search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்தது ஏன்?: திருமாவளவன் பேட்டி
    X

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்தது ஏன்?: திருமாவளவன் பேட்டி

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்தது ஏன்? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கமாக பதில் அளித்துள்ளார் என்பதை கீழே பார்ப்போம்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ‘மாலைமலர்’ நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவை நீங்கள் சந்தித்தது ஏன்?

    பதில்:- அ.தி.மு.க. பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலாவை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தோம். இதற்கு முன்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக அவர் இருந்தார்.

    இப்போது அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஆகவே எமது வாழ்த்துக்களை நேரில் சந்தித்து தெரிவித்தோம்.

    கே:- சசிகலா பொதுச் செயலாளராக ஆனதற்கு அ.தி.மு.க.விலும், பொது மக்களிடமும் எதிர்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறதே?

    ப:- ஜெயலலிதாவுக்கு உற்ற தோழியாக உடன்பிறவா சகோதரியாக 33 ஆண்டுகள் உடன் இருந்திருக்கிறார். அவர் மீதான நம்பிக்கையின் அடிப்படையில்தான் அ.தி. மு.க.வினர் அவரை பொதுச் செயலாளராக ஏற்று கொண்டுள்ளனர்.

    அது அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம். சசிகலாவுக்கு அ.தி.மு.க.வில் பெரிய அளவில் எதிர்ப்பு இருப்பதாக தெரியவில்லை. பொதுமக்கள் இடையேயும் அவருக்கு எதிராக விமர்சனங்கள் இருந்தாலும் பெரிய அளவில் எதிர்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

    கே:- கடந்த காலங்களில் அ.தி.மு.க.வை விமர்சித்த நீங்கள் சசிகலாவை சந்தித்ததில் அரசியல் நோக்கம் ஏதும் உண்டா?

    ப:- அரசியல் தொடர்பாக அ.தி.மு.க. மீது எனக்கு நிறைய விமர்சனங்கள் உண்டு. கருத்து வேறுபாடுகளும் உண்டு. ஆனாலும் சசிகலாவை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்லியதற்கு ஒரு அரசியல் காரணம் உண்டு.

    அது என்னவென்றால் அ.தி.மு.க.வுக்கு எதிராக சிலர் திட்டமிட்டு சதி செய்வது மூலம் அ.தி.மு.க.வை பலவீனப்படுத்த முடியும் என்றும், அதன்மூலம் அ.தி.மு.க. இடத்தை கைப்பற்றி விட முடியும் என்றும், சில சாதிய, மதவாத சக்திகள் திட்டமிடுவதாக தெரிகிறது.

    குறிப்பாக சசிகலா தலைமையை வரவிடாமல் ஒழிப்பதன் மூலம் அ.தி. மு.க.வை சிதறடித்து விட முடியும் என்று ஒருசிலர் கணக்கு போடுகின்றனர். இந்த நிலையில் சாதி, மதவாத சக்திகளின் சதி திட்டத்தை முறியடிப்பதற்கு சசிகலா தலைமைய விடுதலை சிறுத்தைகள் வரவேற்கிறது.

    கே:- இதனை இன்னும் விளக்க முடியுமா?

    ப:- அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நாங்கள்தான் நிரப்புவோம் என்று வெளிப்படையாக பாரதீய ஜனதாவும், பா.ம.க.வும் பேசி வருகின்றன. தமிழக ஆட்சி நிர்வாகத்தில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாகவும், விவாதிக்கப்படுகிறது. இந்த நிலையில்தான் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அ.தி.மு.க.வை பாதுகாத்திட சசிகலா தலைமை அவசியம் என்று சுட்டி காட்டி இருக்கிறார். அவர் எந்த நோக்கத்தில் சசிகலாவை ஆதரிக்கிறாரோ அதே அணுகுமுறையில்தான் விடுதலை சிறுத்தையும் இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளது.

    கே:- அ.தி.மு.க. தலைமை கழகத்தில் சசிகலா உரையாற்றியது பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

    ப:- அவர் ஆற்றிய உரை மிகவும் நிதானமாக இருந்தது. பொறுப்புணர்வுடனும் தொலைநோக்கு பார்வையுடனும் அவர் தனது உரையில் சில செய்திகளை பதிவு செய்து இருக்கிறார். குறிப்பாக ஜெயலலிதாவை பின்பற்றி சாதி சமய சார்பற்ற அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்வோம் என்று கூறி இருக்கிறார்.

    ஜெயலலிதா தலைமை சாதி, சமய சார்பற்ற வகையில் அ.தி.மு.க.வில் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து கட்டுக்குள் வைத்து இருந்தது. அதனை சசிகலா உரையில் குறிப்பிட்டு இருப்பது குறிப்பிட்ட சாதியினரின் ஆதிக்கத்திற்கு இடம் அளிக்க மாட்டோம் என்பதை தொலைநோக்கு பார்வையுடன் கூறி இருக்கிறார். அதனை நாங்கள் நேரில் சந்தித்தபோது சுட்டிக் காட்டி பாராட்டினோம். துணிச்சலான தலைமை பணியை ஒரு பெண்மணி ஏற்று வழிநடத்தி செல்வதை வாழ்த்தினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×