search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை அயனாவரத்தில் போலீஸ் வேன் மோதி விபத்து: மேலும் ஒரு மாணவன் பலி
    X

    சென்னை அயனாவரத்தில் போலீஸ் வேன் மோதி விபத்து: மேலும் ஒரு மாணவன் பலி

    சென்னை அயனாவரத்தில் போலீஸ் வேன் மோதி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் நடத்திய சாலைமறியலை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
    சென்னை :

    சென்னை அயனாவரத்தில் போலீஸ் வேன் மோதி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் நடத்திய சாலைமறியலை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

    சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 16). இவரது நண்பர் சாலமன் (17). ஏகாங்கிபுரம் 2-வது தெருவில் வசிக்கிறார். இருவரும் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, 11-ம் வகுப்பு செல்வதற்காக காத்திருந்தனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஒன்றாக விடுமுறை தினத்தை கழித்து வந்தனர்.

    நேற்று அயனாவரம் ரெயில்வே மைதானம் அருகே கால்பந்து விளையாட்டு நடந்தது. இந்த போட்டியை வேடிக்கை பார்ப்பதற்காக ராம்குமாரும், சாலமனும் ஸ்கூட்டரில் புறப்பட்டனர். ஸ்கூட்டரை ராம்குமார் ஓட்டினார்.

    மாந்தோப்பு ரெயில்வே மைதானத்துக்கு அருகில் சென்றபோது, அந்த வழியாக வந்த போலீஸ் வேன் ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது. இதில் ராம்குமார், சாலமன் இருவரும் தூக்கிவீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்து ராம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாலமன் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். இந்த விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆவேசத்துடன் போலீஸ் வேனை நோக்கி ஓடி வந்தனர்.

    இதையடுத்து வேனை ஓட்டிவந்த போலீஸ்காரர் ஏழுமலை மற்றும் வேனில் அமர்ந்திருந்த போலீசாரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து போலீஸ் வேனை சரமாரியாக பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். இதற்கிடையில் தனது மகன் இறந்த தகவலறிந்து அவரது தாய் கவிதா மற்றும் உறவினர்கள், பகுதி மக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர்.

    விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரர் ஏழுமலையை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று திடீரென்று கொன்னூர் நெடுஞ்சாலை - ஆண்டர்சன் சாலை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக ஏராளமான பொதுமக்களும் அங்கு திரண்டனர். பதற்றமான சூழ்நிலை உருவானதால் போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.

    சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிடவில்லை. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கியது. மாநகர பஸ்கள் உள்பட வாகனங்கள் நீண்ட வரிசையில் சாலையில் அணிவகுத்து நின்றன.

    அப்போது திடீரென்று போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்கியதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரியார் நகர்-கோயம்பேடு பஸ் உள்பட 3 மாநகர பஸ்களின் கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியது.

    நிலைமை விபரீதமானதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். போலீசார் நடத்திய தடியடியால் போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அருகில் உள்ள கடைகள், ஓட்டல்கள், வங்கி ஏ.டி.எம். மையங்களில் ஓடி ஒளிந்தனர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது.

    போலீஸ் தடியடியில் கூட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த ஒரு வயதான பெண்மணி உள்பட 3 பேருக்கு மண்டை உடைந்தது. அவர்கள் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். தடியடியால் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றதும் இயல்பு நிலை திரும்பியது. இதைத்தொடர்ந்து அங்கு நிலைமை சீரானது.

    இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த ராம்குமாரின் தாய் கவிதா நிருபர்களிடம் கண்ணீருடன் கூறியதாவது:-

    காலையில்தான் என் மகன் சாப்பிட்டு விட்டு வெளியே சென்றான். ஒருமுறை செல்போனிலும் பேசினான். அவன் சாப்பிட வருவான் என்று அவனுக்கு பிடித்த உணவை செய்து கொண்டிருந்தேன். இந்த நிலையில் போலீஸ் வேன் மோதி என் மகன் உயிரிழந்து விட்டான் என்று செய்தி கேட்டு துடிதுடித்து போனேன். விபத்துக்கு காரணமான போலீசாரை கைதுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘போலீஸ் வேனை ஸ்கூட்டர் மீது மோதி மாணவன் உயிரிழப்புக்கு காரணமான டிரைவர் ஏழுமலை மீது நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவன் ராம்குமார் உயிரிழந்ததற்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்படும்’’ என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையில் மேல் சிகிச்சைக்காக மாணவன் சாலமன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று இரவு உயிரிழந்தார்.

    இதனைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயனாவரம் பகுதியில் போலீசார் அதிகளவில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர். 
    Next Story
    ×