search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு ஆஸ்பத்திரியில் அம்மா குடிநீர் திட்டம்: விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்
    X

    அரசு ஆஸ்பத்திரியில் அம்மா குடிநீர் திட்டம்: விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

    சென்னை அரசு பொது மருத்துவமனையில் அம்மா குடிநீர் மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
    சென்னை:

    சென்னை அரசு பொது மருத்துவமனையில் அம்மா குடிநீர் மையம் இன்று திறக்கப்பட்டது.

    ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையாக திகழும் இந்த மருத்துவமனைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள்.

    பொது மக்கள் வசதிக்காக ஆஸ்பத்திரி வளாகத்தில் இத்திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதனையடுத்து அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டனர்.

    முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டாக்டர்கள் போராட்டத்தால் நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று கேட்டுக்கொண்டதை ஏற்று டாக்டர்கள் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். பட்ட மேற்படிப்பு இடஒதுக்கீடு பிரச்சனையிலும், நீட் தேர்வு விவகாரத்திலும் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். அது வரையில் நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லாமல் போராட்டம் நடத்துவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

    விழாவில் பங்கேற்ற போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:-

    அம்மா குடிநீர் திட்டம் முதன் முதலாக அரசு ஆஸ்பத்திரியில் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 306 இடங்களில் அம்மா குடிநீர் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒரு லட்சத்து 75 ஆயிரம் லிட்டர் குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது.

    அரசு பஸ்களில் தினமும் சுமார் 2 கோடி பேர் பயணம் செய்கிறார்கள். மக்கள் சேவையில் அரசு போக்குவரத்து கழகம், சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. லாபகரமாக இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×