என் மலர்
செய்திகள்
ஆர்.கே.நகர் தேர்தல் வழக்கு: தலைமை நீதிபதி தலைமையில் அமர்வு விசாரிக்கும்
சென்னை:
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து, அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணியின் சார்பில், டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியின் சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ் உட்பட பலர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை வாரி வழங்கியதாக டி.டி.வி. தினகரன் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுத்ததற்கான முக்கிய ஆதாரங்கள் கிடைத்தன.
இதனடிப்படையில் ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்து, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஆர். கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இடைத் தேர்தலை நடத்தி முடிக்கப் வேண்டும் என்று ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.
இதனால், ஆர்.கே.நகர் தொகுதிக்கு எந்நேரமும் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில், ஐகோர்ட்டில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் அறிவிப்பு வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கடந்த வாரம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ஆர்.கே.நகர் தொகுதியில் சுமார் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளதால், இதை அகற்றாமல் தேர்தலை நடத்தக்கூடாது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருதுகணேஷ், ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யாமல், இந்த தொகுதிக்கு தேர்தலை அறிவிக்கக்கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரியிருந்தார்.
மேலும், இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நான் ரூ.5 லட்சம் வரை செலவு செய்தேன். ஆனால், பண பட்டுவாடாவில் ஈடுப்பட்டவர்களால், இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. எனவே அவர்களிடம் இருந்து இழப்பீடு பெறவும் எனக்கு உரிமை உள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதி, ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து, இந்த இடைத்தேர்தலை டிசம்பர் மாதத்துக்குள் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி முடிக்கும் என்று நம்புவதாக கருத்து தெரிவித்துள்ளது.
இதனால், இந்த வழக்கை நான் விசாரிக்க முடியாது. எனவே இந்த வழக்கையும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வின் விசாரணைக்கு பரிந்துரை செய்கிறேன்.
இந்த வழக்கை அந்த அமர்வு விசாரணைக்கு எடுக்கும் வரை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாது என்று நம்புகிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.