search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் தே.மு.தி.க.வுக்கு தொகுதி ஒதுக்கப்படுமா?: மு.க. ஸ்டாலின் பேட்டி
    X

    மக்கள் தே.மு.தி.க.வுக்கு தொகுதி ஒதுக்கப்படுமா?: மு.க. ஸ்டாலின் பேட்டி

    தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
    சென்னை:

    விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியுடன் உடன்பாடு செய்ததால் அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த் திபன், சி.எச்.சேகர் மற்றும் 4 மாவட்ட செயலாளர்கள் தே.மு.தி.க.வுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.

    தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர்களை கட்சியில் இருந்து விஜயகாந்த் நீக்கினார்.

    இதையடுத்து தே.மு.தி.க.வில் உள்ள அதிருப்தி நிர்வாகிகளை சந்திரகுமார் ஒன்று திரட்டி சென்னையில் கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்தினார்.

    அதில் மக்கள் தே.மு.தி.க. என்ற இயக்கத்தை சந்திர குமார் தலைமையிலான அதிருப்தி கோஷ்டி உருவாக்கியது.

    சந்திர குமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

    அப்போது அவர்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தாருங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

    அதை ஏற்று மக்கள் தே.மு.தி.க.வைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் 3 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. முன் வந்தது.

    அதன்படி சந்திரகுமாருக்கு கடந்த தேர்தலில் போட்டியிட்ட ஈரோடு கிழக்கு தொகுதியும் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு மேட்டூர் தொகுதியும், சி.எச். சேகருக்கு கும்மிடிப்பூண்டி தொகுதியும் ஒதுக்க கேட்டுக் கொண்டனர்.

    இது தொடர்பாக மக்கள் தே.மு.தி.க.வினர் மு.க.ஸ்டாலினை இன்று மீண்டும் சந்தித்து பேசினார்கள்.

    அதில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் தி.மு.க. சார்பில் வேணு போட்டியிட முடிவாகி இருப்பதால் மக்கள் தே.மு.தி.க.வுக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    இதே போல் சந்திரகுமார் கேட்கும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் முத்துசாமி போட்டியிட இருப்பதால் அந்த தொகுதி ஒதுக்குவதிலும் சிக்கல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி கேட்டு இன்று முத்துசாமி அண்ணா அறிவாலயம் வந்தார். அவருடன் நீங்களே பேசிக் கொள்ளுங்கள் என்று தி.மு.க. தரப்பில் சந்திரகுமாரிடம் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து முத்துசாமியும், சந்திரகுமாரும் சிறிது நேரம் தனியாக சந்தித்து பேசினார்கள். என்றாலும் உடன்பாடு பற்றி அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    சந்திரகுமார் சந்தித்துப் பேசிய பின்பு மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:–

    கே:– தி.மு.க. வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்.

    ப:– விரைவில் வெளியாகும்.

    கே:– மக்கள் தே.மு.தி.க. தலைவர் சந்திரகுமார் நிர்வாகிகளுடன் இன்று உங்களை சந்தித்து பேசி இருக்கிறாரே? அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட தொகுதிகள் ஒதுக்கப்படுமா?

    ப:– மக்கள் தே.மு.தி.க. நிர்வாகிகள் நேற்று கருணாநிதியை சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். இன்று தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவதை உறுதி செய்து கடிதம் கொடுத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அண்ணா அறிவாலயத்திற்கு வந்த மக்கள் தே.மு. தி.க. தலைவர் சந்திரகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:–

    கேள்வி:– மு.க.ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறீர்களே, முடிவு ஏதும் ஏற்பட்டுள்ளதா?

    பதில்:– தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினோம். மக்கள் தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணியில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் பற்றியும், எங்களது கருத்துக்கள் சிலவற்றையும் எடுத்து கூறினேன்.

    ஒருசில தொகுதிகளில் போட்டியிடுவது குறித்தும் அவரிடம் பேசியுள்ளேன். நிச்சயமாக கலைஞரிடம் பேசி நல்ல முடிவை சொல்வதாக தெரிவித்து உள்ளார். எனவே நிச்சயமாக நல்ல முடிவை தெரிவிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

    கே:– எத்தனை தொகுதி கள் நீங்கள் கேட்டு இருக்கிறீர்கள்?

    ப:– நாங்கள் எத்தனை இடம் என்று குறிப்பிட்டு கேட்கவில்லை. உங்களை நம்பி வந்து இருக்கிறோம். எங்களுக்கு எந்த அளவு செய்தால் சரியாக இருக்கும், நல்லதாக இருக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். எங்களை விட அரசியலில் நல்ல அனுபவம் வாய்ந்தவர் மு.க.ஸ்டாலின். எனவே அவரிடம் நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை கேட்க தயாராக இருக்கிறோம் என்று கூறி இருக்கிறோம்.

    கே:– தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் எப்போது கையெழுத்திடுவீர்கள்?

    ப:– வெகு விரைவில் இருக்கும்.

    கே:– எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்று முடிவு செய்து விட்டீர்களா?

    ப:– ஏற்கனவே நாங்கள் 5 ஆண்டு எம்.எல்.ஏ.க்களாக பணியாற்றி விட்டோம். எனவே அதை எதிர்பார்த்து வரவில்லை. மீண்டும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆசையில் வந்ததாக நினைக்க வேண்டாம்.

    மக்கள் தே.மு.தி.க.வுக்கு ஒரு அங்கீகாரம் வேண்டும். அதுவும் எதற்காக என்றால் தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த ஆட்சி மாற்றத்தை தி.மு.க.வால் மட்டுமே கொடுக்க முடியும். அதற்காக தமிழக மக்களோடு நாங்களும் ஒருங்கிணைந்து செயல்பட எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டு இருக்கிறோம்.

    கே:– உங்களுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் உள்ளதா?

    ப:– மீண்டும் மீண்டும் சொல்கிறேன். நாங்கள் இந்த தொகுதிதான் வேண்டும் என்று கேட்கவில்லை. எங்களுக்கு ஒரு அங்கீகாரம் வேண்டும். அதை கொடுங்கள் என்றுதான் சொல்கிறோம்.

    கே:– விஜயகாந்துக்கு விசுவாசமாக இருப்பதாக கூறுகிறீர்கள். ஆனால் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும்போது நேரிடையாக அவரையே எதிர்த்து போட்டியிடும் சூழ்நிலை உருவாகுமே?

    ப:– கேப்டனை எதிர்த்து போட்டியிடும் எண்ணம் இல்லை. எங்களை அவர் எதிரியாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தே.மு.தி.க. தொண்டர்கள் தி.மு.க. கூட்டணியைதான் விரும்புகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×