என் மலர்
ஜப்பான்
- மங்கா காமிக்ஸ் வகைகள் பிற மொழிகளுக்கும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன
- ரத்தம் பெருமளவில் கசிந்து, மூளையில் நிறைந்து, திசுக்களுக்கு அழுத்தம் தருவதால் சப்டியூரல் ஹீமடோமா ஏற்படுகிறது
"காமிக்ஸ்" (comics) எனப்படும் படக்கதை புத்தகங்களில் 19-வது நூற்றாண்டில் ஜப்பானில் உருவான, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி படிக்கும் கதைகள் "மங்கா" (manga) எனப்படும்.
மங்கா காமிக்ஸ் வகைகளில் நகைச்சுவை, குடும்ப உறவுகள், மர்மம், துப்பறிதல், அறிவியல் உள்ளிட்ட பல வகையான கதைகள் தற்போது வரை வெளிவந்திருக்கின்றன.
மங்கா காமிக்ஸ் வகைகள், ஜப்பானிய மொழிகளில் இருந்து பிற மொழிகளுக்கும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றிற்கு எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர்.
பிரபலமான ஜப்பானிய மங்கா கதைகளில் "டிராகன் பால்" (Dragon Ball) எனும் படக்கதைகள் முன்னணியில் உள்ளன.
அகிரா டொரியாமா (Akira Toriyama) என்பவர் எழுதி உருவாக்கிய "டிராகன் பால்" கதைகள், பல மங்கா எழுத்தாளர்களுக்கு படைப்பாற்றலில் ஆர்வம் தந்து, அவரைப் போலவே எழுத்தாளர்களாக உருவெடுக்க வழிவகுத்தது.
இதுவரை, உலகெங்கும் 260 மில்லியனுக்கும் மேல் "டிராகன் பால்" கதைகள் விற்பனை ஆகி உள்ளன.
1984ல் "டிராகன் பால்", தொலைக்காட்சி தொடர் வடிவில் உருவானது. இதை தொடர்ந்து பல "டிராகன் பால்", திரைப்படங்களும், வீடியோ விளையாட்டுகளும் உருவாகின.
"சோன் கோகு" (Son Goku) எனும் சிறுவன், டிராகன்கள் உள்ள பல மந்திர பந்துகளை ஒவ்வொன்றாக சேகரித்து, பூமியை அழிக்க நினைக்கும் சக்திகளிடமிருந்து பூமியை காப்பாற்ற போராடுவதே இக்கதைகளின் மையக்கரு.
இந்நிலையில், "சப்டியூரல் ஹீமடோமா" (subdural hematoma) எனும் மூளையில் உண்டாகும் ஒரு ஆபத்தான நிலையினால், மார்ச் 1 அன்று, தனது 68-வது வயதில் அகிரா டொரியாமா காலமானார்.
குறுகிய நேரத்தில் மூளையில் ரத்தம் பெருமளவில் கசிந்து, மூளையில் நிறைந்து, மூளைத்திசுக்களுக்கு அழுத்தம் தரும் நிலையை சப்டியூரல் ஹீமடோமா என மருத்துவர்கள் அழைக்கின்றனர்.
80களில் தங்களின் குழந்தைப் பருவ காலத்தில், டொரியாமாவின் மங்கா படக்கதைகளை விரும்பி படித்து, அவற்றை தங்களின் வாழ்வின் ஒரு பகுதியாக கருதும் டொரியாமாவின் ரசிகர்களுக்கு அவரது மரணச் செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ராணுவத்தில் தற்போது தேவைக்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே வீரர்கள் உள்ளனர்
- பெண்கள், சீருடையில் உள்ள போது தோள்களில் விழாதவாறு வைத்து கொள்ளலாம்
கிழக்காசிய நாடான ஜப்பானில், மக்கள் தொகை வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பல துறைகளில் பணியாற்றுவதற்கு போதிய இளைஞர்கள் இல்லாமல் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) குறைந்து, உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடு எனும் நிலையிலிருந்து 4-வது நிலைக்கு ஜப்பான் தள்ளப்பட்டது. மேலும், ராணுவத்தில் சேர்வதற்கும் போதுமான அளவு இளைஞர்கள் பல்வேறு காரணங்களால் ஆர்வம் காட்டுவதில்லை.
ராணுவ வீரர்களின் எண்ணிக்கை, நாட்டின் தேவைக்கு 10 சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே உள்ளதாக ராணுவ தரப்பில் தெரிவித்தது.
குறைந்த ஊதியத்தினால் இளம் வயது ஆண்களும், பாலியல் துன்புறுத்தல் அச்சங்களால் பெண்களும் ராணுவத்தில் சேர தயக்கம் காட்டுவதாக செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில், ராணுவத்தில் இளம் வயது ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்வதை ஊக்குவிக்கும் வகையில் பல கட்டுப்பாடுகளை நீக்க ஜப்பான் முடிவு செய்துள்ளது.
அதில் ஒன்றாக, வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து, இனி ராணுவத்தில் சேரும் இளைஞர்கள் சற்று நீளமான முடி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
இனி புதிய வீரர்கள், தலையின் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் குறைவாகவும், மத்தியில் நீளமாகவும் வைத்து கொள்ளலாம்.
பெண்கள், சீருடையில் உள்ள போது தோள்களில் விழாத அளவிற்கும், ஹெல்மெட் அணியும் போது தடையாக இல்லாதவாறும், நீளமாக வைத்து கொள்ளலாம்.
சீனா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்களை சமாளிக்க அனைத்து வழிமுறைகளையும் ஜப்பான் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
"அனைத்து துறைகளிலும் பணியாளர்கள் தட்டுப்பாடு நிலவும் காலகட்டத்தில் தனியார் துறையுடன் போட்டியிட்டு இளைஞர்களை ஈர்க்கும் நிலையில் உள்ளோம்" என பாதுகாப்பு அமைச்சர் மினோரு கிஹாரா (மினொரு Kihara) தெரிவித்தார்.
- ஜப்பானிய மக்கள் தொகை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது
- ஜப்பானில் அனைத்து துறைகளிலும் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது
கிழக்கு ஆசியாவில் வடமேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடு, ஜப்பான்.
உலக பொருளாதாரத்தில், உள்நாட்டு மொத்த உற்பத்தி (Gross Domestic Product) அடிப்படையில், ஜப்பான், வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ஆகிய நாடுகளுக்கு பிறகு 3-ஆம் இடத்தில் இருந்து வந்தது.
ஆனால், கடந்த சில வருடங்களாக பல சிக்கல்களால் ஜப்பானின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது.
தற்போது, ஜப்பானிலிருந்து வெளிவந்திருக்கும் அதிகாரபூர்வ தகவல்களின்படி, ஜப்பானிய பொருளாதாரம், கடந்த ஆண்டை விட 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
இருந்தும், இதுவரை தக்க வைத்திருந்த 3-ஆம் இடத்திலிருந்து நகர்ந்து, 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஜெர்மனி, உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது.
அதிகாரபூர்வ தகவல்களின் அடிப்படையில், அமெரிக்க டாலர் மதிப்பில் 2023க்கான ஜப்பானிய ஜிடிபி, $4.2 டிரில்லியன் எனும் அளவில் உள்ளது. $4.5 டிரில்லியன் எனும் மதிப்பில் ஜெர்மனி 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஒரு தசாப்தத்திற்கு முன் 2-வது இடத்தை சீனாவிடம் பறி கொடுத்தது ஜப்பான் என்பது குறிப்பிடத்தக்கது.
2022 மற்றும் 2023 ஆண்டுகளில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பானிய "யென்" (Yen) கரன்சியின் மதிப்பு முறையே 18 சதவீதம் மற்றும் 7 சதவீதம் என சரிந்தது.
ஜப்பானின் மத்திய ரிசர்வ் வங்கியான பேங்க் ஆஃப் ஜப்பான் (Bank of Japan), வட்டி விகிதத்தை பூஜ்ஜியத்திற்கும் குறைவாகவே வைத்துள்ளதால், கரன்சியின் மதிப்பு பெரிதும் குறைந்தது.
மேலும், ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாட்டு பொருளாதாரமும் ஏற்றுமதியை சார்ந்தவை.
"சூரியன் முதலில் உதிக்கும் பூமி" (Land of Rising Sun) என அழைக்கப்படும் ஜப்பானில், அண்மைக்காலமாக, மக்கள் தொகை எண்ணிக்கை குறைவதாலும், வயதானவர்கள் அதிகரிப்பதாலும், தம்பதியர் குழந்தைகளை பெற்று கொள்ள விரும்பாததாலும், அனைத்து துறைகளிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் உள்நாட்டு உற்பத்தி பெரிதும் குறைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கையாலும், வளர்ச்சிக்கான வாய்ப்புகளாலும், இந்தியா, இந்த தசாப்தத்திற்குள் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து 3-ஆம் இடத்தை பிடிக்கும் என பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
- தனது 5-வது வயதில் தாயாருடன் ஜப்பான் நாட்டில் குடி புகுந்தார் கரோலினா
- உண்மையை மறைத்தது தவறு என கரோலினா கூறியதாக "மிஸ் ஜப்பான் சங்கம்" அறிவித்தது
கடந்த ஜனவரி 22 அன்று ஜப்பானில் நடைபெற்ற "மிஸ் ஜப்பான்" போட்டியில், கரோலினா ஷீனோ (Karolina Shiino) எனும் 26 வயது இளம் பெண் பட்டம் வென்றார்.
உக்ரைன் நாட்டில் பிறந்த கரோலினா, தனது 5-வது வயதில் தாயாருடன் ஜப்பானில் குடி புகுந்தார். நகோயா பகுதியில் வளர்ந்த கரோலினா, அவரது மாற்றாந்தந்தையின் பெயரை இணைத்து கொண்டுள்ளார்.
உக்ரைனில் பிறந்திருந்தாலும், கரோலினா ஜப்பானிய மொழியில் சரளமாக எழுதவும் பேசவும் தெரிந்தவர்.
ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் இல்லை என்பதுடன் அவர் ஜப்பானிய பெண்ணை போன்றே இல்லை என்பதால் அழகி போட்டியில் அவருக்கு பிரதிநிதித்துவம் கிடைத்தது தவறு என ஒரு சாராரும், அயல்நாட்டை பூர்வீகமாக கொண்ட ஒரு பெண் ஜப்பானிய போட்டியில் வென்றது பாராட்டுக்குரியது என வேறொரு தரப்பினரும் இவரது வெற்றியை குறித்து கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், ஷுகன் பன்ஷுன் (Shukan Bunshun) எனும் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் கரோலினாவிற்கு ஒரு திருமணமான ஆணுடன் நட்பை கடந்த உறவு இருந்ததாக செய்தி வெளிவந்தது.
இதை தொடர்ந்து தற்போது அழகி போட்டியை நடத்திய "மிஸ் ஜப்பான் சங்கம்", பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட அந்த ஆண் திருமணமானவர் என முன்னரே அறிந்திருந்ததாகவும் அதை மறைத்த தவறை ஒப்பு கொண்ட கரோலினா தனது "மிஸ் ஜப்பான்" பட்டத்தை திரும்ப அளித்து விட்டதாகவும் தெரிவித்தது.
இது குறித்து கரோலினா, "என்னால் விளைந்த சிக்கல்களுக்கும், என்னை நம்பியவர்களை ஏமாற்ற நேர்ந்ததற்கும் நான் வருத்தம் தெரிவிக்கிறேன்" என தெரிவித்தார்.
- விமானங்கள் ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு சொந்தமானவை ஆகும்.
- விமான விபத்துகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.
ஜப்பான் விமான நிலையத்தில் இரு விமானங்கள் உரசி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. திடீர் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் உரசி கொண்ட விமானம் ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு சொந்தமானவை என்று தெரியவந்துள்ளது.
ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு சொந்தமான இரு விமானங்கள் ஒசகாவில் உள்ள இடாமி விமான நிலையத்தில் உரசி கொண்டுள்ளன. இந்த சம்பவம் காரணமாக இரு விமானங்களின் இறக்கை பகுதியில் கீறல்கள் ஏற்பட்டன. எனினும், இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த ஆண்டு துவக்கம் முதலே ஜப்பானில் விமான விபத்துகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், சிறிய ரக விமானம் ஒன்று ஜனவரி 2-ம் தேதி விபத்தில் சிக்கிய சம்பவம் அரங்கேறியது.
- சுமார் 30 லட்சம் அயல்நாட்டினர் ஜப்பானில் வசிக்கின்றனர்
- எங்களை ஜப்பானியராக பார்க்காமல் குற்றவாளிகளாக நடத்துகின்றனர் என்றார் சையத்
சமீப சில ஆண்டுகளாக அயல்நாடுகளிலிருந்து பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு ஜப்பானிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு கணக்கெடுப்பின்படி, ஜப்பானில் வசிக்கும் ஜப்பானியர் அல்லாதவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30 லட்சம் எனும் அளவை எட்டியுள்ளது.
இந்நிலையில், ஜப்பான் காவல்துறை, அங்கு வாழும் அயல்நாட்டினரை, இனத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டி நடத்துவதாக அந்நாட்டில் வாழும் சிலர், சிவில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அயல்நாட்டினரில் ஒரு சிலரிடம் இனப்பாகுபாடு காட்டுவதாகவும், இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரி இந்திய வம்சாவளியை சேர்ந்த மேத்யு (Matthew), ஆப்பிரிக்க-அமெரிக்கரான மாரிஸ் (Maurice) மற்றும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சையத் ஜைன் (Syed Zain) எனும் 3 பேர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
டோக்கியோ மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.
26 வயதான சையத், "நான் ஒரு ஜப்பானிய குடிமகன். ஆனால், காவல்துறையினர் என்னை பலமுறை தடுத்து நிறுத்தி எனது இன விவரக்குறிப்பை கேட்கின்றனர். எனது வீட்டின் முன் தேவையற்ற முறையில் என்னை சோதனை செய்தனர். எங்களை ஒரு ஜப்பானியராக காவல்துறையினர் அடையாளம் காண்பதில்லை; ஒரு குற்றவாளியை போல் நடத்துகிறார்கள்" என குற்றம் சாட்டினார்.
இரண்டு தசாப்தங்களாக ஜப்பானில் வசித்து வரும் சையத், ஜப்பானிய பள்ளிகளில் பயின்று, அந்த மொழியில் சரளமாக பேசக்கூடியவர்.
வழக்கு தொடர்ந்துள்ள மூவரும் சுமார் ரூ.16.5 லட்சம் ($20,000) நஷ்ட ஈடு கோரியுள்ளனர்.
இது போன்ற வழக்கு ஜப்பானில் தாக்கல் செய்யப்படுவது இப்போதுதான் முதல் முறை என மூவரின் வழக்கறிஞர் மொடோகி டானிகுசி தெரிவித்தார்.
- தென்கொரிய விமானத்தின் முன்பக்க இறக்கையில் சேதம் அடைந்தது.
- விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டு வேறுவிமானம் மூலம் அவர்கள் அனுப்பப்பட்டனர்.
டோக்கியோ:
ஜப்பானின் வடக்கு ஹோக்காய்டோ மாகாணம் சப்பரோ தீவில் உள்ள நியூ சித்தோஸ் விமானநிலையத்தில் இருந்து தென்கொரியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று 289 பயணிகளுடன் புறப்பட தயாரானது.
விமான ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டு வானில் எழும்ப முயன்றபோது அங்கே பயணிகள் யாரும் இல்லாமல் நின்று கொண்டிருந்த கேத்தே பசிபிக் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்துடன் மோதியது. இந்த விபத்து காரணமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் தென்கொரிய விமானத்தின் முன்பக்க இறக்கையில் சேதம் அடைந்தது. இதனால் கொரிய விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டு வேறுவிமானம் மூலம் அவர்கள் அனுப்பப்பட்டனர். இதனால் அந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
அங்கு நிலவிய கடுமையான பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் ஜப்பானின் சிவில் விமான போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
- விமானத்தில் இருந்த பயணி ஒருவர் எஞ்சினில் இருந்து தீ விபத்து.
- விமானத்தை ஆய்வு செய்து வருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் இருந்து 122 பயணிகளுடன் போயிங் 737-800 ரக விமானம் கடந்த புதன்கிழமை அன்று காலை சுமார் 9.30 மணியளவில் தென் கொரியாவில் உள்ள இன்சியோன் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கும்போது எதிர்பாராத விதமாக ஒரு பறவை ஸ்டார்போர்டு என்ஜினுக்குள் மோதி சிக்கி கொண்டது.
இதைதொடர்ந்து, கட்டுப்பாட்டு குழு விமானத்தை பராமரிக்க முயன்றபோது, எஞ்சினிலிருந்து தீப்பிழம்பு உருவாகி, போயிங் 737-800ன் வால் பகுதியை கிட்டத்தட்ட நெருங்கி இருக்கிறது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறப்பட்டபோது, "பயணிகள் ஏதோ எரியும் வாசனையை உணர்ந்ததால், பணியாளர்கள் விமானத்தை தரையிறக்க முயற்சிக்குமாறு கட்டாயப்படுத்திவுள்ளனர்.
விமானத்தில் இருந்த பயணி ஒருவர் எஞ்சினில் இருந்து தீப்பிடிப்பதையும், வெடிப்பதையும் படம் பிடித்துள்ளார் மற்றும் தரையில் இருந்து எடுக்கப்பட்ட மற்றொரு காட்சியில், புகைபிடித்த விமானம் விமான நிலையத்தை நோக்கி வேகமாக இறங்கியது.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் விமானத்தை ஆய்வு செய்து வருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
- டோயாமா விமான நிலையம் நோக்கி ஏ.என்.ஏ.-வின் போயிங் 737-800 விமானம் புறப்பட்டது.
- அவசர அவசரமாக நியூ சிடோஸ் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
ஜப்பானை சேர்ந்த ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு (ஏ.என்.ஏ.) சொந்தமான விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சப்போரோவின் நியூ சிடோஸ் விமான நிலையத்தில் இருந்து டோயாமா விமான நிலையம் நோக்கி ஏ.என்.ஏ.-வின் போயிங் 737-800 விமானம் புறப்பட்டது.
பயணத்தை துவங்கிய சில நிமிடங்களில் இந்த விமானத்தின் காக்பிட் பகுதி கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் அவசர அவசரமாக நியூ சிடோஸ் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
இந்த விமானத்தில் மொத்தம் 59 பயணிகள், ஆறு பணியாளர்கள் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் மற்றும் பணியாளர்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. விமான கண்ணாடியில் ஏற்பட்ட விரிசலால் விமானத்தை இயக்குவதில் எந்த சிரமமும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக அலாஸ்கா ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான போயிங் 737-9 விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அவசர அவசரமாக தரையிறங்கிய சம்பவம் அரங்கேறியது. இந்த விமானத்தின் கதவுகளில் ஒன்று நடுவழியில் திறந்ததே இதற்கு காரணம் ஆகும். இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானத்தின் கதவு தனியே பிரிந்து கீழே விழுந்தது குறிப்பிடத்தக்கது.
- நிலநடுக்கமானது ஹாங்சோவின் மேற்கு கடற்கரை அருகே 46 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
- சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
ஜப்பானின் ஹாங்சோ பகுதியில் மீண்டும் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 2.29 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கமானது ஹாங்சோவின் மேற்கு கடற்கரை அருகே 46 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
ஆனால் இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
- சுனாமி அலைகளால் ஊருக்குள் கடல் நீர் புகுந்தது.
- நிலப்பரப்பு மேற்கு நோக்கி நகர்ந்து இருக்கிறது.
ஆங்கில புத்தாண்டு தினத்தில் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் மிக கடுமையான நிலநடுக்கம் ஜப்பானை ஒருவழியாக்கியது. ஜப்பானில் ஜனவரி 1-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 7.5 ஆக பதிவானது. இதன் காரணமாக அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் சுனாமி அலைகளால் ஊருக்குள் கடல் நீர் புகுந்தது.
இந்த நிலையில், ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டின் நிலப்பரப்பு மேற்கு நோக்கி 130 செ.மீ. வரை நகர்ந்து இருக்கிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் நிலப்பரப்பு ஒரு மீட்டருக்கும் அதிகமாக நகர்ந்து இருக்கிறது. இது பற்றிய தகவல்கள் அந்நாட்டில் உள்ள அதிநவீன ஜி.பி.எஸ். ஸ்டேஷன்கள் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 62 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும் 300-க்கும் அதிகமானோருக்கு காயங்களும், 20 பேருக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுவரை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 31 ஆயிரத்து 800 பேர் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள், அவசகர கால பணிகள் மற்றும் அடுத்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஃபுமியோ கிசிடா தலைமையிலான அரசு முக்கிய ஆலோசனை நடத்தவிருக்கிறது. ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- ஜப்பானில் பயணிகள் விமானம் தீப்பற்றி எரிந்தது.
- விமான நிலையத்தில் பதற்ற சூழல் உருவானது.
ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஹனோடா விமான நிலையத்தில் ஓடுபாதையில் தரையிறங்கிய பயணிகள் விமானம் ஒன்று வேகத்தை குறைத்துக் கொண்டே வந்தபோது, நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கடலோர காவல்படையின் விமானத்தின் மீது மோதியது. இதன் காரணமாக பயணிகள் விமானம் தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்து காரணமாக விமான நிலையத்தில் பதற்ற சூழல் உருவானது. தீப்பற்றி எரிந்த பயணிகள் விமானத்தில் 350-க்கும் அதிகமானோர் சிக்கிக் கொண்டனர். இவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர் என ஏற்கனவே தகவல் வெளியானது. எனினும், கடோலர காவல் படைக்கு சொந்தமான விமானத்தில் இருந்த பணியாளர்கள் ஐந்து பேர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்த நிலையில் தீப்பற்றி எரியும் விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த வீடியோவில், தீப்பற்றி எரியும் விமானத்தில் இருந்து அவசரகால பலூன் வழியே பத்திரமாக கீழே இறங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விமானம் கொழுந்துவிட்டு எரியும் போது, பயணிகள் அதில் இருந்து வெளியேறும் காட்சிகள் பார்க்கவே பயத்தை ஏற்படுத்துகின்றன.
பாதுகாப்பு பலூன் வழியே விமானத்தில் இருந்த 367 பயணிகள், 12 பேர் அடங்கிய பணியாளர் குழு என அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் எட்டு பேர் சிறுவர்கள் என்றும் கூறப்படுகிறது. கடலோர காவல்படை விமானத்தில் மொத்தம் ஆறு பேர் இருந்த நிலையில், ஒருவர் மட்டுமே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
Evacuation of #JL516 via slides and while engine #2 is still running. All 379 occupants on board escaped and survived. The status of the six people aboard the Coast Guard DHC-8 aircraft is still uncertain at this point. pic.twitter.com/ESBS4FY00a
— JACDEC (@JacdecNew) January 2, 2024