search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை முதல்-அமைச்சராக நாராயணசாமி பதவி ஏற்றார்: 5 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்
    X

    புதுவை முதல்-அமைச்சராக நாராயணசாமி பதவி ஏற்றார்: 5 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்

    புதுச்சேரி முதல்- அமைச்சராக நாராயணசாமி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் கிரண்பேடி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவையில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வந்தது.

    கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 30 இடங்களில் 17 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடித்தது.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டார்.

    அதன்பின்னர் அமைச்சர்களாக நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடிகிருஷ்ணாராவ், ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று மதியம் புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் நடந்தது. இதற்காக அங்கு காந்தி சிலைக்கும், நேரு சிலைக்கும் மத்தியில் உள்ள மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

    பகல் 11 மணி அளவிலேயே ஏராளமான தொண்டர்கள் அங்கு குவிந்தனர். 11.30 மணி அளவில் வி.ஐ.பி.க்கள் வரத்தொடங்கினார்கள்.

    11.50 மணி அளவில் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளவர்கள் விழா பந்தலுக்கு வந்தனர். அவர்களுக்கு மேடையில் இருக்கை போடப்பட்டிருந்தது. அனைவரும் அங்கு சென்று அமர்ந்தனர். 11.55 மணிக்கு கவர்னர் கிரண்பேடி விழா மேடைக்கு வந்தார்.

    சரியாக 12 மணிக்கு பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. முதலாவதாக நாராயணசாமி முதல்- அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் கிரண்பேடி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். பின்னர் கவர்னர் கிரண்பேடி முதல்-மந்திரி நாராயணசாமிக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

    அதைத்தொடர்ந்து அமைச்சர்களாக நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடிகிருஷ்ணாராவ், ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    நமச்சிவாயம் பதவி ஏற்க வந்தபோது பலத்த கரகோஷம் எழுந்தது. மல்லாடி கிருஷ்ணா ராவ் தெலுங்கில் பதவி பிரமாணமும், உறுதி மொழியும் எடுத்துக்கொண்டார். அமைச்சர்கள் பதவி ஏற்று, கையெழுத்திட்டதும் கிரண்பேடி அவர்களிடம் சிறிது நேரம் பேசி வாழ்த்து தெரிவித்தார்.

    உறுதிமொழி ஏற்பு விழா முடிந்ததும் கவர்னர் கிரண்பேடி முதல்-மந்திரி நாராயணசாமிக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். அதுபோல 5 மந்திரிகளுக்கும் அவர் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்தார்.

    பதிலுக்கு அவருக்கு மந்திரிகள் நன்றி தெரிவித்தனர். இதையடுத்து 15 நிமிடங்களில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நிறைவு பெற்றது.

    பதவி ஏற்பு விழா முடிந்ததும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் 5 அமைச்சர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    பதவி ஏற்பு விழாவில் முன்னாள் முதல்- அமைச்சரும், என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி மற்றும் அவரது கட்சியினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் விழாவுக்கு வரவில்லை.

    பதவி ஏற்பு விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சட்டசபைக்கு வந்தனர். அங்கு முதல்-அமைச்சர் அறைக்கு சென்ற நாராயணசாமி தனது இருக்கையில் அமர்ந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பல்வேறு கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.

    அதன் பின்னர் மற்ற அமைச்சர்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு அறைக்கும் நாராயணசாமி நேரடியாக சென்று அமைச்சர்களை அவரவர் இருக்கையில் அமர செய்தார். அமைச்சர்களும் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.
    Next Story
    ×