என் மலர்
செய்திகள்
வீடு தேடி வந்து உதைப்பேன் என்று தினகரன் மிரட்டினார் - தங்கமணி பரபரப்பு குற்றச்சாட்டு
ஜெயங்கொண்டம் :
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்காக காவிரியிலிருந்து தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக பல போராட்டங்களை நடத்தினார். ஆனால் அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரசும், மாநிலத்தில் ஆட்சி நடத்திய தி.மு.க.வும் அதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் ஜெயலலிதா போராடி பெற்ற தீர்ப்பினை அரசிதழில் வெளியிட செய்தார்.
ஆனால் அப்போது ஆட்சி நடத்தியவர்கள் அதனை அரசிதழில் வெளியிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இன்றைக்கு காவிரி நீர் வருகிறது என்றால் அதற்கு ஜெயலலிதாதான் காரணம்.
தற்பொழுது ஆட்சி நடத்தி வரும் நமது முதல்வர் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் முதல்வர் ஆனவுடன் அப்பதவியிலிருந்து நீக்கி ஆட்சியை கலைப்பதற்கு பல்வேறு வகையில் தி.மு.க. முயற்சி செய்து வருகிறது. ஆனால் தொண்டர்களின் ஆதரவோடு இன்று வரை சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது.
சொத்து சம்பந்தமான வழக்கு பெங்களூர் கோர்ட்டில் நடந்து கொண்டிருந்த போது, சசிகலா குடும்பம் ஆட்சியை பிடிப்பதற்காக பெங்களூரில் ஒரு ஓட்டலில் ரூம் போட்டு பேசியுள்ளனர். இதனை அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் பதிவு செய்து கொண்டு வந்து ஜெயலலிதாவிடம் கொடுத்ததால் அவர்களின் சுயரூபம் தெரிய வந்ததை அடுத்து சசிகலா உட்பட அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கினார்.
சில மாதங்கள் கழித்து சசிகலா, ஜெயலலிதாவிடம் எனது குடும்பம் இவ்வளவு பெரிய துரோகம் செய்யுமென்று நான் நினைக்கவில்லை. என்னை மன்னித்து மீண்டும் ஏற்றுக்கொள்ளுங்கள் என மன்னிப்பு கடிதம் கொடுத்து அனுப்பினார். மன்னிப்பு கொடுத்து மீண்டும் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார்.
ஆனால் கடந்த 2008-ம் ஆண்டே தினகரனை கட்சியை விட்டே நீக்கினார். இனிமேல் போயஸ்கார்டன் பக்கமே வரக்கூடாது, பெரியகுளம் தொகுதி பக்கமே செல்லக்கூடாது. சென்னையிலேயே இருக்கக்கூடாது என கட்டளையிட்டார். அது முதல் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை இருந்த இடம் தெரியாத அளவிற்கு இருந்து வந்தவர் இன்று ஜெயலலிதா இல்லை என்றதும் ஆட்சியை பிடிக்கலாம் என நினைக்கிறார்.
ஏன் தினகரனை நீக்கினார் என்றால், ஜெயலலிதா மீது தி.மு.க. ஒரு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் தினகரனும் இருக்கிறார். அப்போது ஜெயலலிதாவிற்கு தெரியாமலேயே தினகரன் லண்டனில் ஒரு ஓட்டல் வாங்கியுள்ளார். அந்த ஓட்டலையும் சேர்த்து வழக்கு போடப்பட்டுள்ளது.
அதில் தினகரனும் ஒரு குற்றவாளியாக இருக்கிறார். தினகரன் அப்போதே முடிவு செய்து விட்டார். எப்படியாவது ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும். அதன் பின் நாம் ஆட்சியை பிடித்து விடலாம் என்று கருணாநிதியுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்பட்டுள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது கருணாநிதியுடன் பேசிய தினகரன், என்னையும் லண்டன் சொகுசு ஓட்டலையும் வழக்கிலிருந்து விடுவித்து விடுங்கள். மற்றவர்களையெல்லாம் வழக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியதும் லண்டனில் உள்ள விலைமதிக்க முடியாத அந்த ஓட்டலை வழக்கில் இருந்து தி.மு.க.வினர் நீக்கி விட்டனர். ஒப்பந்தம் இல்லை என்று சொன்னால் தினகரனையும், ஓட்டலையும் வழக்கில் இருந்து நீக்கியிருப்பார்களா?
ஜெயலலிதா இறந்த பிறகு தமிழ்வருடப் பிறப்பையொட்டி கொறடா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உட்பட அனைவரும் தினகரன் வீட்டிற்கு சென்று அவரிடம், நீங்கள் இந்த இயக்கத்திற்கு வந்த பிறகு பிரச்சினைகள் அதிகம் வந்துவிட்டது. ஆகையால் நீங்கள் இந்த இயக்கத்தை விட்டு ஒதுங்கி இருங்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி -ஓ.பன்னீர்செல்வத்தை வைத்து நாங்கள் இந்த இயக்கத்தை நடத்திக்கொள்கிறோம் என்று சொன்னோம்.
அதற்கு தினகரன் உங்களுக்கு 60 நாட்கள் கெடு கொடுக்கின்றேன். அதன் பிறகு நான் மீண்டும் எனது விஸ்வரூபத்தை எடுப்பேன். அதற்குள் ஓ.பி.எஸ்.சிடம் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார்.
அதற்கும் மேல் தாமதமானால் என்னுடைய ஒரு முகத்தை மட்டும்தான் நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள். எனது இன்னொரு முகத்தை நீங்கள் பார்த்தது கிடையாது என்று கூறி, என்னையும், வேலுமணியையும் பார்த்து உங்கள் வீடு தேடி வந்து சட்டை காலரை தூக்கி உதைப்பேன் என்று சொன்னார்.
மேலும் அங்கிருந்து எழுந்து எங்களை அடிப்பதை போல் வந்தார். இதற்கு மேலும் அங்கிருந்தால் அசிங்கமாகி விடும் என்று நானும், வேலுமணியும் வெளியே வந்து விட்டோம். எங்கள் பின்னே அனைத்து அமைச்சர்களும் வந்து விட்டார்கள்.
தினகரன் முதல்வராவதற்கு கனவு காண்கின்றார். அம்மாவின் ஆத்மா இருக்கும் வரை சசிகலா குடும்பத்தில் எவரும் முதல்வராக முடியாது. இந்த கட்சியில் உரிமைக் கொண்டாடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. அம்மா ஒரு முறை சட்டமன்றத்தில் பேசிய போது, எனக்கென்று யாரும் கிடையாது, எனக்காக இருப்பவர்கள் ஒன்றரை கோடி தொண்டர்களும், 7½ கோடி தமிழக மக்களும்தான் எனது குடும்பம் என பேசினார். ஆனாலும் எனக்குப் பின்னால் 100 ஆண்டு காலம் இந்த ஆட்சி நடைபெற வேண்டும் என கூறினார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் நுழையும் போதெல்லாம் ஏமாந்த மக்கள் 20 ரூபாய் நோட்டை காண்பித்து 20 ரூபாய் இங்கே, 10 ஆயிரம் எங்கே என்று கேட்டுக்கொண்டிருக்கின்ற நிலைமை இருக்கின்ற காரணத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிக்கு கூட செல்லமுடியாத சட்டமன்ற உறுப்பினர்தான் தினகரன்.
இவ்வாறு அவர் பேசினார். #ADMK #MinisterThangamani