என் மலர்
ஜப்பான்
- பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது அவரை ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க புமியோ கிஷிடா அழைப்பு விடுப்பார்.
- ஜப்பானின் மேற்கு நகரமான ஹிரோஷிமாவில் மே மாதம் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டின் வெற்றிக்கு வழிவகுக்கும்.
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். வருகிற 19ம் தேதி இந்தியா வர திட்டமிட்டுள்ள அவர் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
அப்போது பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இது தொடர்பாக நிக்கி ஏசியா ஊடகம் கூறும்போது, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா வருகிற 19ம் தேதி முதல் 3 நாட்கள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்த ஆண்டு ஜி-7 மற்றும் ஜி-20 தலைவர்களாக ஜப்பானும், இந்தியாவும் இணைந்து செயல்படுவார்கள் என்பதை இந்திய பிரதமர் மோடியுடன் உறுதிப்படுத்த புமியோ கிஷிடா ஆர்வமாக உள்ளார்.
ஜப்பானின் மேற்கு நகரமான ஹிரோஷிமாவில் மே மாதம் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டின் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையில், மற்ற நாடுகளுடன் உறவுகளை ஆழப்படுத்த புமியோ கிஷிடா விரும்புகிறார் என்று தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது அவரை ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க புமியோ கிஷிடா அழைப்பு விடுப்பார்.
மோடி- புமியோ கிஷிடா சந்திப்பின்போது ரஷியா-உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படு கிறது.
- நெமுரோ தீபகற்பத்தில் 61 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது.
- சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹொக்கைடோ:
ஜப்பானில் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய தீவுப்பகுதியான ஹொக்கைடோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியிருந்தது. நெமுரோ தீபகற்பத்தில் 61 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்க அதிர்வைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. முன்னதாக, துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களில் இவ்விரு நாடுகளிலும் 50,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- ஜப்பானிய போலீஸ் அதிகாரிகள் கடற்கரைக்கு சீல் வைத்து, மர்ம பந்தை ஆய்வு செய்தனர்.
- கடற்கரையில் மிகப்பெரிய அளவில் மர்ம பந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜப்பான், டோக்கியோவிலிருந்து 155 மைல் தொலைவில் உள்ள தெற்கு கடற்கரை நகரமான ஹமாமட்சுவில் கடந்த செவ்வாய்கிழமை அன்று சந்தேகத்திற்கு இடமான வகையில் மிகப்பெரிய வடிவில் மர்ம பந்து ஒன்று கிடந்தது. இதுதொடர்பாக உள்ளூர்வாசி ஒருவர் போலீசுக்கு புகார் அளித்தார்.
பின்னர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்த ஜப்பானிய போலீஸ் அதிகாரிகள் கடற்கரைக்கு சீல் வைத்து, மர்ம பந்தை ஆய்வு செய்தனர்.
1.5 மீட்டர் விட்டம் கொண்ட உலோகத்தால் ஆன, துரும்பிடித்த இந்த மர்ம பந்தை எக்ஸ்ரே சோதனை செய்ததில் உள்ளே வெற்றிடம் இருப்பதாகவும், வெடிக்கும் அபாயம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது.
பின்னர் அன்று மாலை 4 மணியளவில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. கடற்கரையில் மிகப்பெரிய அளவில் மர்ம பந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ளது.
- போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர் நிதியுதவியை ஜப்பான் அறிவித்தது.
டோக்கியோ:
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ளது.
இந்நிலையில், போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்குவதாக ஜப்பான் நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்ற உலகளாவிய மன்றத்தில் பங்கேற்ற பேசிய அவர், உக்ரைன் இன்னும் ரஷிய படையெடுப்பின் கீழ் பாதிக்கப்பட்டுள்ளது. ரஷிய தாக்குதல்களால் மோசமாக பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப அவர்களுக்கு உதவி தேவை. எனவே உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர் நிதியுதவியை ஜப்பான் வழங்குகிறது. மேலும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்வதை குறிக்கும் வகையில் 24-ம் தேதி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்புடன் ஜி-7 மாநட்டை நடத்த முடிவு செய்துள்ளேன் என தெரிவித்தார்.
- நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளை இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுவதாக நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர்.
- ஹோன்சு தீவில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது.
டோக்கியோ:
ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது. அங்குள்ள கட்டிடங்கள், சாலைகள் மற்றும் வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் காகங்கள் குவிந்திருந்தன. அதோடு வானத்திலும் காகங்கள் கூட்டம் கூட்டமாக பறந்தன. இதை பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே தீவு முழுவதும் காகங்கள் சூழ்ந்திருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.இந்த விசித்திர நிகழ்வின் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. அதே சமயம் நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளை இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுவதாக நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர்.
துருக்கியில் சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பறவைகள் ஒலி எழுப்பியபடி கூட்டம் கூட்டமாக வானத்தில் பறந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
- விமானத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்ட பிறகு வெடிகுண்டு நிபுணர்கள் விமானம் முழுவதும் சோதனையிட்டனர். ஆனால் வெடிகுண்டுகள் ஏதுவும் கிடைக்கவில்லை.
- வெடிகுண்டு மிரட்டல், வதந்தி என்பது தெரிய வந்ததால் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.
டோக்கியோ:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து கியூஷி தீவில் உள்ள புகுவோவாவுக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 136 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் இருந்தனர்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அதில் வெடிகுண்டு இருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்தது. ஜெர்மனியில் இருந்து போனில் ஆங்கிலத்தில் பேசிய நபர், விமானத்தில் வெடிகுண்டு வைத்ததாக தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானிக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து விமானம் அய்ச்சி மாகாணத்தில் உள்ள சுபு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது. அங்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அவசர வழிகளில் வெளியேற்றப்பட்டனர்.
பயணிகள் பீதியில் அவசர அவசரமாக விமானத்தில் இருந்து வெளியேறினர். இதில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விமானத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்ட பிறகு வெடிகுண்டு நிபுணர்கள் விமானம் முழுவதும் சோதனையிட்டனர். ஆனால் வெடிகுண்டுகள் ஏதுவும் கிடைக்கவில்லை.
வெடிகுண்டு மிரட்டல், வதந்தி என்பது தெரிய வந்ததால் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- குடும்பத்தில் ஒரு உறுப்பினர் வேலையில் இருக்க வேண்டும்.
- டோக்கியோவில் இருந்து இடம் பெயந்தவர்களுக்கு குறைந்த நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
டோக்கியோ:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 3½ கோடி பேர் வசித்து வருகிறார்கள். இதனால் மற்ற நகரங்களில் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக உள்ளது.
நாட்டின் கிராம புறங்களில் மக்கள் தொகை குறைந்தபடி இருந்ததால் அதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது.
அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு ஒரு திட்டத்தை தொடங்கியது. அதில் தலைநகர் டோக்கியோவில் இருந்து கிராம புறங்களுக்கு இடம் பெயர்பவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்தது.
ஆனால் 2019-ம் ஆண்டு 71 பேரும், 2020-ம் ஆண்டு 290 பேரும் மட்டுமே இடம் பெயர்ந்தனர். கடந்த ஆண்டு இந்த திட்டத்தின் கீழ் 1184 குடும்பங்கள் பயனடைந்தனர்.
இந்த நிலையில் தலைநகர் டோக்கியோவில் இருந்து வெளியேறும் குடும்பங்களில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தலா ஒரு மில்லியன் யான் பணம் (இந்திய மதிப்பில் ரூ.6.33 லட்சம்) வழங்கப்படும் என்று ஜப்பான் அரசு அறிவித்து உள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ் இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பம் டோக்கியோவில் இருந்து வெளியேறினால் 3 மில்லியன் யான் பணம் பெறலாம். மத்திய டோக்கியோ பகுதியில் இருந்து 5 ஆண்டுகளாக வசித்த குடும்பங்கள் நிதியுதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேலையில் இந்த நிதியுதவியை பெற விரும்பும் குடும்பங்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டு காலம் இடம் பெயர்ந்த புதிய வீட்டில் வசிக்க வேண்டும். குடும்பத்தில் ஒரு உறுப்பினர் வேலையில் இருக்க வேண்டும். அல்லது புதிய வணிகத்தை தொடங்க திட்டமிட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் குடும்பங்கள் உள்ளூர் பகுதியில் தொழில் தொடங்க விரும்பினால் கூடுதல் உதவியும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின் மூலம் 2027-ம் ஆண்டுக்குள் டோக்கியோவில் இருந்து 10 ஆயிரம் பேர் கிராம புறங்களுக்கு செல்வார்கள் என்று அரசு நம்புகிறது. அதிகமாக இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக நகரங்களுக்கு வருவதால் ஜப்பானின் கிராம புறங்களில் சமீபத்திய ஆண்டுகளாக மக்கள் தொகை குறைந்து உள்ளது.
இந்த கவர்ச்சிகரமான ஊக்க தொகை மூலம் கிராமப் புறங்கள் புத்துயிர் பெற ஊக்குவிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே டோக்கியோவில் இருந்து இடம் பெயந்தவர்களுக்கு குறைந்த நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
- திடீரென யாரும் பார்த்தால் அது ஒநாய் தான் என்று சொல்லும் அளவுக்கு அவரது கெட்-அப் கச்சிதமாக இருந்தது.
- சிறு வயது முதல் விலங்குகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்கிறார்
ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை இருக்கும். அது போல தான் ஜப்பானை சேர்ந்த ஒரு வாலிபருக்கு வித்தியாசமான ஆசை வந்தது. அவர் ஓநாயாக உருமாற முடிவு செய்தார். ஏனென்றால் விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் மீது அவர் அளவுகடந்த பாசம் வைத்து இருந்தார். இதனால் நாமும் அதுபோல ஒருநாள் வேடமிட்டால் என்ன என யோசித்தார். இதற்கான முயற்சியிலும் அவர் இறங்கினார்.
அவர் ஆடை அலங்கார நிபுணரை அணுகி தன்னுடைய ஆசையை தெரிவித்தார். இதை கேட்ட அவரும் சரி என ஒப்புக்கொண்டார். ஆனால் ஆடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க நிறைய செலவு ஆகும் என ஆடை வடிவமைப்பாளர் கூறினார். அதற்கும் அந்த வாலிபர் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து அந்த வாலிபரை ஓநாயாக உருமாற்றுவதற்கான வேலைகள் தொடங்கியது. இதற்காக அவர் பல முறை உடையை அளவெடுப்பதற்காக நிறுவனத்துக்கு சென்று வந்தார்.
அதற்கான பலனும் அவருக்கு கிடைத்தது. 50 நாட்களில் அந்த வாலிபர் அச்சு அசல் ஓநாய் போல உருமாறினார். பின்னங்கால்களால் ஓநாய் நடப்பதுபோல சிறிது தூரம் நடந்தார். இதை பார்த்து அனைவரும் அசந்துபோனார்கள். திடீரென யாரும் பார்த்தால் அது ஒநாய் தான் என்று சொல்லும் அளவுக்கு அவரது கெட்-அப் கச்சிதமாக இருந்தது.
இதற்காக அந்த வாலிபர் இந்திய மதிப்பில் ரூ.18 லட்சம் ரூபாய் செலவு செய்து இருந்தார். அது அவருக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. தனது கனவு நனவாகி விட்டதாக மகிழ்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-
சிறு வயது முதல் விலங்குகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். டி.வியில் யாராவது அது போன்று நடித்தால் விரும்பி பார்ப்பேன். நாமும் இது போன்று முயற்சி செய்தால் என்ன என்று நினைத்தேன். இதற்காக ஓநாய் போன்று வேடமணிய முடிவு செய்தேன். அதற்கு ஏற்றாற்போல நான் சென்ற நிறுவனமும் எனக்கு நல்ல ஊக்கம் கொடுத்து ஆடைகளை தயார் செய்து கொடுத்தனர். அதை எனது உடலில் மாட்டிக்கொண்டு கண்ணாடி முன்பு நின்றேன்.
எனது உருவத்தை பார்த்து என்னாலேயே அதை நம்ப முடியவில்லை. உண்மையான ஓநாய் போன்று இருந்தது. இதனால் எனது நீண்ட நாள் கனவு நிறைவேறி இருக்கிறது.
பின்னங்கால்களால் ஓநாய் நடப்பதுபோன்று சிரமப்பட்டு நடந்தேன். ஆனாலும் எனது ஆசை நிறைவேறியதால் அந்த வலி எனக்கு பெரிதாக தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே நிறுவனத்தின் மூலம் இதற்கு முன்பு டேக்கோ என்பவர் ரூ.12 லட்சம் செலவில் நாய் போல வேடமணிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
- அனைத்து சீன பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ஜப்பான் அரசு கூறியது.
டோக்கியோ:
சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் புமியோ கிஷிடா கூறுகையில், வரும் வெள்ளிக்கிழமை முதல் சீனாவில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார் என தெரிவித்தார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தால் கொரோனா தொற்று அதிகரிப்பதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.
- ஜப்பானில் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
- இறப்புகள் அதிகம் இருப்பதால் மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது.
டோக்கியோ :
ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாகவே பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. அதே வேளையில் இறப்புகள் அதிகம் இருப்பதால் அங்கு மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு அந்நாட்டில் 8 லட்சத்து 11 ஆயிரத்து 604 பிறப்புகளும், 14 லட்சத்து 39 ஆயிரத்து 809 இறப்புகளும் பதிவாகின. இந்த நிலையில் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது.
அதன் ஒரு பகுதியாக குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் யென் (சுமார் ரூ.2 லட்சத்து 52 ஆயிரம்) மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த மானியத்தை 80 ஆயிரம் யென் (சுமார் ரூ. 49 ஆயிரம்) உயர்த்தி 5 லட்சம் யென் (சுமார் ரூ.3 லட்சம்) ஆக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த தகவலை அந்நாட்டின் நிதி மந்திரி கட்சுனோபு கட்டோ தெரிவித்தார்.
- ஆய்ச்சி மாகாணத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
- கோஹிமா மாகாணத்திலும் பறவை காய்ச்சல் காரணமாக 34 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டோக்கியோ:
ஜப்பானின் ஆய்ச்சி மாகாணத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் கோழிகள் இறந்தன. இதை தொடர்ந்து இறந்துபோன கோழிகளை பரிசோதித்ததில் அவற்றில் பெரும்பாலானவை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. இது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆய்ச்சி மாகாணத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். பறவை காய்ச்சல் மேலும் பரவுவதை தடுக்கும் விதமாக மாகாணம் முழுவதிலும் சுமார் 3 லட்சத்து 10 ஆயிரம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.
இதே போல் கோஹிமா மாகாணத்திலும் பறவை காய்ச்சல் காரணமாக 34 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜப்பானில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்து பறவை காய்ச்சல் பரவி வருவதும் இதுவரை 33 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- ஜாக் மா திடீரென மாயமானார்.
- ஜாக் மா பொதுவெளியில் தோன்றாமல் போனார்.
டோக்கியோ :
சீனாவை சேர்ந்த பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அலிபாபா. இதன் நிறுவனர் ஜாக் மா. இவரது நிறுவனத்தின் மீது அதிபர் ஜின்பிங் தலைமையிலான அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் அதிருப்தி அடைந்த ஜாக் மா கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஷாங்காய் நகரில் நடந்த ஒரு வர்த்தக மாநாட்டில் சீன அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த சம்பவத்துக்கு பின் ஜாக் மா திடீரென மாயமானார். பல மாதங்கள் அவர் பொதுவெளியில் தோன்றாமல் போனார். அதை தொடர்ந்து சீன அரசு அவரை கைது செய்ததாகவும், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு வதந்திகள் பரவின.
எனினும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவில் 100 ஆசிரியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக நடந்த ஒரு சந்திப்பில் ஜாக் மா தோன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதே சமயம் அவர் எங்கு இருக்கிறார் என்பது தொடர்ந்து மர்மமாகவே இருந்தது. இந்த நிலையில் ஜாக் மா ஜப்பானில் தஞ்சமடைந்துள்ளதாகவும், அங்கு அவர் கடந்த 6 மாதங்களாக தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜாக் மாவுக்கு நெருக்கமானவர்கள் வழங்கிய தகவல்களை மேற்கோள்காட்டி பிரபல ஜப்பான் செய்தி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
ஜாக் மா ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் தங்கியிருப்பதாகவும், அவர் அடிக்கடி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு சென்றுவருவதாகவும் அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.