என் மலர்
செய்திகள்
X
பிகில் பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி தரக்கோரி அரசுக்கு தயாரிப்பு நிறுவனம் கடிதம்
Byமாலை மலர்23 Oct 2019 6:39 PM IST (Updated: 23 Oct 2019 6:39 PM IST)
நடிகர் விஜயின் பிகில் பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி தரக் கோரி தமிழக அரசுக்கு தயாரிப்பு நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.
‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ வெற்றிக் கூட்டணியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படமாக ‘பிகில்’ உருவாகியுள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25-ந் தேதி ரிலீசாக உள்ளது.
இதனிடையே உதவி இயக்குனர் கே.பி.செல்வா என்பவர், தன்னுடைய கதையை திருடி பிகில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், படத்திற்கு தடை கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கே.பி.செல்வா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. பிகில் கதைக்கு உரிமை கோரிய செல்வாவின் மனுவை கீழமை நீதிமன்றம் நிராகரித்தது செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், பிகில் உட்பட எந்த படத்திற்கும் சிறப்புக் காட்சி திரையிட அனுமதி தரப்படவில்லை என கூறியிருந்தார். மேலும், கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்க மாட்டோம் என உறுதி அளித்தால் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் சார்பில், நடிகர் விஜயின் பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி தரவேண்டும் எனக்கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
Next Story
×
X