search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.டி.வி.தினகரனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் கவர்னரை 10-ந்தேதி சந்திக்கிறார்
    X

    டி.டி.வி.தினகரனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் கவர்னரை 10-ந்தேதி சந்திக்கிறார்

    டி.டி.வி.தினகரனை தொடர்ந்து மு.க.ஸ்டாலினும் கவர்னரை 10-ந்தேதி சந்திக்கிறார். இதனால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது.
    சென்னை:

    டி.டி.வி.தினகரனை தொடர்ந்து மு.க.ஸ்டாலினும் கவர்னரை 10-ந்தேதி சந்திக்கிறார். இதனால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கடந்த மாதம் ஒன்றிணைந்தனர். அதை ஏற்கமறுத்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டதால் உடனே சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று கூறினார். மற்ற எதிர்க்கட்சிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்திவந்தன.



    கடந்த மாதம் 27-ந்தேதி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி, கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் விஜயதரணி (காங்கிரஸ்), முகமது அபுபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) உள்ளிட்டோர் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்தனர்.

    மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட அந்த மனுவில், மெஜாரிட்டியை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

    தி.மு.க.வை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி தலைவர்களும் கடந்த 30-ந்தேதி கவர்னரை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினர். ஆனால், இதற்கு சட்டத்தில் இடமில்லை என்று கவர்னர் தெரிவித்ததாக திருமாவளவன் கூறினார்.

    அ.தி.மு.க.வில் தனி அணியாக இருக்கும் டி.டி.வி.தின கரன் தனது ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிலருடன் நேற்று கவர்னரை சந்தித்து பேசினார். அவரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது. எனவே சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது.

    எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் கவர்னரை சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர். வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு தி.மு.க. சார்பில் கவர்னர் மாளிகையில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

    அன்றைய தினம் மாலை 5 மணிக்கு அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கவர்னர் மாளிகை தெரிவித்தது.

    அப்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் கவர்னரை சந்தித்து ஏற்கனவே வலியுறுத்திய அதே கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த இருக்கின்றனர். கவர்னர் அளிக்கும் பதிலை பொறுத்தே, அடுத்து ஜனாதிபதியை சந்திப்பது குறித்து தி.மு.க. தரப்பில் முடிவெடுக்கப்பட இருக்கிறது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக அ.தி.மு.க.வின் ஒரு பிரிவு உள்பட தமிழகத்தின் அனைத்து கட்சிகளுமே மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று வற்புறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கவர்னர் அதே நிலைப்பாட்டில் இருப்பாரா? அல்லது வேறு முடிவு எடுப்பாரா? என்பது புதிராக உள்ளது.

    இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது. 
    Next Story
    ×