என் மலர்
செய்திகள்
மக்கள் பிரச்சினைக்காக பேசினால் சட்டசபையில் இருந்து வெளியேற்றுகிறார்கள்: துரைமுருகன் பேச்சு
விழுப்புரம்:
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் ‘தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் விழுப்புரம் பெரியார் சிலை அருகில் நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் தலைமை கழக முதன்மை செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
தற்போது நாடு, சட்டமன்றம் கெட்டுப்போய் இருக்கிறது. மந்திரிகள், சபாநாயகர் கெட்டு போய் உள்ளனர். நாம் எப்படி ஆண்டாலும் மக்கள் நம்மை ஆட்சிக்கு கொண்டு வருவார்கள் என்கிற முடிவுக்கு வந்து விட்டனர். சட்டசபை என்பது மரியாதைக்குரிய பொருளாக காட்டப்பட வில்லை. எதிர்க்கட்சி என்று ஒன்று இருந்தால் தான் ஜனநாயகமாகும். அது இல்லாவிட்டால் சர்வாதிகாரமாகும். எதிர்கட்சியே இருக்க கூடாது என்று கருதுகிறார்கள்.
தமிழகத்திலேயே அதிகமாக கரும்பு விளையும் மாவட்டம் விழுப்புரம் மாவட்டமாகும். இங்கு 28.3 சதவீதம் கரும்பு விளைகிறது. ஆனால் கடந்த முறை பயிர் செய்த கரும்புக்கே உரிய பணம் கொடுக்காமல் பாக்கி வைத்துள்ளனர். இதுபற்றித்தான் சட்டசபையில் பொன்முடி கேட்டார். அதற்கு சபாநாயகர் கரும்பு பற்றி நீங்கள் பேசக்கூடாது என்று சொல்கிறார்.
எதிர்கட்சி என்கிறவன் கேள்வி என்ற வாளை ஏந்தி வருவான். அதை ஆளும் கட்சியினர் கேடயம் என்கிற பதிலால் தாங்க வேண்டும். ஆனால் சட்டசபையில் அப்படி நடப்பதில்லை. நாங்கள் தவறு செய்து வெளியேறவில்லை. மக்கள் பிரச்சினைக்காக அவர்களின் கோரிக்கைகளை நியாயமாகதான் கேட்கிறோம் ஆனால் எங்களை அவையில் இருந்து வெளியேற்றுகிறார்கள்.
இதற்கு சபாநாயகர் உடந்தை. தற்போதைய சபாநாயகருக்கு சபாநாயகருக்கான அனுபவம் 1½ வருடம் தான். ஆனால் எனக்கு 44 வருடம் அனுபவமாகும். நான் 40 பட்ஜெட்டில், 34 போலீஸ் மானிய கோரிக்கையில் பேசி இருக்கிறேன்.
எதிர்கட்சி தலைவர் என்பவர் மந்திரி அந்தஸ்துக்கு உள்ளவர் ஆவார். ஆனால் இங்கு எதிர்கட்சி தலைவரை குண்டு கட்டாக தூக்கி சபையில் இருந்து வெளியேற்றுகிறார்கள். இதுதான் ஜனநாயகமா? நீங்களா ஜனநாயகத்தை காப்பாற்ற போகிறீர்கள்?.
சட்டசபையில் நான் தனியாக பேசினேன் என்கிறார் ஜெயலலிதா. மேலும் தற்போது கருணாநிதி சட்டசபைக்கு வரமுடியுமா? என்று கேட்கிறார். தற்போது எங்கள் தலைவர் கருணாநிதிக்கு 94 வயதாகும். அப்படியே அவர் வந்து பேசினாலும், அவரை கண்ணியமாக வெளியே அனுப்ப மாட்டீர்கள். நாங்கள் யாரையும் புண்படுத்தவில்லை, கேலி செய்யவில்லை. மக்கள் பிரச்சினைக்காக தான் போராடி வருகிறோம். ஜனநாயகத்துக்காக தான் பேசி வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.