம் நூற்றாண்டைச் சார்ந்த கலைநயம் மிக்க நகை ஆகும். இன்றளவும் ராஜஸ்தான் குஜராத் போன்ற இடங்களில் இது மிகவும் பிரபலமாக உள்ளது. 23 கேரட் தங்கத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டது. இது மிகச் சிறப்பான மணிகளும் பதக்கங்களும் இணைத்து ஆரம் போல் செய்யப்பட்டிருக்கும். இதை உருவாக்கியவர் பிரதாப் காரியா நட்டுலால் சோனியாவால் என்ற பொற்கொல்லர் ஆவார். மகாராஜா சுமன் சிங் இந்த நகையை கவனித்தார். அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர் காலத்தில் இந்த கலைநயம் மிகவும் வளர்ச்சி அடைந்தது. இந்தப் பதக்கங்களில் உள்ள கலைநயம் மனதைக் கவரும் வகையில் இருக்கின்றது.
பச்சிகம்
பச்சிகம் குஜராத் மாநிலத்தில் கட்ச் என்ற ஊரில் உருவானது. குஜராத்தி மொழியில் பச்சிகர் என்றால் பொற்கொல்லர் என்று பெயர். அந்த பெயரில் இருந்து பச்சிகம் என்று பெயர் பெற்றது. இது பிளாட்டினம் மற்றும் வெள்ளி உலோகங்களால் தயாரிக்கப்படுவது. பொதுவாக கண்ணாடி மணிகள் விலை குறைந்த கற்கள் இவற்றைக் கொண்டு கலைநயத்தோடு பச்சிகம் உருவாக்கப்படுகிறது. மோதிரங்கள் வளையல்கள், கொலுசு, காதணிகள், நெத்திச்சுட்டி மற்றும் நெக்லஸ் போன்ற பல வகையான நகைகள் செய்யப்படுகின்றது இவற்றில் பதித்த கண்ணாடி மணிகள் மற்றும் அதன் அமைப்பும் கண்களை பறிக்கும் வண்ணம் சிறப்பாக இருக்கும்.
மீனாகாரி
மீனாகாரி ராஜா மான்சிங் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது எனாமல் கொண்டு செய்யப்படும் நகையாகும். இதை செய்வது சற்று கடினமானது. இந்த நகையை வடிவமைக்கும் போது அரக்கு குச்சிகளில் வைப்பார்கள். அதன் இடையே உள்ள துவாரங்களில் எனாமல் தூள்களை தூவுவார்கள். பிறகு அதை சூடேற்றுவார்கள். அந்த தூள் உருகி அந்த இடம் முழுதும் நிரப்பும் வரை சூடேற்றுவார்கள். பிறகு வடிவங்களை பொறித்து வெள்ளி அல்லது தங்கத்தால் நகையை செய்து முடிப்பார்கள். மிக அழகாக காட்சி அளிக்கும் இந்த நகையின் கலைநயம் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இருக்கும். பிகானீர்- ராஜஸ்தான், வாரணாசி - உத்திரபிரதேச, ஹைதராபாத் - ஆந்திர பிரதேசம் மற்றும் கொல்கத்தாவில் செய்யப்படும் மீனாகாரி நகை வகைகள் உலகம் முழுதும் பிரபலமானவை. நாத்வராவின் வெள்ளி மீனாகாரி நகைகள் இளைய தலைமுறையினர் மத்தியில் மிகவும் பிரபலமானது.
குந்தன்காரி
19 ஆம் நூற்றாண்டில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அரசவைகளில் உருவானது குந்தன் காரி நகைவகையாகும். இது வைரம், வைடூரியம், மாணிக்கம் மற்றும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்படுவது. பார்ப்பதற்கு அழகாகவும் கண்ணைக் கவரும் வகையிலும் இருக்கும் குந்தன் காரி பிரேஸ்லெட், நெக்லஸ்கள், காதணிகள் மற்றும் கொலுசுகள் இன்றைய நவீன நாகரிக காலத்திலும் மணப்பெண்களால் விரும்பப்படுவதாகும். விலையுயர்ந்த கற்களின் வேலைப்பாடு மனம் கவரும் வகையிலும் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இருக்கும். கற்களை நெருக்கமாக பொருத்தி சிறப்பாக செய்யப்பட்டிருக்கும்.
ஜடோ
இது மீனாக்காரி நகையின் அழகையும் குந்தன் காரின் நகையின் ஆடம்பரத்தையும் சிறப்பாக இணைத்து செய்யப்பட்ட நகையாகும். இது முகலாயர் காலத்தில் நமக்கு அறிமுகமான நகை வகையாகும். இந்த நகையில் அண்கட் வைர பொய்க்கிஸ் மற்றும் மாற்று மதிப்புள்ள கற்கள் இவற்றை கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும். பொதுவாக வைரப் பொய்கிகள் தங்கம் அல்லது வெள்ளி இழைகளால் சுற்றப்பட்டு இருக்கும். இதனால் கற்களின் பளபளப்பு தன்மை அதிகரிக்கும். இந்தப் போல்கிகள் அரக்கால் செய்யப்பட்ட வடிவமைப்புக்குள் அழுத்தி வைக்கப்படும். பிறகு தங்கம் கொண்டு இவற்றை செய்து முடிப்பார்கள். பல வண்ணம் கொண்ட மாற்றுக் கற்கள், விலை உயர்ந்த கற்கள் இவற்றால் ஜடோ நகைகள் செய்யப்படும். மணப்பெண்களை அலங்கரிக்கும் இந்த நகை கண் கவரும் வகையில் இருக்கும். அதன் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்ட கற்கள் மிகவும் அழகாக காட்சி அளிக்கும்.
விக்டோரியன்
இவை ஐரோப்பிய நகை வகையை சார்ந்தவை. பிரிட்டிஷ்காரர்களால் கொண்டுவரப்பட்டது. இந்த நகைகள் தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளியால் செய்யப்படுபவை. மேலும் இவை கற்கள் மற்றும் சாதாரணமாக கிடைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்படுபவை. இவை ஆங்கிலோ-இந்தியன் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றவை. மலிவான விலையில் கிடைப்பதால் இன்றளவும் இந்திய பெண்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. பிரேஸ்லெட் மற்றும் தலையில் அணியும் ஆபரணங்கள் இந்திய பெண்களால் இன்றளவும் விரும்பப்படுகிறது. இவை நம் பாரம்பரிய உடைகளான புடவை, சல்வார் கமிஸ், காக்ரா சோலி, தோத்தி குரதாஸ் போன்ற எந்த ஆடைகளுக்கும் பொருந்தி போகக் கூடிய வகையில் உள்ளதால் இந்திய கலாச்சாரத்திற்கு மிகவும் பொருந்துகின்றது. குறைவான விலை மற்றும் கலைநயம் மிகுந்த வடிவமைப்பால் இந்த நகை அனைவராலும் விரும்பப்படுகிறது. நெக்லஸ், வளையல் போன்றவை இன்றளவும் இந்திய பெண்களால் பயன்படுத்தப்படுகின்றது