search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 3 இடங்களில் அம்மா வாரச்சந்தை: மாநகராட்சி சார்பில் விரைவில் திறப்பு
    X

    சென்னையில் 3 இடங்களில் அம்மா வாரச்சந்தை: மாநகராட்சி சார்பில் விரைவில் திறப்பு

    சென்னையில் 3 இடங்களில் அம்மா வாரச்சந்தையை மாநகராட்சி சார்பில் விரைவில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் வசதிக்காக அம்மா வாரச்சந்தை திறக்கப்படும் என்று கடந்த 2014-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

    ஒரே இடத்தில் பொதுமக்கள் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை குறைந்த விலையில் வாங்கி செல்லக்கூடிய வகையில் இந்த வாரச்சந்தை அமையும் என்று தெரிவிக்கப்பட்டது.

    ‘‘200 கடைகள் இடம் பெறும் அம்மா வாரச்சந்தையை அமைப்பதற்கான திட்டப் பணிகளை மாநகராட்சி ஆய்வு செய்து வந்தது. சென்னையில் அம்மா வாரச்சந்தை எந்த இடத்தில் அமைப்பது என்பது குறித்து இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வந்தது.

    இந்த பணி சட்டசபை தேர்தலால் தொய்வடைந்து இருந்தது. தற்போது வாரச்சந்தை விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது.

    மாநகராட்சி அதிகாரிகள், அரசின் பிறதுறை அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டு இறுதியாக 3 இடங்களில் அம்மா வாரச்சந்தை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மிண்ட் மேம்பாலம் அருகிலும், அரும்பாக்கத்தில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு அருகிலும், கோட்டூர்புரம் வரசித்தி விநாயகர் கோவில் அருகிலும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அரசு, அரசு உதவி பெறும் நிறுவனங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள சுயஉதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை இங்கு விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சி தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெறுவதால் விரைவாக அம்மா வாரச்சந்தையை திறக்க மேயர் சைதை துரைசாமி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அம்மா வாரச்சந்தை அமைப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடைப்பெற்று வருகின்றன.

    இடைத்தரகர்கள் இல்லாமல் பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க இந்த வாரச்சந்தை உதவியாக அமையும் .

    சிறு வியாபாரிகள் உற்பத்தியாளர்கள் தங்களது பொருட்களை பொதுமக்கள் கவரும் வகையில் இதில் இடம் பெறச் செய்ய வேண்டும். இதற்காக 10-க்கும் மேற்பட்ட அரசுதுறை அதிகாரிகளுடன் முறையாக அணுகி அவர்களின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது என்றனர்.

    அம்மா வாரச்சந்தையை அடுத்து மற்றொரு திட்டமான அம்மா திரையரங்கம் தியாகராயநகர் மற்றும் முகப்பேர் உள்ளிட்ட சில இடங்களில் அமைக்க இடம் தேர்வு செய்யப்படுகிறது.
    Next Story
    ×