என் மலர்
செய்திகள்
சட்டசபையில் மறுவாக்கெடுப்பு நடத்த ஜனாதிபதியிடம் மனு கொடுப்போம்: மு.க.ஸ்டாலின் பேட்டி
சென்னை:
சட்டசபையில் நேற்று நடந்த அமளியில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றியதில் பல எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டை கிழிந்து ரத்த காயம் ஏற்பட்டது.
இதில் எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் பலத்த காயம் அடைந்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று பார்த்தார்.
காவல்துறை அதிகாரிகளையே சட்டமன்றத்திற்குள் வரவழைத்து, சட்டமன்ற காவலர்களின் வெள்ளை நிற உடையணிந்து தி.மு.க வின் சட்டமன்ற உறுப்பினர் களையெல்லாம் பயங்கரமான முறையில் தாக்கினார்கள்.
அதில் முக்கியமாக எழும்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் தாக்கப்பட்டு மயக்கமடைந்து பேச்சு, மூச்சு இல்லாமல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இரண்டு நாட்கள் மருத்துவ மனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோல பல சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. உள்காயம் ஏற்பட்டிருக்கிறது. என்னுடைய சட்டையும் கிழிந்து தோள்பட்டையில் அடிபட்டதற்கு நாளை தான் மருத்துவமனை சென்று ஸ்கேன் எடுத்துப் பார்க்க இருக்கிறேன்.
கே:- இப்படி அடாவடி தனம் செய்தால் ஜெயித்து விடலாம் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக அமைந்துவிடாதா?
ப:- இந்த கேள்வியை என்னிடம் கேட்காமல் சசிகலாவின் பினாமியாகவும் முதல்-அமைச்சராகவும் இருக்கும் எடப்பாடி பழனிச் சாமியை சந்தித்து கேட்க வேண்டும்.
கே:- ஆளுங்கட்சியினரை மட்டும் வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குரல் வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியிருக்கிறார். அரசியல் சூழ்நிலையில் எப்படிப் பார்க்கிறீர்கள்?
ப:- தமிழகத்தைப் பொறுத்த வரையில் இது ஒரு கருப்பு நாள்.
கே:- இதுசம்பந்தமாக குடியரசுத் தலைவரை சந்திக்க வாய்ப்பிருக்கிறதா?
ப:- யோசித்துக் கொண்டு இருக்கிறோம். சட்டரீதியாக சந்திப்பதா, போராட்டம் மூலம் சந்திப்பதா, அல்லது மக்களை ஒன்று திரட்டி சந்திப்பதா என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம்.
கே:- மறு வாக்கெடுப்பிற்கு வாய்ப்பு இருக்கிறதா?
ப:- உடனடியாக இதனை ரத்து செய்ய வேண்டுமெனவும், அடுத்த தேர்தலை முறையாக நடத்த நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் மனு கொடுத்திருக்கின்றோம். தேவைப்பட்டால் ஜனாதிபதியையும் சந்தித்து மனு கொடுக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கின்றோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.