என் மலர்
செய்திகள்
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி உள்பட 10 பேரை குறி வைத்து தோற்கடிப்போம் - தினகரன்
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் நிரூபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற பொதுத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் ஒன்றாக வரும் என்று உறுதியாக நம்புகிறோம். சட்டமன்றம் வாரியாகவும் பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறோம். உறுப்பினர் சேர்க்கை தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதிகமான தொகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்கள்.
ஆகஸ்ட்15-ந்தேதிக்குள் முழுமையாக உறுப்பினர் சேர்க்கை நிறைவேறிவிடும். 2 கோடிக்கு மேலாக உறுப்பினர்கள் சேர்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இப்பொழுது பாராளுமன்றத் தேர்தல் நிச்சயம் வரும். அதற்காக 6 மண்டல பொறுப்பாளர்கள், பாண்டிச்சேரி உள்பட 40 பாராளுமன்ற தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறோம்.
எடப்பாடி தொகுதி மட்டுமல்ல; 234 தொகுதிகளிலும் சிறப்பு கவனம் செலுத்துவோம். அதிலும் துரோகிகள் பட்டியலில் முக்கியமான 10 பேருக்கு மேல் இருக்கிறார்கள்.
ஜனநாயக முறைப்படி அவர்களை படுதோல்வி அடைய செய்ய வேண்டும் என்பதற்காக கடுமையான முயற்சியில் இருக்கிறோம். 10 தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். எடப்பாடி தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்களோடு யாரும் கிடையாது. நண்பர்களாக வந்து பார்த்து செல்கின்றனர். யார் மாற்றி ஓட்டு போட்டார்கள் என்பது எனக்கு தெரியாது.
கடந்த வருடம் 2015 பிப்ரவரி 15-ந்தேதி அன்று பொதுச்செயலாளர் சசிகலா சிறைச்சாலைக்கு சென்றார். அதன் பிறகு அப்பொழுது 4 அமைச்சர்கள் சசிகலாவை பார்க்க என்னுடன் பெங்களூர் வந்தார்கள்.
அமைச்சர் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, காமராஜ் ஆகியோர் வந்தார்கள். அப்பொழுது பிப்ரவரி 24-ந்தேதி பிரதமர் கோயம்புத்தூர் வந்தார். ஈசா பவுண்டேசன் நிகழ்ச்சிக்காக வந்தார். அதற்கு முன்பாக நான் வரவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எதனால் வரவில்லை என்று கேட்டேன். ராமலிங்கம் என்பவர் கைதாகியிருக்கிறார். எனது மகன் மிதுன் சகலை. அவர்கள் சேகர்ரெட்டி விஷயத்தில் கைதாகியிருக்கிறார்கள். எந்நேரமும் எனக்கு ஆபத்து இருக்கலாம். அதனால் வரவில்லை என்றார் பழனிசாமி.
இதுபோன்ற ஆபத்தில் இருப்பவர் எதற்கு முதல்- அமைச்சர் பதவிக்கு ஒத்துக் கொண்டீர்கள்? வேண்டாம் என்றால் பிரச்சினையே இல்லாத ஒருவரை நியமித் திருக்கலாமே என்றேன்.
நான் முதல்-அமைச்சராக நினைத்திருந்தால் செப்டம்பர் 21-ந்தேதி 2001-ம் ஆண்டு அம்மா உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் பதவியில் அமர முடியாமல் போனபோது அம்மாவிடமும், சசிகலாவிடமும் கேட்டு நான் முதல்- அமைச்சராகி இருக்கலாம். 2017, பிப்ரவரி 14 அன்று நான் நினைத்திருந்தால் சசிகலாவிடம் சொல்லி முதல்- அமைச்சராகி இருக்கலாம்.
இப்பொழுதும் நான் குறுக்கு வழியில் வர விரும்பவில்லை. இந்த துரோக ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி, அம்மாவின் ஆட்சி என்று பொய்களை சொல்லிக் கொண்டு, அம்மாவின் பாதையிலிருந்து விலகி மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு பச்சைக்கொடி காட்டுபவர்கள், தாங்களும், தங்கள் குடும்பமும் வாழ்ந்தால் போதும், சம்பந்தி குடும்பம் வாழ்ந்தால் போதும் என்று இருப்பவர்கள் ஆட்சியை விட்டு போக வேண்டும்.
இந்தியாவில் அடுத்த ஆட்சி யார் அமைப்பதாக இருந்தாலும், யாருக்கும் அறுதிப்பெரும்பான்மை இருக்காது. எந்த ஆட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டில் இருந்து மக்கள் ஆதரவோடு, 40 பாராளுமன்றத் தொகுதிகளில் நிச்சயம் 37 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம்.
அதில் எங்களோடு கூட்டணி எல்லாம் வரும். எங்களோடு நிறைய பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எங்களோடு ஒத்தக் கருத்துடையவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையை ஏற்று வருபவர்களோடு கூட்டணி வைப்போம்.
37 பாராளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம். அடுத்த பிரதமரை தமிழக மக்கள்தான் தீர்மானிப்பார்கள். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தான் முன்னின்று செய்யும்.
தி.மு.க.வோடும், பா.ஜ.க. வோடும் கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #EdappadiPalaniswami