என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டு மனைகளுக்கு ஒப்புதல் வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்: நகராட்சி அதிகாரி அதிரடி கைது
- மொத்தம் ரூ.20 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
- வீட்டிலும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் பதிவு பெற்ற என்ஜினீயராக பாரதிகண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது வாடிக்கையாளருக்கு சொந்தமாக பரமக்குடியில் உள்ள நான்கு வீட்டு மனைகளுக்கு நகராட்சியில் திட்ட ஒப்புதல் பெறுவதற்கு கட்டணமாக ரூ.76 ஆயிரத்து 850-ஐ கடந்த வாரம் செலுத்தி இருந்தார்.
இந்த நிலையில் இதுதொடர்பாக நகராட்சியில் நகரமைப்பு திட்ட அலுவலராக பணிபுரியும் பர்குணன் என்பவரை சந்தித்து பாரதிகண்ணன் விவரம் கேட்டார். அப்போது ஒரு வீட்டு மனைக்கு ரூ.5 ஆயிரம் வீதம் நான்கு வீட்டுமனைகளுக்கு மொத்தம் ரூ.20 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதற்கு என்ஜினீயர் பாரதிகண்ணன், நகராட்சிக்கு கட்ட வேண்டிய அரசு பணத்தை முழுவதும் செலுத்தி உள்ளேன். ஆகையால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஆனாலும் நகராட்சி அதிகாரி பர்குணன் லஞ்சம் கொடுத்தால் மட்டும் அடுத்த கட்ட பணிகள் நடக்கும் என்றும், திட்ட ஒப்புதல் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வேறு வழியின்றி தவித்த பாரதி கண்ணன் லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டு விரைவில் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதி அளித்து சென்றார்.
இருந்தபோதிலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத பாரதி கண்ணன், இது குறித்து ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் செய்தார்.
இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி, இன்று காலை 'கூகுள்பே' மூலமாக நகராட்சி அதிகாரி பர்குணன் செல்போன் எண்ணிற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சப் பணத்தை அனுப்பினார்.
அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் லஞ்சம் பெற்ற பர்குணனை செல்போனுடன் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் இதுபோன்று வேறு யாரிடமாவது ஆன் லைன் பரிவர்த்தனை மூலம் லஞ்சம் பெற்றுள்ளாரா? என்று விசாரணையை தொடங்கியுள்ள போலீசார் அவரது வீட்டிலும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
பரமக்குடி நகராட்சியில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.