என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோடை காலம் தொடங்கும் முன்பே ஈரோட்டில் 100 டிகிரி வெயில் பதிவு: பொதுமக்கள் அவதி

ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரத்தில் பனி பொழிந்தாலும் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது. குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது.
இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஈரோட்டில் கடந்த சில நாட்களாகவே 95 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் இருந்து வந்தது.
எப்போதும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் பிப்ரவரி மாதத்திலேயே மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வருகிறது.
பல்வேறு நகரங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதற்கு ஏற்றார் போல் ஈரோடு மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் மத்தியிலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதுவரை 95 டிகிரி செல்சியஸ் பதிவாகி வந்த நிலையில் நேற்று தமிழகத்தில் முதல்முறையாக கோடை வெயில் தொட ங்கும் முன்பே ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் காரணமாக எப்போது பரபரப்பாக காணப்படும் பன்னீர்செல்வம் பார்க், காளை மாட்டுச்சிலை, ஈரோடு ஜி.ஹெச். ரவுண்டானா, மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு போன்ற பகுதிகளில் மதிய நேரம் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் குளிர்பானங்களை விரும்பி பருகி வருகின்றனர்.
இதேப்போல் மோர், இளநீர் வியாபாரமும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வேலைக்கு செல்லும் இளம்பெண்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கும் வகையில் குடைகளை பிடித்த படியும், முகத்தை துணியால் முடியும் செல்வதை காண முடிகிறது.
கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கியதால் ஈரோடு மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இன்னும் போக போக வெயிலின் தாக்கம் அதிகரிக்கக் கூடும் என அச்சத்தில் உள்ளனர்.