என் மலர்
செய்திகள்
மாநகராட்சி-நகராட்சி முன்பு சொத்துவரி உயர்வை கண்டித்து 27-ந்தேதி ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்
சென்னை:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் ஐம்பது சதவீதம் முதல் நூறு சதவீதம் வரை சொத்து வரியை திடீரென்று உயர்த்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு மக்களை பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. ஊழலில் ஊறித்திளைக்கும் அ.தி.மு.க அரசு உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை நடத்தாமல் இருப்பதால் மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ.3,500 கோடிக்கும் மேற்பட்ட நிதி இன்னமும் பெறப்படாமல் உள்ளது.
மத்திய அரசின் மானிய உதவி தொகைகளை பெற்று உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தாமல் வாடகை தாரர்கள், வணிகப் பெருமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கும் வண்ணம் சொத்து வரியை உயர்த்தி மக்களை சொல்லொனாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது ஆளும் அ.தி.மு.க. அரசு.
எனவே, கடுமையான இந்த சொத்து வரி உயர்வைக் கண்டித்தும் உடனடியாக திரும்பப் பெறக் கோரியும், அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் முன்பு வருகின்ற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நகரக் கழகச் செயலாளர்கள் ஆகியோர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் ஊராட்சிக் கழக நிர்வாகிகள் மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, மருத்துவ அணி, பொறியாளர் அணி, வழக்கறிஞர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, மகளிர் தொண்டர் அணி, இலக்கிய அணி, மீனவர் அணி, தொண்டர் அணி, நெசவாளர் அணி, ஆதி திராவிடர் நலக்குழு, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை, வர்த்தகர் அணி, சிறுபான்மை நலஉரிமை பிரிவு, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் மற்றும் பொது மக்களும் பெருந்திரளாக பங்கேற்று, இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #MKStalin #Propertytax