என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
செய்திகள்
![வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச வேண்டும் - ராமதாஸ் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச வேண்டும் - ராமதாஸ்](https://img.maalaimalar.com/Articles/2018/Jul/201807211515233760_Ramadoss-says-lorry-strike-lorry-owner-speech_SECVPF.gif)
வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச வேண்டும் - ராமதாஸ்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நெடுஞ்சாலைகளுக்கான சுங்கவரி வசூலிப்பு முறையில் மாற்றம் செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை காலாண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
வேலை நிறுத்தத்தின் பாதிப்புகள் வெளிப்படையாக தெரியத் தொடங்கி விட்ட நிலையில், அதை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
ஆனால், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக லாரி உரிமையாளர்களை மத்திய அரசு இதுவரை பேச்சு நடத்தக் கூட அழைக்காததால், வேலை நிறுத்தம் தீவிரமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சென்னை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட சந்தைகளுக்கு கொண்டு வரப்படவில்லை. அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் நடமாட்டமும் தடைபட்டுள்ளது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201807211515233760_1_lorry._L_styvpf.jpg)
இந்தியா முழுவதும் 65 லட்சம் லாரிகளும், தமிழ் நாட்டில் 4.50 லட்சம் லாரிகளும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டிருப்பதால் போராட்டம் முழுமையடைந்திருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான மூலப் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், ஆடைகள், மோட்டார்கள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட்ட இடங்களில் தேங்கிக்கிடக்கின்றன.
வேலை நிறுத்தத்தால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி நிறுவனங்களுக்கு பலநூறு கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் அடுத்த சில நாட்களுக்கு நீடித்தால் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயருவதை தடுக்க முடியாது. இப்படியாக அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வேலைநிறுத்தம் நீடிப்பதை விட, உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்படுவது தான் சரியானதாகும்.
எனவே, இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் மத்திய, மாநில அரசுகள் இணைந்து லாரி உரிமையாளர் சங்கப்பிரதிநிதிகளை அழைத்து பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #LorryStrike