search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாம்பலம் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் சிக்கி பெண் குழந்தை பலி
    X

    மாம்பலம் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் சிக்கி பெண் குழந்தை பலி

    மாம்பலம் ரெயில் நிலையத்தில் இறங்கிய போது பிளாட்பாரத்திற்கும் ரெயிலுக்கும் இடையில் சிக்கி பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
    சென்னை:

    மன்னார்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு மண்ணை எக்ஸ்பிரஸ் நேற்று இரவு புறப்பட்டு வந்தது. இந்த ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு பிறகு மாம்பலம் ரெயில் நிலையத்தில் நிற்க கூடியது.

    மாம்பலம் நிலையத்தில் அதிகாலை ரெயில் நின்றபோது அந்த விபரீத சம்பவம் நடந்து விட்டது.

    மண்ணை எக்ஸ்பிரசில் முன்பதிவு பெட்டியில் சுந்தரவடிவேல் (40) தனது மனைவி லட்சுமி (32), ஒன்றரை வயது பெண் குழந்தை ஏகஸ்தியுடன் பயணம் செய்தார். மாம்பலம் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்ற போது பெட்டி படுக்கையுடன் சுந்தரவடிவேல் முதலில் இறங்கினார்.

    குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு லட்சுமி ரெயிலில் இருந்து இறங்கும் போது ரெயில் புறப்பட்டது. இதனால் நிலை தடுமாறிய அவர் குழந்தையுடன் ரெயில் பெட்டிக்கும்-பிளாட்பாரத்திற்கும் உள்ள இடைவெளியில் கீழே விழுந்தார்.

    கண் இமைக்கும் நேரத்தில் ரெயிலில் குழந்தையுடன் லட்சுமி சிக்கி கொண்டு கதறினார். இதனை பிளாட்பாரத்தில் நின்ற கணவரும் மற்றவர்களும் பார்த்து கூச்சல் போட்டனர்.

    உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது. தண்டவாளத்தில் லட்சுமியும் குழந்தையும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அங்கு திரண்டு இருந்த பயணிகளும் போலீசாரும் கீழே இறங்கி பார்த்தனர்.

    குழந்தை ஏகஸ்தி பரிதாபமாக இறந்து கிடந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். லட்சுமியின் ஒரு கால் முறிந்து காணப்பட்டது. மற்றொரு காலும் பலத்த காயம் அடைந்து இருந்தது.

    உயிருக்கு போராடி கொண்டிருந்த லட்சுமியை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். தன் கண் முன்னே ரெயிலில் இருந்து கீழே விழுந்து குழந்தை பலியானதையும் மனைவி கால் முறிந்து கிடந்ததையும் பார்த்து சுந்தரவடிவேலு கதறி அழுதார்.

    இதுகுறித்து எழும்பூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×