என் மலர்
செய்திகள்
நெல்லித்தோப்பு தொகுதிக்கு நாளை வாக்கு எண்ணிக்கை: காலை 10 மணிக்கு முடிவு தெரியும்
புதுச்சேரி:
புதுவையில் கடந்த மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 17 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.
எம்.எல்.ஏ. வாக தேர்ந்தெடுக்கப்படாத நாராயணசாமி புதுவை மாநில முதல்-அமைச்சராக பதவியேற்றார். இதனால் அவர் 6 மாதத்தில் எம்எல்ஏவாக வேண்டும். இதற்கு வசதியாக நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. வான ஜான்குமார் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து நெல்லித் தோப்பு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் புதுவை முதல்அமைச்சர் நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் உள்ளிட்ட 8 பேர் போட்டியிட்டனர்.
கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 85.76 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குப் பதிவுக்கு பின்னர் பலத்த பாதுகாப்புடன் பாரதி தாசன் மகளிர் கல்லூரிக்கு மின்னணு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு மூன்றடுக்கு பாதுகாப்புடன் மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. 3 தபால் ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளது.
இதனை தொடர்ந்து மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. மொத்தம் 9 டேபிள்கள் போடப்பட்டு மின்னணு எந்திரங்கள் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் பிரிக்கப் பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 3 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
மொத்தம் உள்ள 26 மின்னணு எந்திரங்களும் 3 சுற்றுகளில் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை காலை 9 மணிக்கு தெரியும். அதையடுத்து 10 மணிக்குள் வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கையையொட்டி பாரதிதாசன் மகளிர் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.