என் மலர்
அரியானா
- வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவான சதவீதமாக உள்ளது.
- காங்கிரஸ் கடைசி நேரத்தில் தப்பிப் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது.
அரியானா மாநிலத்தில் 90 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் காங்கிரஸ் முன்னணி பெற்ற நிலையில் தற்போது பா.ஜ.க. 49 தொகுதிகளிலும், காங்கிரஸ் 35 தொகுதிகளிலும் முன்னணி பெற்றுள்ளன.
ஆனால் வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவான சதவீதமாக உள்ளது. காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகள் இணைந்து இதுவரை 41 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளன. பா.ஜ.க. 39 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளன. 2 சதவீதம் வாக்குகள் மட்டுமே வித்தியாசமாக உள்ளது.
இந்தியன் தேசிய லோக் தளம் (INLD) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி (BSP) இணைந்து கிட்டத்தட்ட 6.6 சதவீத வாக்குகளை பெற்று வருகிறது. எனவே வாக்குகள் அதிகம் பெற்றாலும் காங்கிரஸ் அணி சற்று பின் தங்குகிறது.
துஷ்யந்த் சவுதாலாவுடன் அணி சேர்ந்து போட்டியிட்ட சந்திரசேகர ஆசாத் கட்சி பெரிய தாக்கம் எதுவும் ஏற்படுத்தியதாக தெரியவில்லை. மற்றவர்கள் 10சதவீதம் பெறுகிறார்கள். அதில் சுயேச்சைகளும், ஆசாத் அணியும் அடக்கம். எனவே காங்கிரஸ் கடைசி நேரத்தில் தப்பிப் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி பிழைத்தால் அதன் பின் சுவாரஸ்யமான ஆட்டம் நடக்கலாம்.
- சட்டசபை தேர்தலிலும் ஜே.ஜே.பி கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.
- துஷ்யந்த் சவுதாலா 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
அரியானா மாநிலம் உச்சன கலன் சட்டசபை தொகுதியில் முன்னாள் துணை முதல்- மந்திரியும், ஜனநாயக கட்சி தலைவருமான (ஜே.ஜே.பி) துஷ்யந்த் சவுதாலா போட்டியிட்டார். இன்று ஓட்டு எண்ணிக்கையின் போது இத்தொகுதியில் இவர் தோல்வி முகத்தில் உள்ளார். அத்தோடு அவர் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பீரேந்திரசிங் முன்னிலையில் இருந்து வருகிறார். 2- வது இடத்தில் பா.ஜ.க.வும், அதற்கு அடுத்தபடியாக 3- வது இடத்தில் ஆம் ஆத்மி கட்சியும் உள்ளது. துஷ்யந்த் சவுதாலா தொடர்ந்து பின் தங்கி உள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இவர் இதே தொகுதியில் 92 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதோடு மட்டுமல்லாது கிங் மேக்கராகவும் உருவெடுத்தார்.
சென்ற தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காததால் துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது.
ஜனநாயக ஜனதா கட்சி கடந்த தேர்தலில் 87 தொகுதிகளில் போட்டியிட்டு 10 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்ததால் துஷ்யந்த் சவுதாலா துணை முதல்- மந்திரியானார்.
ஆனால் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஜனநாயக ஜனதா கட்சி விலகியது. இதனால் துணை முதல்-மந்திரி பதவியையும் துஷ்யந்த் சவுதாலா இழந்தார்.
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியதால் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக ஜனதா கட்சி தோல்வியை சந்தித்தது.
இதன் தொடர்ச்சியாக இந்த சட்டசபை தேர்தலிலும் ஜே.ஜே.பி கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. கடந்த தேர்தலில் கிங் மேக்கராக இருந்த துஷ்யந்த் சவுதாலா இத்தேர்தலில் மண்ணை கவ்வி உள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பாரீசில் இருந்து திரும்பிய சில தினங்களில் அவர் அரசியலில் குதித்தார்.
- முதல் சுற்று முடிவில் வினேஷ் போகத் 214 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக்கில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு பறிபோனது.
இதைத் தொடர்ந்து மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார். பாரீசில் இருந்து திரும்பிய சில தினங்களில் அவர் அரசியலில் குதித்தார். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அரியானா சட்டசபை தேர்தலில் அவருக்கு காங்கிரஸ் கட்சி சீட்டு கொடுத்தது. வினேஷ் போகத் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் பா.ஜ.க, சார்பில் யோகேஷ் குமாரும், இந்திய தேசிய லோக்தளம் சார்பில் சுரேந்தர் லாதரும், ஜே.ஜே.பி. சார்பில் அமர் ஜித்தும், ஆம் ஆத்மி சார்பில் கவிதா ராணியும் களத்தில் இருந்தனர்.
முதல் சுற்று முடிவில் வினேஷ் போகத் 214 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். ஆனால் 2-வது சுற்றில் நிலைமை மாறியது. வினேஷ் போகத் பின் தங்கினார். அவர் 2128 வாக்குகள் வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கினார்.
2-வது சுற்று முடிவில் பா.ஜ.க வேட்பாளர் யோகேஷ் குமார் 9,404 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். வினேஷ் போகத் 7276 வாக்குகள் பெற்றார்.
5 சுற்றுகள் வரை பா.ஜ.க வேட்பாளர் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அதன் பிறகு வினேஷ் போகத் 38 ஓட்டுகள் கூடுதல் பெற்று முன்னிலையில் காணப்பட்டார். மாறி மாறி முன்னிலை நிலவியதால் இந்த தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் முடிவில் வினேஷ் போகத் 5,763 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவர் 64,491 ஓட்டுகளும், பா.ஜ.க வேட்பாளர் 58,728 வாக்குகளும் பெற்று இருக்கிறார்கள்.
- 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடந்த இந்த தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
- தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
பாரதிய ஜனதா ஆளும் அரியானாவில் கடந்த 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடந்த இந்த தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா, அங்கே ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களமிறங்கியது. அதேநேரம் 10 ஆண்டுகளாக அதிகாரத்தை இழந்திருந்த காங்கிரசோ, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வேகத்தில் களப்பணி ஆற்றியது.
இந்த இரு கட்சிகளை தவிர ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக்தளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி, ஜே.ஜே.பி-ஆசாத் சமாஜ் கூட்டணி என பலமுனை போட்டி காணப்பட்டது. எனினும் பெரும்பாலான இடங்களில் பாரதிய ஜனதா-காங்கிரஸ் இடையேதான் நேரடி போட்டி இருந்தது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியத்தில் இருந்து காங்கிரஸ் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்த நிலையில் காலை 10மணியில் இருந்தது பாரதிய ஜனதா முன்னிலை வகித்து வருகிறது.
காங்கிரஸ் 35 தொகுதிகளிலும், பாஜக 49 தொகுதிகளிலும் மற்றவை 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.
- அரியானா தேர்தலில் 66 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
- தேர்தலில் பதிவான வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்பட உள்ளது.
சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் 90 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. அங்கு பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.
லோக்தளம்-பகுஜன் சமாஜ் கட்சி, ஜனநாயக ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிடுகின்றன.
இந்த தேர்தலில் 2 முறை ஆட்சியைப் பிடித்துள்ள பா.ஜ.க. 3-வது முறையாக வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது.
முதல் மந்திரி நயாப் சிங் சைனி, முன்னாள் முதல் மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா, வினேஷ் போகத், ஜேபிபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா உள்ளிட்ட 1027 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மக்கள் வாக்களிக்க வசதியாக 20,632 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
காலை 7 மணி வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
தேர்தலில் பதிவான வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், அரியானா மாநில தேர்தலில் 66 சதவீதம் வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- தேர்தலில், 2 முறை ஆட்சியை பிடித்துள்ள பா.ஜ.க. 3-வது முறையாக வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது.
- தேர்தலில் பதிவான வாக்குகள் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
அரியானாவில் 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
அரியானா சட்டசபை தேர்தலில், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. லோக்தளம்-பகுஜன் சமாஜ் கட்சி, ஜனநாயக ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில், 2 முறை ஆட்சியை பிடித்துள்ள பா.ஜ.க. 3-வது முறையாக வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது.
இந்த தேர்தலில் முதல்வர் நயாப் சிங் சைனி, முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, வினேஷ் புாகத், ஜேபிபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா உள்ளிட்ட 1027 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 20,632 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டன.
காலை 7 மணி வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நிறைவுப்பெற்றன. தேர்தலில் பதிவான வாக்குகள் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- பா.ஜ.க.-வுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
- நயாப் சிங் சைனி மீண்டும் முதலமைச்சர் ஆவார்.
அரியானாவில் 90 தொகுதிகளுக்கான ஒரே கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள், தலைவர்கள், பிரபலங்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
பா.ஜ.க. எம்.பி.யும், தொழில் அதிபரான நவீன் ஜிண்டால் தனது வாக்கை செலுத்துவதற்காக குதிரையில் வந்தார்.
வாக்களித்த பின்னர் நவீன் ஜிண்டால் கூறியதாவது:-
மக்களிடையே அதிக அளவில் உற்சாகம் நிலவுகிறது. அவர்கள் தங்களது வாக்குகளை இன்று செலுத்தியுள்ளனர். மக்கள் பா.ஜ.க.-வுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என நான் நம்புகிறேன். அரியானாவின் ஆசிர்வாதம் பா.ஜ.க.வுக்கு கிடைக்கும். நயாப் சிங் சைனி மீண்டும் முதலமைச்சர் ஆவார்.
நான் வாக்களிக்க குதிரையில் வந்துள்ளேன். இதை மங்களகரமானதாக கருதுகிறேன். என்னுடைய தாயார் சாவித்ரி ஜிண்டால் ஹிசார் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் ஹிசார் தொகுதிக்கு அதிக அளவில் பணி செய்ய விரும்புகிறார். ஆகவே, மக்கள் விரும்பும் பிரதிநிதி யார் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு ஜிண்டால் தெரிவித்தார்.
- மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் லத்வா தொகுதியில் தாமரை மலரும்.
- கனவு காண்பதில் இருந்து காங்கிரசை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
அரியானா மாநிலத்தில் 90 இடங்களுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டு முறை ஆட்சியை தொடர்ந்து பிடித்துள்ள பா.ஜ.க. இந்த முறையும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முனைப்பு காட்டி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது.
முதல்வர் நயாப் சிங் சைனி லத்வா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று காலை அவர் தனது வாக்கை செலுத்தினார். பின்னர் கூறியதாவது:-
பா.ஜ.க.-வுக்கு சாதகமாக காற்று வீசுகிறது. அரியானாவில் பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சி அமைக்கும். மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் லத்வா தொகுதியில் தாமரை மலரும். கனவு காண்பதில் இருந்து காங்கிரசை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அவர்கள் ஏற்கனவே சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் கனவு கண்டார்கள்.
அவர்களுடைய பணிகளை அவர்கள் உற்று நோக்க வேண்டும். அவைகள் வளர்ச்சிக்கு எவ்வாறு தடையாக இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும். தலித் மக்களை அவர்கள் இழிவுப்படுத்தியதை மாநில மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
இவ்வாறு நயாப் சிங் சைனி தெரிவித்தார்.
- பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்றவர் மனு பாக்கர்.
- அரியானா மாநிலத்தை சேர்ந்த இவர் தற்போதுதான் முதல் முறையாக வாக்களித்துள்ளார்.
பாரீஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இரண்டு பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். அவர் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். அரியாவில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்றும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் மனு பாக்கர் தனது தந்தையுடன் வாக்குமையம் வந்து வாக்கு செலுத்தினார்.
வாக்கு செலுத்தியபின் அவர் கூறியதாவது:-
நாட்டில் உள்ள இளைஞர்கள், அவர்களுக்கு பிடித்தமான வேட்பாளர்களுக்கு வாக்கு அளிப்பது நம்முடைய கடமை ஆகும். மிகப்பெரிய இலக்கிற்கான சிறிய முயற்சி. நான் முதன்முறையாக வாக்கு செலுத்தியுள்ளேன்.
இவ்வாறு தெரிவித்தார்.
அவரது தந்தை ராம் கிஷண் பாக்கர் கூறுகையில் "நாங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு செலுத்துகிறோம். நாம் வாக்கு செலுத்தவில்லை என்றால் நம்முடைய கிராமம் எப்படி வளர்ச்சி பெறும். எல்லோரும் வாக்கு மையம் வந்து வாக்களிக்க கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
இளைஞர்கள் அதிக அளவில் திரண்டு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறத்தும் வகையில் மனு பாக்கர் தூதராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2.03 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 20,632 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- முதல்வர் நயாப் சிங் சைனி, வினேஷ் போகத் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அரியானாவில் 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 2.03 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர். முதல்வர் நயாப் சிங் சைனி, முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, வினேஷ் புாகத், ஜேபிபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா உள்ளிட்ட 1027 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 20,632 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
- அரியானா சட்டசபை தேர்தல் வரும் 5-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது.
- அரியானா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
சண்டிகர்:
அரியானா சட்டசபை தேர்தல் வரும் 5-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடுகிறது. அதேபோல், காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரு கட்சிகளும் தனித்தனியே களம் காண்கின்றன. மறுபுறம் ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. எனவே அரியானாவில் 4 முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், அரியானாவின் நுஹ் பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நாங்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை நடத்தினோம். நாங்கள் ஒற்றுமை மற்றும் அன்பு பற்றி பேசி வருகிறோம்.
ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜ.க.வும் வெறுப்பை பரப்பி நாட்டை உடைக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் அரசியல் அமைப்பை அழிக்க நினைக்கிறார்கள்.
காங்கிரஸ் ஒரு கொள்கை ரீதியான போரை எதிர்கொண்டு வருகிறது. இந்த போரில், ஒருபுறம் அரசியலமைப்பை அழிக்க வேண்டும் என்ற கொள்கையும், மறுபுறம் அரசியலமைப்பு சார்ந்த கொள்கையும் இருக்கின்றன.
அன்புக்கும், வெறுப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. நாம் வெறுப்பை அழித்தொழிக்க வேண்டும்.
நான் அமெரிக்காவில் அரியானாவைச் சேர்ந்த சில மாணவர்களைச் சந்தித்தேன். அவர்கள் என்னிடம் அரியானாவில் அவர்களுக்கு வேலை கிடைக்காததால் அமெரிக்காவுக்கு வந்ததாக கூறினார்கள்.
அரியானாவில் வேலைவாய்ப்பின்மையும், பணவீக்கமும் அதிகரித்துள்ளது. பா.ஜ.க. அரசு அரியானாவை சீரழித்து விட்டது.
பிரதமர் மோடி கோடீஸ்வரர்களுக்கான அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.
- அரியானா மாநிலத்தில் வருகிற 5-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
- வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
அரியானா மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து அங்கு புதிய சட்டசபை அமைப்பதற்கான தேர்தலை நடத்துவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்துள்ளது. வருகிற 5-ந் தேதி அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
அரியானா சட்டசபை மொத்தம் 90 தொகுதிகளின் பிரதிநிதித்துவம் கொண்டது. 90 தொகுதிகளிலும் 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 462 பேர் சுயேட்சை வேட்பாளர்கள் ஆவார்கள்.
கடந்த 2 வாரங்களாக 90 தொகுதிகளிலும் அனல்பறக்கும் பிரசாரம் நடந்தது. பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்பட மூத்த தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில், தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
நாளை வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கான சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. தேர்தல் பணியாளர்களும் முழுமையாக பணியில் ஈடுபட உள்ளனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து, வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.