search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீன்பிடி தடைகாலம் நாளை நள்ளிரவுடன் முடிவடைகிறது: ஆயத்த பணிகளில் மீனவர்கள் தீவிரம்
    X

    மீன்பிடி தடைகாலம் நாளை நள்ளிரவுடன் முடிவடைகிறது: ஆயத்த பணிகளில் மீனவர்கள் தீவிரம்

    45 நாட்கள் நீடித்த மீன்பிடி தடைகாலம் நாளை நள்ளிரவுடன் முடிவடைகிறது. மீன்பிடிக்க செல்வதற்கான ஆயத்த பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    சென்னை:

    மீன்களின் இனப்பெருக்கத்திற்காக வங்கக்கடல் பகுதியில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 45 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி முதல் வங்கக்கடல் பகுதியில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டது.

    அன்றைய தினம் முதல் மீனவர்கள் யாரும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நாட்டுப்படகு மூலம் குறிப்பிட்ட தூரத்துக்கு சென்று மீன்பிடித்து வந்தனர். 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவுடன் முடிவடைகிறது.

    மீன்பிடி தடைகாலம் நாளையுடன் முடிவடைய இருப்பதால், ஆழ்கடலில் சென்று மீன்பிடிப்பதற்கான அனைத்து ஆயத்த பணிகளையும் மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    பொதுவாக மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்கள் தங்களுடைய மீன்பிடி படகுகளை பழுது பார்ப்பது வழக்கம். அதன்படி, மீன்பிடி தடைகாலம் தொடங்கியதில் இருந்து மீனவர்கள் தங்களுடைய படகுகளில் ஏற்பட்டிருந்த சேதாரங்கள், என்ஜின் பழுதுகள் ஆகியவற்றை சரிசெய்தனர்.

    மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல இருக்கும் காசிமேடு துறைமுக மீனவர்கள் நேற்று ஆயத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். வலைகளை தயார்படுத்தியதுடன், மீன்களை பிடித்து அதை பதப்படுத்தி வைப்பதற்காக தேவைப்படும் ஐஸ் கட்டிகள் உள்பட அனைத்து பொருட்களையும் படகுகளில் ஏற்றினார்கள்.

    இதுகுறித்து அகில இந்திய மீனவர்கள் சங்க செய்தி தொடர்பாளர் நாஞ்சில் ரவி கூறியதாவது:-

    திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் தொடங்கி, கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கிராமம் வரையிலான மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த மீன்பிடி தடைகாலம் 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது.

    நள்ளிரவு 12 மணி முதல் மீனவர்கள் அனைவரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தொடங்குவார்கள். அவர்களுக்கு தேவையான மீன்பிடி உபகரணங்களை அவரவருடைய படகுகளில் ஏற்றும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மீன்பிடி வலைகள், என்ஜினுக்கு தேவையான ஆயில், படகு பயணிக்க தேவையான டீசல், குடிக்க மினரல் தண்ணீர் கேன், சமையல் கியாஸ் சிலிண்டர், மீன்பிடி உபகரணங்கள், உணவு பொருட்கள், ஐஸ் கட்டிகள் ஆகியவற்றை அவரவருக்கு தேவையான அளவுக்கு படகுகளில் ஏற்றி வருகிறார்கள்.

    காசிமேடு துறைமுகத்தில் மட்டும் 1,300 விசைப்படகுகள் இந்த மீன்பிடி தடைகாலத்தில் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த படகுகள் எல்லாம் நாளை நள்ளிரவு முதல் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு செல்ல தொடங்கும்.

    45 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அதிக ஆவலோடு தொழிலுக்கு செல்ல இருக்கிறார்கள்.

    மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும் மீனவர்கள் கரைக்கு திரும்பியதும், அவர்கள் கொண்டு வரும் மீன்களை வாங்குவதற்கு கேரளா, கோவா, கர்நாடகா, மராட்டியம், மும்பை ஆகிய பகுதிகளில் இருந்து மீன் வியாபாரிகள் பலர் காசிமேடு துறைமுகத்துக்கு வந்து முகாமிட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×